Published:Updated:

காபூல் பல்கலைக்கழகத்தை உறையவைத்த தீவிரவாதத் தாக்குதல்! - 22 பேர் பலி; 22 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தாக்குதல் ( Rahmat Gul )

ஆப்கானிஸ்தான் நீதிபதிகள், விசாரணை அதிகாரிகளைக் குறிவைத்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூல் (Kabul) பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஈரான் தூதர் கலந்துகொண்டார். அப்போது, துப்பாக்கி ஏந்திய மூன்று நபர்கள் பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அரங்கத்துக்குள் நுழைந்தனர். பின்னர், அவர்கள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளில், சட்டம் மற்றும் பத்திரிகைத்துறைக்கான பள்ளிகள் அமைந்திருக்கும் வளாகத்தின் ஒரு பகுதியிலிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் தப்பித்து ஓடிவருகிறார்கள். அதேநேரத்தில், கைக்குண்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளின் சத்தங்களையும் கேட்க முடிகிறது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகள், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வளாகத்தைச் சூழ்ந்து, அங்கிருந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
Rahmat Gul

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. கடந்த சில வாரங்களில், காபூலில் கல்வி நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது.

காபூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்து தலிபான்கள் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

`லாக்டெளனுக்கு முந்தைய இரவு; துப்பாக்கிச்சூடு’ - வியன்னாவை அதிரவைத்த தாக்குதல் சம்பவம்

இதற்கு முன்னதாக, காபூலின் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கிளர்ச்சியாளர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர், வளைகுடா நாடான கத்தாரில் நடைபெற்றுவரும் அந்தப் பேச்சுவார்த்தைகளில், ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகள் விலக்கிக்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது. இருப்பினும், தினசரி இங்கு தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பு, நாட்டில் ஷியா பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

காபூல் பல்கலைக்கழக தாக்குதலுக்கும் பொறுப்பேற்றிருக்கிறது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு. ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பல்கலைக்கழக குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இரண்டு போராளிகள் மட்டுமே ஐ.எஸ் அமைப்பில் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது, இது ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளின் மூன்று தாக்குதல்காரர்களின் அறிக்கையுடன் முரண்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தான் நாட்டின் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களுக்கு எதிராகப் போரை அறிவித்து, தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் காபூலில் மகப்பேறு மருத்துவமனை மீது, நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பு மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்தத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் கைக்குழந்தைகளும், தாய்மார்களும். ஐ.எஸ் அமைப்பினர் கடந்த சில காலமாக பள்ளிகளையும், கல்வி நிறுவனங்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

கடந்த ஆண்டு, காபூல் பல்கலைக்கழக வாயில்களுக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் எட்டுப் பேர் இறந்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டில், காபூலிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன், தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தாக்குதல்காரர்களும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

பயங்கரவாதிகளின் இணையவழி தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் SITE புலனாய்வுக் குழுவின் தகவலின்படி, காபூல் பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த புதிதாகப் பட்டம் பெற்ற ஆப்கானிஸ்தான் நீதிபதிகள், விசாரணை அதிகாரிகளைக் குறிவைத்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
Rahmat Gul

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் காபூலில் நடந்த தாக்குதலைக் கண்டித்திருக்கிறது. `இது ஒரு பயங்கரவாதச் செயல்’ என்றும், `குறிப்பாக கல்வி நிறுவனத்தை குறிவைத்து தாக்குவது கண்டனத்துக்குரியது’ என்றும் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ஒரு மதப் பள்ளியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், எட்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல், ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் வாகனம் ஒன்றால் சாலையோர சுரங்கத்தில் மோதியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஓமர் ஸ்வாக் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு