Published:Updated:

`ரகசியமாகச் சிறை, மரண தண்டனையால் பதற்றம்!’-சீனா முடிவால் கொதிக்கும் ஆஸ்திரேலியா

சீனா - ஆஸ்திரேலியா
சீனா - ஆஸ்திரேலியா ( RT )

``சீனாவில் ஆஸ்திரேலியருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை ஏற்கெனவே உள்ள பதற்றத்தை இன்னும் அதிகரிக்கும். வர்த்தக ரீதியிலான உறவை இன்னும் பாதிப்படையச் செய்யும்.”

கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த வைரஸ் சீனாவில் உருவானதாகக் கருதப்படுவதால், பாதிப்படைந்த நாடுகள் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. கொரோனா பரவியது தொடர்பாக சீனாவின் மீது சர்வதேச விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால், சீனாவுக்கும் மற்ற சில நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் நிலவி வருகின்றன. அந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.

சர்வேத விசாரணை தொடர்பான விவகாரத்தில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் ஆஸ்திரேலிய பொருள்களுக்கு வரிகள் அதிகமாக்கப்பட்டது. ஆனால், கொரோனா பிரச்னையுடன் இதை இணைக்கவில்லை என சீனா விளக்கமும் அளித்தது. இந்தநிலையில், தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவருக்கு சீன அரசாங்கம் மரண தண்டனை அளித்துள்ள சம்பவம் இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

காம் கில்லெஸ்பி
காம் கில்லெஸ்பி
AP

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகரும் மூதலீடுகள் தொடர்பான பயிற்சிகளை வழங்குபவருமான காம் கில்லெஸ்பி 2013-ம் ஆண்டு ஹாங்காங்கில் உள்ள குவாங்சோ பையூன் என்ற விமான நிலையத்தில் வைத்து சுமார் 7.5 கிலோ போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை கைது செய்ததை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கில்லெஸ்பி திடீரென காணாமல் போனதாகக் கருதிய அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்துள்ளனர்.

கில்லெஸ்பி பற்றிய செய்திகளை பொதுவெளியில் வெளியிடாமல் சீன அரசாங்கம் அவரை ரகசியமாகச் சிறையில் அடைத்தது, பின்னர் தெரிய வந்தது. சுமார் 7 ஆண்டுகளாக அவர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இதனிடையே, சீன நீதிமன்றம் கடந்த வாரம் கில்லெஸ்பிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததாகத் தகவல் வெளியானது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அதிகாரிகள் கில்லெஸ்பி கைது செய்யப்பட்டதை அறிந்ததாகவும் இந்த வழக்கு தொடர்பாக சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

`ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதலா?!’ - மாணவர்களை எச்சரிக்கும் சீன அரசாங்கம்

இந்த நிலையில் மோரிசன் தற்போது, ``ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காம் கில்லெஸ்பிக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நானும் எனது அரசாங்கமும் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.``கில்லெஸ்பி பற்றிய வதந்திகளைத் தவிர்க்கவும். நாங்கள் மிகவும் கவலையுடன் உள்ளோம். இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் நாங்கள் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தக் கடினமான நேரத்தில் எங்களது உணர்வைப் புரிந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு அவரின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றையும் அந்நாட்டு வெளியுறவுத்துறையின் வழியாக வெளியிட்டுள்ளனர்.

ஸ்காட் மோரிஸன்
ஸ்காட் மோரிஸன்

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணை, ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட உள்ள புதிய சட்டம் ஆகியன குறித்து ஆஸ்திரேலியா கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இனவெறி தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் `ஆஸ்திரேலியாவுக்கு மாணவர்கள் படிக்கச் செல்வது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்’ என்று சீன அரசு, அந்நாட்டு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இத்தகைய சூழ்நிலை நிலவும்பட்சத்தில் தற்போது சீனாவில் ஆஸ்திரேலியருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை ஏற்கெனவே உள்ள பதற்றத்தை இன்னும் அதிகரிக்கும் என்றும் வர்த்தக ரீதியிலான உறவை இன்னும் பாதிப்படையச் செய்யும் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர், ``ஆஸ்திரேலியர்கள், கிலெஸ்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சீனாவின் பதிலடி என்று பார்க்கக் கூடாது” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆஸ்திரேலிய ஊடகங்கள் ``சீனா, ஆஸ்திரேலியாவின் மீது தனது கடுமையான தாக்குதல்களைத் தொடர்கிறது” என்று குறிப்பிட்டு எழுதி வருகின்றன.

`டிசம்பர் 27-ல் தகவல்; ஜனவரி 20-ல் அறிவிப்பு ’ - கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா
அடுத்த கட்டுரைக்கு