Published:Updated:

`ஆபரேஷன் வல்லபி; துளிர்விடும் உயிர்கள்!’ - பேரழிவிலிருந்து மீண்டெழும் ஆஸ்திரேலியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புத்துயிர் பெரும் ஆஸ்திரேலியா
புத்துயிர் பெரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பற்றி எரிந்த காட்டுத்தீயில் சிக்கி அணைந்த மரங்களின் ஊடே, தற்போது செடிகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் பெரும் வைரலாகிவருகின்றன.

உலகின் மிகச் சிறிய கண்டம் மற்றும் மிகப் பெரிய தீவு என்ற பெருமைபெற்ற ஆஸ்திரேலியாவின் காடுகள், கடந்த மூன்று மாதங்களாக தீக்கிரையாகிவருகின்றன. ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய மாகாணங்களில் செப்டம்பர் மாதம் தொடங்கிய காட்டு தீ, தற்போது வரை தொடர்ந்து எரிந்துகொண்டேயிருக்கிறது. வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ
ஆஸ்திரேலியா காட்டுத்தீ

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால், அந்நாட்டின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6.3 மில்லியன் ஹெக்டேர் அளவிலான காடுகள் தீயால் கருகியுள்ளன. கங்காரு, கோலா கரடி போன்ற பல தனித்துவமான காட்டுயிர்களின் சாம்ராஜ்ஜியமாக உள்ளது ஆஸ்திரேலியா. ஆனால், இந்த காட்டுத்தீயினால் மட்டும் இதுவரை கோடிக்கணக்கான விலங்குகள் உயிரிழந்திருக்கக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து எரிந்து வந்த காட்டுத் தீ தற்போது சற்று தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, ஆஸ்திரேலியா மிகுந்த கஷ்டங்களைச் சந்தித்து வந்தது. தீயின் கோரத்தினால், நியூ சௌத் வேல்ஸ் நகரத்தின் வானம் முழுவதும் செந்நிறமாகக் காட்சியளித்தது. சாலையின் இரு புறங்களிலும் கருகிய நிலையிலான விலங்குகளின் உடல்கள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்ணீரை வரவழைத்தது. இதனால் மொத்த உலகமும் ஆஸ்திரேலியாவுக்காகப் பிரார்த்தனை செய்தது.

புத்துயிர் பெரும் செடிகள்
புத்துயிர் பெரும் செடிகள்
Murray Lowe

இவர்களின் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும் விதமாகத் தற்போது, ஒரு புத்துணர்ச்சியான சம்பவம் நடந்துள்ளன. நியூ சௌத் வேல்ஸின் குல்நூரா என்ற பகுதியில், தீயால் பாதிக்கப்பட்ட தனது வீட்டின் தற்போதைய நிலையைப் பார்ப்பதற்காக முரே லோவி என்ற உள்ளூர் புகைப்படக் கலைஞர் சென்றுள்ளார். தன் வீட்டுக்கு அருகே உள்ள காட்டில், அவர் கண்ட அற்புத காட்சியை அப்படியே படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

`போட்டோ பகிர்வதற்கு சாரி; ஆனால், இதைச் சொல்லியே ஆக வேண்டும்!’ - உலகை அதிரவைத்த ஆஸ்திரேலிய காட்டுத்தீ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று மாதங்களாக சோகத்தில் மூழ்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மட்டுமில்லாது உலக மக்களுக்கும் புது நம்பிக்கையை அளிக்கும் வகையில் அந்தப் புகைப்படங்கள் உள்ளன. கருமையான எரிந்த மரங்களுக்கு நடுவே, பச்சைப் புற்கள் மற்றும் ரோஸ் நிறத்திலான இலைகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இதைதான் முரே படம் பிடித்துள்ளார். ‘பேரழிவு எனக் கூறப்பட்ட இந்த காட்டுத்தீ அணைந்த ஒரு சில நாள்களிலேயே அந்த இடத்தில் மீண்டும் புதிய உயிர்களைப் பார்ப்பது பெரும் நம்பிக்கை அளிக்கிறது’ என அவர் கூறியுள்ளார்.

காடுகளில் உள்ள மரங்கள், செடி கொடிகள் போன்றவை பல கோடி ஆண்டுகளாக காட்டுத்தீயினால் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். எனவே, எரிந்த பிறகும் மீண்டும் முளைப்பதற்கான திறன் அவற்றுக்கு உண்டு என காட்டுயிர் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் வேறு ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், தீயினால் பாதிக்கப்பட்டு பல கோடி விலங்குகள் உயிரிழந்திருந்தாலும், இன்னும் கோடிக்கணக்கிலான விலங்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதற்காக ஏங்கி நிற்கின்றன.

அவற்றைப் பாதுகாக்கும் பணியில் நியூ சௌத் வேல்ஸின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை அமைப்புகள் இறங்கியுள்ளன. அதன் முதல்கட்டமாக, ஆபரேஷன் வல்லபி (Wallaby) என்ற திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். வல்லபி என்ற விலங்கு உருவம் மற்றும் தகவமைப்பில் அப்படியே கங்காருவைப் போன்றது. ஆனால், அளவில் சிறியது. இவை, காடுகளில் உள்ள பாறைகளில் வாழக்கூடியவை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும். இவைகளுக்கு உணவு வழங்குவதற்காக, வனவிலங்கு சேவை அமைப்பு கடந்த ஒரு வாரமாக முயற்சி செய்து வந்தது.

இந்நிலையில் அந்த அமைப்பு, ஆயிரம் கிலோ அளவிலான கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை ஹெலிகாப்டரில் பறந்தபடி காடுகளில் வீசிவருகின்றனர். இதனால் உணவின்றி தவிக்கும் வல்லபிகளுக்கு புதிய உணவுகள் கிடைத்துள்ளன.

“வல்லபிகள் பாறைகளில் வசிப்பதால், எளிதில் தீயிலிருந்து தப்பிவிடும். ஆனால், தற்போதைய சூழலில் அவற்றுக்கு உணவு கிடைப்பது பெரும் சவாலாக இருக்கும். எனவே, அதைக் கருத்தில் கொண்டே உணவு வழங்கப்பட்டது. ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இதுவரை 2,200 கிலோ காய்கறிகள் கொட்டப்பட்டுள்ளன” என்று ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மார் கென் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது. அனைவரும் ஆஸ்திரேலியாவின் இந்த முயற்சியைப் பெரிய அளவில் பாராட்டிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு