Published:Updated:

`கிறிஸ்துமஸ் தீவில் தனிமைப்படுத்தப்படும் ஆஸ்திரேலியர்கள்!' - கொரோனா பயத்தால் அரசு நடவடிக்கை

கிறிஸ்துமஸ்  தீவு
கிறிஸ்துமஸ் தீவு

கிறிஸ்துமஸ் தீவில் இந்த ஆஸ்திரேலியர்கள் 14 நாள்கள் வைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாக அச்சத்தில் உள்ளன. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 425 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. எனவே, தொடர்ந்து இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குவான்டஸ் ஏர்வேஸ்
குவான்டஸ் ஏர்வேஸ்

இந்த நிலையில், சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் ஆஸ்திரேலியர்களை தனித்தீவில் தனிமைப்படுத்தும் பணிகளை ஆஸ்திரேலியா அரசு மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து 2,500 கி.மீ-க்கும் அதிகமான தொலைவில் இந்தியப் பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் இந்தப் பயணிகளை தங்க வைக்க ஆஸ்திரேலிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டுக்குள் அனுமதியின்றி நுழைபவர்களைத் தடுப்புக் காவலில் வைக்கும் முகாம்கள் இந்த கிறிஸ்துமஸ் தீவில் உள்ளது. தற்போது, சில இலங்கையைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ் தீவில் சிறை; இலங்கை அச்சுறுத்தல்! 
- ஆஸ்திரேலிய அரசால் அல்லல்படும் தமிழ்க் குடும்பம்

குவான்டஸ் ஏர்வேஸ் வுகானிலிருந்து பயணிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரத்துக்கு இன்று காலை அழைத்து வந்தனர். அங்கிருந்து சிறிய விமானங்கள் மூலம் இரண்டு கட்டமாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். முதலில் 241 பேர் இன்று காலை கிறிஸ்துமஸ் தீவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் மோரிஸன் தெரிவித்துள்ளார்.

மேலும், ``குவான்டஸ் விமானத்தில் வந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரின் கணவர் ஆகியோர் பெர்த் நகரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பயணிகளைப் பத்திரமாக மீட்டு அனுப்புவது கடினமாகவும் சவாலாகவும் உள்ளது. சீனாவிலுள்ள அதிகாரிகளுடன் இரண்டாவது விமானத்தை அனுப்புவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றும் மோரிஸன் தெரிவித்துள்ளார்.

ஸ்காட் மோரிஸன்
ஸ்காட் மோரிஸன்

ஏர் நியூசிலாந்து விமானம் வுகானிலிருந்து இரண்டாவது விமானமாக இயக்கப்பட உள்ளது. இந்த விமானத்தில் 70 நியூசிலாந்துக்காரர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் பயணிக்க உள்ளனர். முதலில், ஆக்லாந்துக்குச் சென்று நியூசிலாந்தினரை தரையிறக்கிவிட்டு, பின்னர் அங்கிருந்து கிறிஸ்துமஸ் தீவுக்கு ஆஸ்திரேலியர்களை அழைத்துச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தீவில் இந்த ஆஸ்திரேலியர்கள் 14 நாள்கள் வைக்கப்படுவார்கள். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் வெளியில் தெரிய அவ்வளவு காலம் ஆகும் என்பதுதான் இதற்கான காரணம். ஆஸ்திரேலியாவில் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. சீனாவின் ஹியூபே பகுதியிலுள்ள 600 ஆஸ்திரேலியர்கள் தனது தாய்நாட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சீனாவிலிருந்து வரும் பயணிகளும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

` சீனாவிலிருந்து ஊட்டிக்கு வந்த 7 பேர்!' -கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நீலகிரி மருத்துவக்குழு
அடுத்த கட்டுரைக்கு