Published:Updated:

'அரசியல், பொருளாதாரச் சிக்கல்' - திணறும் பிரிட்டன் அரசு!

பிரிட்டன்

ஒருபுறம் அரசியல் மற்றொருபுறம் பொருளாதாரச் சிக்கல் என பிரிட்டன் அரசு திணறிவருகிறது. ஒருகாலத்தில் உலகின் பல்வேறு நாடுகளைத் தன் ஆளுகையின்கீழ் வைத்திருந்த பிரிட்டனுக்கா இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என சர்வதேச அரசியல் நோக்கர்கள் ஆச்சர்யக் கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.

'அரசியல், பொருளாதாரச் சிக்கல்' - திணறும் பிரிட்டன் அரசு!

ஒருபுறம் அரசியல் மற்றொருபுறம் பொருளாதாரச் சிக்கல் என பிரிட்டன் அரசு திணறிவருகிறது. ஒருகாலத்தில் உலகின் பல்வேறு நாடுகளைத் தன் ஆளுகையின்கீழ் வைத்திருந்த பிரிட்டனுக்கா இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என சர்வதேச அரசியல் நோக்கர்கள் ஆச்சர்யக் கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.

Published:Updated:
பிரிட்டன்

பிரிட்டன் பிரதமராக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் போரிஸ் ஜான்சன் இருந்துவந்தார். ஆரம்பகாலத்தில், முந்தைய பிரிட்டன் பிரதமர்களான கேவிட் கேமரூன், தேசரா மே ஆகியோரால் செய்ய முடியாத சில விஷயங்களை, போரிஸ் ஜான்சன் செய்துவிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர். இதனால் தொடக்கத்தில் அவருக்கு மக்கள் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

நாளடைவில் அவரின் ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக, கொரோனா உச்சத்திலிருந்த சமயத்தில் பிரிட்டனில் 'லாக்டெளன்' அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது போரிஸ் ஜான்சன் தனது ஊழியர்களுடன் மது பார்ட்டியில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. மேலும், தொழிலதிபர்களைக் காக்க விலைவாசி உயர்வை அவர் கட்டுப்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது.

இது போன்ற காரணங்களால் அமைச்சர்களும் அதிகாரிகளும் ராஜினாமா செய்தனர். மேலும், போரிஸ் ஜான்சனும் பதவி விலக வேண்டும் என அந்த நாட்டு மக்கள் பலரும் வலியுறுத்திவந்தனர். இது போன்ற அரசியல் நெருக்கடி காரணமாக போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையில் வெளியான பொருளாதார வளர்ச்சி கணக்கெடுப்பு விவாதத்தை அதிகரிக்கச்செய்தது.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்
Manish Swarup

அதாவது, `சர்வதேச நிதியம்’ எனப்படும் ஐஎம்எஃப் அமைப்பு, வருடாந்தர அடிப்படையில் டாலர் மதிப்பு அளவில் எடுத்த பொருளாதார வளர்ச்சிக் கணக்கில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனியைத் தொடர்ந்து இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. இதில் பிரிட்டனின் பொருளாதாரம் 814 பில்லியின் டாலராக இருந்த நிலையில், 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

பொருளாதாரம் வீழ்ச்சி
பொருளாதாரம் வீழ்ச்சி

போரிஸ் ஜான்சன் பதவி விலகலைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலின் முடிவில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கைத் தோற்கடித்து லிஸ் ட்ரஸ் பிரதமராகப் பதவியேற்றார். அதையடுத்து பிரதமராக லிஸ் ட்ரஸ் எடுத்த சில முடிவுகளால், இங்கிலாந்தின் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
ட்விட்டர்

குறிப்பாக பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரி ரத்துசெய்த விவகாரத்தில் கடுமையான விமர்சனம் எழுந்தது. இதனால், டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு குறைந்துவருகிறது. பங்குச் சந்தை மதிப்புகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதையடுத்து மக்களிடம் அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில், 45 நாள்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்திருக்கும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இது குறித்து லிஸ் ட்ரஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக நான் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து மன்னர் சார்லஸிடம் பேசியுள்ளேன். அடுத்த வாரத்துக்குள் கட்சித் தலைமைத் தேர்தல் நடத்தப்படும். இது நமது நிதித் திட்டங்களை வழங்குவதற்கும், நமது நாட்டின் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உறுதி செய்யும்” என்றார்.

லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ்

இதையடுத்து வரும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இதில் ஏற்கெனவே போட்டியிட்ட ரிஷி சுனக்குக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியானது. இதற்கிடையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி-யாக இருக்கும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வீட்டில், அவரின் ஆதரவாளர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர்.

மேலும் அவர்கள், 'அடுத்த வாரம் நடக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் கூட்டத்தில் போரிஸ் ஜான்சனை மீண்டும் பிரதமராகக் கொண்டுவருவதற்கான தீர்மானம் கொண்டுவரப்படும்' என்று கூறினர். ஆனால் போரிஸ் ஜான்சன் இது தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்
போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்

இவ்வாறு ஒருபுறம் அரசியல், மற்றொருபுறம் பொருளாதாரச் சிக்கல் என பிரிட்டன் அரசு திணறிவருகிறது. இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்துவருகின்றன. மேலும், உலகின் பல்வேறு நாடுகளைத் தன் ஆளுகையின் கீழ் வைத்திருந்த பிரிட்டனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறதா என சர்வதேச அரசியல் நோக்கர்கள் ஆச்சர்யக் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.