Published:Updated:

ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக தொடரப்பட்ட வழக்கு..சர்வதேச நீதிமன்ற விசாரணயில் ஆங் சான் சூகி!

மியான்மரில் நடைபெற்ற ரோஹிங்யா மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 2017-ம் ஆண்டு மியான்மரின் ரகைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலால் 7,30,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அதில் பெரும்பகுதி மக்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் `இனப்படுகொலை' என்று ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்து தெரிவித்தது. இந்த நிலையில், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நீதி கேட்டு கேம்பியா, சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

ரோஹிங்யா மக்கள்
ரோஹிங்யா மக்கள்

கேம்பியா, ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட சிறிய நாடு. கேம்பியாவுக்கு 57 உறுப்பு நாடுகளைக்கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு ஆதரவு அளித்த பின்பே அந்நாடு வழக்கு தொடர்ந்துள்ளது. டிசம்பர் 10-12 வரை நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் என்ற இடத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதற்கு முன்பாக 2002-ல் தொடங்கப்பட்ட சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில், மியான்மர் நாட்டின் மீதும் ஆங் சான் சூகி மீதும் போர்குற்றம் செய்ததாக வழக்கு போடப்பட்டது. ஆனால், மியான்மர் அரசு அவ்வழக்கை நிராகரித்துவிட்டது.

1946-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளுக்கிடையே வரும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் நிறுவப்பட்டது. மேலும், 1948-ம் ஆண்டில் இனப்படுகொலைக்கு எதிரான மாநாடு நடைபெற்று ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி தங்களின் நாடுகளில் இனப்படுகொலை நிகழாமல் தடுக்கவும், ஒருவேளை நடந்துவிட்டால் அதை விசாரித்து தண்டிக்கவேண்டியதும் அந்தந்த நாடுகளின் பொறுப்பு. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள மியான்மர் அரசு அதைச் செய்யத் தவறியதால், சர்வதேச நீதிமன்றத்துக்குப் பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சர்வதேச நீதிமன்றம்
சர்வதேச நீதிமன்றம்

1991-ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவரும், மியான்மரின் பிரதமருக்கு நிகரான `ஸ்டேட் கவுன்சிலருமான' ஆங் சான் சூகி `தேசிய நலனைப் பாதுகாக்க, இந்த வழக்கைச் சர்வதேச வழக்கறிஞர்களோடு நேரடியாக சந்திக்கப் போகிறார்’ என்று அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. 2017-ல் நடந்த இந்தச் சம்பவத்துக்குப் பின்பு விமர்சனங்களுக்கு ஆளான சூகி, முதல் முறையாக சர்வதேச நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த நவம்பர் 14-ம் நாள் நடைபெற்ற 74-வது ஐ.நா சபை கூட்டத்தில் மியான்மர் உட்பட ஐந்து நாடுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு நவம்பர் 15-ம் தேதி பதிலளித்த அந்நாட்டு நிரந்தர பிரதிநிதி, வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், ``ரகைன் மாநிலத்தில் நடந்த சம்பவத்துக்கு மதமோ, இனமோ காரணம் இல்லை. அது அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை. நாடுவிட்டு நாடு பெயர்தல், ஏழ்மை, சட்டத்தின் ஆட்சி இல்லாமை மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களால் வருகிறது. அதைச் சரிசெய்ய மியான்மர் அரசு மிகப்பெரிய முயற்சிகளை எடுத்துவருகிறது'' என்றும் குறிப்பிட்டார்.

மியான்மர் நாடாளுமன்றம்
மியான்மர் நாடாளுமன்றம்

வாக்கெடுப்பிலும் 140 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தபோது 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கெடுப்புக்குப் பின் பேசிய மியான்மர் பிரதிநிதி ``மற்ற நாடுகள் தங்களது அரசியல் லாபத்துக்காக எங்கள் நாட்டின் மீது அழுத்தம் செலுத்துகிறார்கள். நாங்கள் அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். அவர்களின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்'' என்றும் குறிப்பிட்டார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு