Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `நீதனின் துப்பாக்கி’ | பகுதி - 11

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

கடல் தாண்டி, பெரும் தேசமொன்றுக்கு வழிகாட்டி அழைத்துப்போகின்ற ஓட்டி எனப்படுபவன், படகில் வருகின்ற அனைவருக்கும் ஒரு கடல் தெய்வம். அவனுக்குத் துரோகம் செய்வதற்கு எமனுக்கும் மனம் வராது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `நீதனின் துப்பாக்கி’ | பகுதி - 11

கடல் தாண்டி, பெரும் தேசமொன்றுக்கு வழிகாட்டி அழைத்துப்போகின்ற ஓட்டி எனப்படுபவன், படகில் வருகின்ற அனைவருக்கும் ஒரு கடல் தெய்வம். அவனுக்குத் துரோகம் செய்வதற்கு எமனுக்கும் மனம் வராது.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

ஆஸ்திரேலியா நோக்கி இரண்டாயிரத்தின் இறுதியில் படையெடுத்துக்கொண்டிருந்த படகுகளால், அப்போது ஆட்சியிலிருந்து லேபர் அரசாங்கம் மிரண்டது. சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை நாட்டுக்குள் அனுமதிக்கிற அரசாங்கம், இதற்கு மேலும் பதவியிலிருக்க வேண்டுமா என்று எதிர்க்கட்சியான லிபரல், நாட்டு மக்களின் முன்பாக லேபரை செவியில் பிடித்து ஆட்டியது.

இதற்கு பதில் கொடுப்பதற்காக, லேபர் அரசாங்கம் படகில் வந்த அகதிகள் பலரை, தனது பொல்லாத அரசியல் கொள்கையொன்றுக்கு பலிகொடுப்பதற்குத் துணிந்தது.

அதாவது, ஒரு காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த படகுகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஓரிரு அகதிகளை, சந்தேக நபர்களாகத் தெரிவுசெய்தது. அவர்களைச் சொந்த நாட்டில் சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டவர்கள் என்று முத்திரை குத்தியது. அவர்களது தஞ்சக் கோரிக்கை விண்ணப்பத்தை ஆஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்து, ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாமா என்று கருத்து கேட்டது.

அதாவது, `ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடியவர்கள்’ என்ற கோதாவில், இந்த அகதிகள் பட்டியல்படுத்தப்பட்டார்கள்.

`இவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதித்தால், ஆஸ்திரேலிய சமூகத்துக்கு ஆபத்து’ - என்று விளக்கம் கூறியது. இவர்களில் பலர் ஏற்கெனவே, அகதிகள் என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனத்தில் உறுதிப்படுத்தப்பட்டவர்கள். ஆகவே, இவர்களைச் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. அதேவேளையில், ஆஸ்திரேலியாவுக்குள்ளேயும் அனுமதிக்க முடியாது.

அப்படியானால், இவர்களது நிலை?

காலவரையறையற்ற தடுப்புக் காவல்!

இப்படிப்பட்ட கொடூரமான முடிவை எடுத்துக்கொண்டதன் மூலம், தனது எல்லைப் பாதுகாப்புக் கொள்கையை, ஆஸ்திரேலிய மக்களிடம் விளம்பரம் செய்தது மாத்திரமல்லாமல், ``லேபர் என்ற பெயரக் கேட்டாலே அதிருதில்ல...” – என்று எதிர்க்கட்சியையும் பார்த்து எக்காளம் செய்துகொண்டது.

சிறிலங்காவிலிருந்து வந்த படகில் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் `ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலானவர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டார்கள். இவர்கள் உண்மையிலேயே, சிறிலங்காவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களா என்பது ஆஸ்திரேலிய அரசுக்குத் தெரியுமோ இல்லையோ, இவர்களது படகில் வந்தவர்களே குடிவரவுத்துறையினரின் விசாரணையில், கூட வந்தவர்களை தாராளமாகக் காட்டிக்கொடுத்தார்கள். படகில் வந்தபோது, கூடக்குறைய சொந்த நாட்டின் போர் அனுபவம் பற்றிப் பேசியவர்கள், புலிகள் என்று காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.

ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினரைப் பொறுத்தவரை, பயங்கரவாதப் பின்னணியுடன் வருபவர்களுக்கு அடுத்ததாக, அகதிகளின் படகுகளை ஓட்டிவந்தவர்களைத்தான் தேடித் தேடிப் பிடித்து, ``நாட்டுக்கு அச்சுறுத்தலானவர்கள்” என்று முத்திரை குத்தினார்கள்.

ஆஸ்திரேலியா வருகிற படகில் ஏறும்போது, சகல அகதிகளுக்கும் சொல்லப்படும் கடுமையான உத்தரவு, ``ஓட்டி யார் என்று, யார் கேட்டாலும், எப்போதும் சொல்லப்படாது” அவ்வளவுதான்.

கடல் தாண்டி, பெரும் தேசமொன்றுக்கு வழிகாட்டிக் அழைத்துப்போகின்ற ஓட்டி எனப்படுபவன், படகில் வருகின்ற அனைவருக்கும் ஒரு கடல் தெய்வம். அவனுக்குத் துரோகம் செய்வதற்கு எமனுக்கும் மனம் வராது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
மனிதாபிமானம் உள்ள எவனும், கரை சேர்ந்தவுடன் ஓட்டியைத்தான் கையெடுத்துத் தொழுவான்.

ஆனால், ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் தரப்பினர், ஓட்டியைக் காட்டித்தருபவர்களுக்கு துரிதமாக விசா தரலாம் என்றும், இன்னும் பல புன்னகைக்கும் சத்தியங்களையும் எலும்புகளாகக் கண்முன்னால் ஆட்டிக்காட்டியபோது, எத்தனையோ ஓட்டிகளை துரோகம் பச்சையாகச் சப்பித் தின்றது. விசா வழங்கி ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டவர்களே, ஆஸ்திரேலியத் தரப்பினர் மீண்டும் அழைத்து விசாரிக்கும்போது, தடுப்பு முகாம்களுக்கு வந்து பணத்துக்காக ஓட்டிகளைக் காட்டிக்கொடுத்தார்கள்.

படகுப் பயணம் என்பது, தனியே கடலோடு மாத்திரம் முடிவடைந்துவிடுவதில்லை. படகுப் பயணத்துக்கு கடல் மாத்திரம் எதிரி என்று முடிந்துவிடுவதுமில்லை. ஒரு படகு, கரையைச் சேரும்போது, அது ஒரு தொகை அகதிகளோடு, அவர்களது புதிய குழப்பங்களையும்தான் கும்பலாகக் கரையில் தள்ளிவிடுகிறது. அகதிகளும் சராசரி மனிதர்கள்தானே என்பதற்கு அப்பால், அவர்கள் வழிநெடுகிலும் அனுபவித்துவந்த வலிகளும் அவற்றின் நீட்சியும், கூட வந்தவர்கள் பலரை, ஆயுளுக்கும் மாற்ற முடியாத மன வடுக்களால் வெட்டிச் சாய்த்திருக்கின்றன.

இந்த வரிசையில், நீதனும் மிகத்திறம்பட ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்திடம் சிக்கினான். அவன் காட்டிக்கொடுக்கப்பட்டானா அல்லது

இந்தோனேசியாவிலிருந்து பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில், அவனது விவரங்களை ஆஸ்திரேலிய புலனாய்த்துறையினர்தான் கண்டுபிடித்தார்களா என்பது தெரியவில்லை.

ஆனால், சிறிலங்காவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உதவியவன் என்ற குற்றச்சாட்டில், அவனை ஆஸ்திரேலியப் புலனாய்வுத்துறையினர், திட்டமிட்டபடி அடுத்த வாரம் சந்திப்பதற்கு மெல்போர்ன் அகதிகள் முகாமுக்கு வந்தனர்.

