Published:Updated:

`கலவரம்; தீ வைப்பு; 100 பேர் உயிரிழப்பு?' - உச்சத்தை எட்டிய இரான் போராட்டம்

இரானில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தில் இதுவரை 100 பேர் வரை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இரான் போராட்டம்
இரான் போராட்டம் ( AP )

உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் நாடுகளில் இரானும் ஒன்று. அங்கு அதிகப்படியான பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுவதே விலை குறைவுக்குக் காரணம். மேலும், பெட்ரோல் ஏற்றுமதியை நம்பித்தான் அந்நாட்டின் மொத்த பொருளாதாரமும் உள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.

இரான் போராட்டம்
இரான் போராட்டம்
AP

அதனுடன், இரான் மீது பல பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. அமெரிக்காவின் மிரட்டலுக்குச் சற்றும் அஞ்சாத இரான், தன் நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தது. இரானுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடமிருந்து பெட்ரோல் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் இனி பெட்ரோல் வாங்கக் கூடாது என அறிவித்ததால் இரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதைச் சரிசெய்ய வேறு வழியில்லாமல், அந்நாட்டில் பெட்ரோலின் மீது இருந்த மானியத்தை இரான் அதிபர் ஹசன் ரூஹானி நீக்கினார். இதனால் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது. அரசின் புதிய உத்தரவின்படி, இனி ஒரு மாதத்துக்கு 60 லிட்டர் பெட்ரோல் மட்டுமே 15,000 ரியால் என்ற விலையில் கிடைக்கும். அதற்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலும் 30,000 ரியால்கள் (இந்திய மதிப்பில் சுமார் 51 ரூபாய்) விற்கப்பட்டு வருகிறது.

இரான் போராட்டம்
இரான் போராட்டம்
AP

``75% இரானியர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். அதனால் மானியம் நீக்கி விற்கப்படும் பேட்ரோலிலிருந்து கிடைக்கும் வருமானம் ஏழை மக்களின் நலனுக்காகச் செலவு செய்யப்படும்” என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்தார். இருந்தும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த ஐந்து நாள்களாக இரானின் பல பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.

Vikatan

இந்தப் போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, பல நூறு போராட்டக்காரர்கள் மற்றும் காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாகக், கூறப்படுகிறது. மேலும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 1,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டம் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரான் போராட்டம்
இரான் போராட்டம்
AP

இரான் போராட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 100 பேர் வரை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர். நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள், வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் பதற்றத்தின் உச்சத்தில் உள்ளது இரான்.