Published:Updated:

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை... என்னவெல்லாம் வேண்டும் தெரியுமா? - இதைப் படியுங்கள்!

ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் ( Kamran Jebreili )

நிதி மற்றும் சுற்றுலா மையமாக விளங்கும் வளைகுடா நாடுகளில், அந்நாட்டு மக்கள் குறைவாகவும், 90%-க்கும் அதிகமானவர்கள் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள்.

`அயல்நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், திறமை வாய்ந்தவர்களுக்கு இனி குடியுரிமை வழங்கப்படும்’ என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதை அறிவித்தார். இதன் மூலம், வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டினருக்குக் குடியுரிமை வழங்கவிருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம்.

பொதுவாக, அமீரக ஆணின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டுவந்தது. அமீரகப் பெண் வெளிநாட்டினரை மணந்தால்கூட, அவர்களின் பிள்ளைகள் விண்ணப்பித்துத்தான் குடியுரிமை பெற முடியும். இதற்கு ஆண்டுகளும் ஆகலாம். இந்தநிலையில், தன் துறைகளில் சிறந்து விளங்கும் அயல்நாட்டினருக்குக் குடியுரிமை வழங்கும் அமீரகத்தின் முடிவு முக்கியமானது.

யாருக்கெல்லாம் முன்னுரிமை?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி, குடியுரிமை பெறத் தகுதியுடையோருக்கான பட்டியலில் முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், துறைசார் வல்லுநர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் மூலம் புதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பயனடைவார்களா என்பது தெளிவாகவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம்

இது குறித்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளரமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவிக்கையில், ``குடியுரிமை பெறுவோரின் குடும்பத்தினரும் இரட்டைக் குடியுரிமை கொண்டிருக்கலாம். எங்களின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுப்பவர்களை ஈர்ப்பதே எங்களின் நோக்கம்” என்றார். மேலும், ``விண்ணப்ப நடைமுறைகள் ஏதுமில்லை’’ எனவும், ``ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை, நீதிமன்றங்கள் மற்றும் நிர்வாகக்குழு பரிந்துரைக்கும் தகுதியுடைய நபர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

அயல்நாடுகளைச் சேர்ந்த பலர், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், எண்ணெய் விலையின் வீழ்ச்சி காரணமாகவும் அமீரகத்தைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் கார்டு!

``நிதி மற்றும் சுற்றுலா மையமாக விளங்கும் வளைகுடா நாடுகளில், அந்நாட்டு மக்கள் குறைவாகவும், 90%-க்கும் அதிகமானவர்கள் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள். பெரும்பாலும் தெற்காசியாவிலிருந்து வரும் அவர்கள் இரண்டு மூன்று தலைமுறைகளாகக் குடியிருக்கின்றனர். வெளிநாட்டுப் பணியாளர்கள், புதுப்பிக்கத்தக்க விசாக்களைப் பல ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் வைத்துக்கொள்கின்றனர். குறைந்த வருவாய்கொண்ட தொழிலாளர்கள் கட்டுமானத்துறையிலும், சில்லறை மற்றும் பயணத்துறைகளிலும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.

பொருளாதார முன்னேற்றத்தில் அவர்களின் பங்கும் கணிசமாக இருக்கிறது. அவர்கள் பல ஆண்டுகள் வசித்தாலும், குடியுரிமை வாங்க இயலாமலும், சமூகநலச் சலுகைகளை அனுபவிக்க முடியாமலும் இருந்துவருகின்றனர். குறைந்த வருவாய் உடையவர்களை கவனிக்காத அமீரகம், முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்களுக்கு நீண்ட காலம் தங்கும் உரிமையைத் தந்திருக்கிறது. 2019-ல் ஷேக் முகமது கொண்டுவந்த `கோல்டன் கார்டு’ விசா திட்டத்தின்படி, மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகளுக்கான வசிப்பிட உரிமையை வழங்கியது. கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் வரையறைகள் மேலும் விரிவுப்படுத்தப்பட்டன” என்று அரபு விவகாரங்களைத் தொடர்ந்து கவனித்துவருபவர்கள் கூறுகிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம்
Kamran Jebreili

ஐக்கிய அரபு அமீரகம் குறைந்த வரியுடைய ஆட்சியாலும், பெரிய பெரிய திட்டங்களாலும், சுற்றுலாத் தலங்களாலும் வளர்ந்துவருகிறது. `வாம் செய்தி நிறுவனம்’ வெளியிட்டிருக்கும் பட்டியலின்படி, புதிய குடியுரிமைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோர் அமீரகத்தில் சொத்துகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களாக, முக்கியத்துவம் வாய்ந்த பிரிவில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் மருத்துவர்களாக, அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட காப்புரிமையைப் பெற்றிருக்கும் கண்டுபிடிப்பாளர்களாக இருக்க வேண்டும்.

- தமிழ்பரதன்

அடுத்த கட்டுரைக்கு