இரண்டாவது குழந்தை பிறந்ததுடன், கூடவே பெரியதொரு சிக்கலும் வந்திருப்பதாக, புலனாய்வுத்துறையினருடனான சந்திப்புக்குப் போவதாற்கு முதல்நாள் இரவு `அல்பா கம்பவுண்ட்’ வெளி விறாந்தையில் வைத்து எனக்கு சொன்னான். இரண்டு மூன்று சிகரெட்டுகளை அடுத்தடுத்துப் பற்றினான். பதற்றத்தோடு சிகரெட் அடிக்கட்டையை நசித்தான். என்னுடன் தனது பெரியதொரு வரலாற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுபோல, அன்றிரவு நடுநிசி வரைக்கும் தடுமாறியவன், ஒருவாறு இரண்டு பிளெயின் டீக்களோடு வந்து கதையைத் திறந்தான்.

சமாதானம் உதிரத் தொடங்கியிருந்த இரண்டாயிரத்தின் ஏதோவோர் ஆண்டொன்றில், கிளிநொச்சியிலுள்ள அலுவலகம் ஒன்றில்வைத்து, அவளை நீதன் கடைசியாகக் கண்டிருந்தான். புலனாய்வுத்துறையின் கொழும்புக்கான பொறுப்பாளர் ராகவன் மாஸ்டரின் முன்பாக அழைக்கப்பட்டிருந்த விசாரணைக்காகப் போனபோது, அவள் அப்போது அந்த அலுவலகத்தைவிட்டு வெளியேறியதை நீதன் கண்டான்.

அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவளை எங்கும் காணவுமில்லை. அவளோடு எந்தத் தொடர்பும் இல்லை.

அந்தச் சந்திப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, கிளிநொச்சியிலிருந்து, தலைநகர் கொழும்புக்கு அவள் கொண்டுவரப்பட்டிருந்தாள்.

ஓட்டோ ஒன்றில் கூட்டிவந்து, ஜம்பட்டா வீதியில் வைத்து, அவளை நீதனிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தான் கானகன். கொழும்பு தொடர்புகளுக்காக அவ்வப்போது வன்னியிலிருந்து வந்துபோகின்றவன் கானகன்.

முதன்முதலாகப் பார்த்தபோது, அவள் மென் மஞ்சள் நிறத்தில் கழுத்தைச் சுற்றி கறுப்பு வளையம்வைத்துத் தைத்த இறுக்கமான சட்டை அணிந்திருந்தாள். அங்க அடையாளமாக அவளது இடது புருவத்துக்கு மேல் சிறிய மச்சமொன்று துருத்திக்கொண்டிருந்ததைச் சொல்லலாம்.

அன்று மதியம் வெள்ளவத்தை மல்லிகா வீதியிலுள்ள ஜாபர் வீட்டில் கொண்டுபோய் அவளைவிட்ட நீதன், இரண்டு வாரங்களுக்குப் பிறகு இரத்மலானையிலுள்ள இன்னொரு வீட்டுக்கு மாற்றினான். ராகவன் மாஸ்டர் கொடுத்தனுப்பியிருந்த தகவல்களின்படி, அடுத்தடுத்த நாள்களில் கொழும்பின் பிரதான பகுதிகளுக்குத் தன்னுடன் அழைத்துச் சென்று, முக்கிய இடங்களைக் காண்பிக்கத் தொடங்கியிருந்தான் நீதன். சொல்லியனுப்பிய வேலைகள் தொடர்பாக கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பேசத் தொடங்கியிருந்தபோது அவள் தனது பெயர் ராதா என்று கூறியிருந்தாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இயக்கப்பெட்டைகள் என்றாலே அவர்களின்மீது அள்ளிப்பூசிக்கிடக்கும் அந்த வீரமான நடையும், பயிற்சி பெற்ற மிடுக்கும் கொள்ளை அழகு. ஆனால், ராதா புலனாய்வுப் போராளி என்பதாலோ என்னவோ, இயல்பான இயக்கப்பெட்டைகளைவிட வித்தியாசமானதோர் எழில் அவளில் அப்பிக்கிடந்தது. துறுதுறுத்த பார்வையை மறைத்துக்கொண்டு, தானொரு போராளி என்பதற்காக, செயற்கையாகக் காண்பிக்கும் உடல்மொழியாக இருக்கட்டும், பேசும்போது தன்னையறியாமல் `ப்பச்க்’ கொட்டிக்கொண்டு அவளிடம் வந்துவிழும் சொற்களாக இருக்கட்டும்,

எதுவுமே அவளை ஒரு போராளியென்ற வரையறைக்குள் பொருத்திப் பார்ப்பதற்கு நீதனை அனுமதிக்கவில்லை.

அவள் வந்திருந்தது, நீதன் கொழும்பில் மிகத்தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலப்பகுதி. விமான நிலையத் தாக்குதலொன்றுக்காக விசேட பயிற்சியளிக்கப்பட்டு, கொழும்புக்கு அனுப்பப்பட்ட போராளிகளின் குழுவில், வன்னியிலிருந்து வந்த நீதன், தலைநகரில் மேலதிகமாகக் கொஞ்ச வேலைகளைத் திருப்தியாக செய்து முடித்ததால், ராகவன் மாஸ்டரின் நம்பிக்கைக்கு உரியவனாகி, கொழும்பிலேயே தங்கவைக்கபட்டிருந்தான்.

நீதனுக்குப் பொறுப்பாகவிருந்த கோடீஸ் ஒரு தடவை கொழும்பிலிருந்து வன்னிக்குச் சென்றிருந்தபோது, அவனைக் கிளைமோர் தின்றுவிட, அதற்குப் பிறகு, முற்று முழுதாகவே கொழும்பின் வேலைகளை நீதன் கவனிக்கவேண்டியதாயிற்று.

பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ஒரு சில நாள்களிலேயே, ராணுவத்தின் மிக முக்கியமான புலனாய்வுத் தளபதி ஒருவனை நீதனின் `டீம்’ பட்டப்பகலில் தலைநகரின் சனநடமாட்டம் மிகுந்த இடத்தில் வைத்து போட்டுத்தள்ளியது. கண்ணாடி நொறுங்கி - ரத்தம் பீறிய சடலத்தில் கொட்டிக்கிடக்க - சீற் பெல்ற் கழற்றாமல் காருக்கள் சரிந்து கிடந்த புலனாய்வுத் தளபதியின் படம், கொழும்பின் சகல பத்திரிகைகளிலும் முன்பக்கத்தில் வந்திருந்தது. அது கன காலத்துக்குப் பிறகு, கொழும்பில் இடம்பெற்ற `முக்கியஸ்தர் படுகொலை’ என்பதால் தலைநகரே தலைசுற்றிப்போயிருந்தது. ``இவ்வளவு துணிச்சல் யாருக்கடா இங்கு வந்தது?”- என்று படைப் புலனாய்வுத்துறையினர் தலையை நிமிர்ந்து பார்க்கும் முன்னரே, அடுத்தடுத்து வேறு சில முக்கியஸ்தர்களையும் கொழும்பின் புறநகர் பகுதியில் வைத்து போட்டுத்தள்ளியது நீதனின் டீம்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

தேடுதல் வேட்டை அது இது என்று பொலீஸாரின் கெடுபிடிகள் தொடங்கியிருந்த காலப்பகுதியிலேயே, புலிப்போராளிகளைத் தேடித் தேடி வேட்டையாடிக்கொண்டிருந்த ராணுவப் புலனாய்வு அதிகாரி பாரூக்கை, கொழும்பில் வைத்து நீதன் தனியாகவே சென்று சுட்டுக்கொன்றான்.

இந்தச் செய்தி வெளியான பிறகு, நீதனின் பெயர் ராணுவத்துக்கு மாத்திரமல்லாமல், புலிகளின் புலனாய்வு வட்டத்திலும் பெரிய இடத்தை உருவாக்கியது.

அதைவிட, புலிகளுக்கு எதிராக மட்டக்களப்பு பற்பொடி கொம்பனியிலிருந்து இயங்கிவந்த, முக்கிய புலனாய்வுப் புள்ளியான - முன்னாள் புலி - ஒருவர், ரகசியமாகக் கொழும்புக்கு வந்திருந்த நேரம், மணந்து பிடித்துச் சென்று அவனது மூச்சைப் பிடுங்கிவிட்டு வந்தான் நீதன். `இருபது வருடங்களுக்கும் மேலாகப் புலிகளுக்குத் தண்ணிகாட்டிக்கொண்டிருந்தவனை இப்படிப் போட்டுத்தள்ளிவிட்டானே’ - என்று தலைநகரில் அரசியல்வாதிகளுக்கே பேதி போனது. அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஒவ்வொரு நாளும் அமைச்சரவை அலறியது.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தலைநகரின் பெரும்புள்ளிகள் அனைவரும் பொலீஸாருக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டிருந்த வேளையில், பொலீஸ் புலனாய்வு அதிகாரி ஒருவன் கொழும்பில்வைத்து கடத்தப்பட்டு, நீர்கொழும்பு கடல்வழியாக, வன்னிக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வந்தது. கொழும்பில் கைதான தமிழ் இளைஞர்களை சித்ரவதை செய்து, சாவடித்துவந்த இந்த அதிகாரியைக் குறிவைத்து தூக்கியது நீதனின் டீம்தான் என்பதைக் கேள்வியுற்ற சிங்கள அரசியல்வாதிகள், ராணுவத்தைப் பார்த்துக் காறி உமிழ்ந்தார்கள். தங்களுக்குரிய பாதுகாப்பை இனி நீதனிடமே கேட்பதுதான் சரியென்று வெளிப்படையாகவே அறிக்கைவிட்டார்கள்.

கொழும்பின் கோவணத்தைத் தனது ஒற்றைக்கையில் பிடித்துவைத்து, காவடிபோல ஆட்டிக்கொண்டிருந்த நீதனை, ராணுவத்தின் எந்தப் பிரிவுக்கும் யாரென்று தெரியாமல் இருந்ததுதான் அவனது பெரும் பலமாக இருந்தது.

இப்படியாக நீதன் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலப்பகுதியில், ராகவன் மாஸ்டர் ராதாவைக் கொழும்புக்கு அனுப்பி, ஒரு முக்கிய தற்கொலைத் தாக்குதலை நடத்த உதவுமாறு உத்தரவிட்டு, நீதனிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

காரியத்தைக் கற்பூரம்போல கொளுத்தி முடித்துவிட வேண்டும் என்பதில் ராதா முனைப்பாக இருந்ததை நீதன் நன்றாக கவனித்தான்.

வன்னியில் கொடுத்து அனுப்பிய பயிற்சிக்கு மேலதிகமாக, வேலையை நேர்த்தியாக முடிக்க வேண்டும் என்ற கவனம் அவளிடமிருந்தது.

நீதனோடு வெளியில் சென்றுவருகிறபோது, எல்லா விடயங்களையும் துரிதமாக உள்வாங்கிக்கொண்டாள் ராதா. தனக்குரித்தான கொஞ்ச நாள்களுக்குள் எவ்வளவுக்கு எவ்வளவு தனது வேலைக்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவளிடம் வேகமும் இருந்தது.

அன்று, கல்கிஸையிலிருந்த - சிங்களக் குடும்பங்கள் செறிவாக வாழுகிற - கடற்கரைக் கிராமங்கள் உள்ள பிரதேசத்தில் அமைந்த அந்தச் சிறிய உணவகத்துக்கு வெளியே அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் குளிர்பானம் சொல்லியிருந்தான் நீதன்.

புகையிரதக்கடவையோரத்தில் அமைந்த பிரம்பினால் வேயப்பட்ட குடை நிழல் அது. கடற்கரைக் காற்றும், இதமான வெயிலும் நிறைந்த அந்த இடம், அவ்வப்போது குடிகாரர் கொட்டகையாக அமைவதுமுண்டு. பொதுவில் ஆள் நடமாட்டம் இல்லாத பிரதேசம்.

கடற்கரைக் காற்று ஒருபக்கத்தால் தலைவாரிக்கொண்டிருக்க, குளிர்பானத்தை இருவரும் மெதுவாக உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, அந்தக் காற்றைப் புயலாக மாற்றிவிட்டதைப்போல - அப்பகுதியாகச் சென்ற பொலீஸ் வாகனமொன்று இவர்களைக் கண்டது.

(தொடரும்...)