Published:Updated:

` அறை எண் 2011-க்கு இழுத்துச் சென்று அடித்தனர்!' - மாணவர் படுகொலையால் தகிக்கும் வங்கதேசம்

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம் ( EPA )

``நான் அப்ராரை கீழே தூக்கிச் சென்றேன். இறுதியாக அப்ரார், `தயவு செய்து என்னைச் சீக்கிரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள், காப்பாற்றுங்கள்' எனக் கூறினார்.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா பிரதமராக உள்ளார். இவர் இந்தியத் தலைவர்களுடன் நட்பில் இருப்பவர். கடந்த வாரம் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஷேக் ஹசீனா, இங்குள்ள பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா

நதிநீர் ஒப்பந்தம்!

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நதிநீர் விவகாரம் நீண்ட நாள்களாகப் பேச்சுவார்த்தையில் உள்ளது. டீஸ்டா, ஃபெனி, மனு, முகுரி, தர்லா போன்ற பல்வேறு நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்திடாமல் உள்ளன. இங்கு வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, `இந்தியா - வங்கதேசம் இடையே பல நதிகள் எல்லை கடந்து செல்கின்றன. இரு நாட்டு வளர்ச்சிக்கும் அவை முக்கியமானவை என்பதை உணர்ந்தும்கூட இதற்கு இன்னும் முடிவு எட்டப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது” எனப் பேசியிருந்தார்.

பொறியியல் மாணவர் கொலை!

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில், இரண்டாம் ஆண்டு எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் படித்து வந்தார் 21 வயதான அப்ரார் ஃபாஹட் (Abrar Fahad ). இவர், வங்கதேசத்தில் உருவாகும் ஃபெனி நதியிலிருந்து தண்ணீர் எடுக்க இந்தியாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள வங்கதேச அரசை விமர்சித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அவர் கருத்து வெளியிட்ட அடுத்த சில நாள்களில் பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த சில நபர்கள், விடுதி அறை 1011-ல் இருந்த அப்ராரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அறை எண் 2011-ல் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

Abrar Fahad
Abrar Fahad

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அப்ராரை தூக்கிச் சென்ற அந்தக் கும்பல் நான்கு மணி நேரத் தொடர் தாக்குதலுக்குப் பிறகு, அவரைக் கொன்று விடுதியின் தரைதளத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்த மாணவரின் இறப்பு வங்கதேசத்தில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இவ்வளவு பெரிய பிரச்னைக்குக் காரணம் பிசிஎல் (Bangladesh Chhatra League).

வங்கதேசம் சத்ரா லீக்!

வங்கதேச ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியின் இளைஞரணி பிரிவுதான் இந்த பிசிஎல். மாணவர் ஃபாஹட்டை பிசிஎல் அமைப்பினர்தான் கடுமையாகத் தாக்கி கொலை செய்தனர் என கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் மாணவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களுக்கு பிசிஎல்தான் காரணம் எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அப்ரார் ஃபாஹட் தங்கியிருந்த விடுதியில் உள்ள சிசிடிவி கேமராவில், அவரது உடலைச் சிலர் அடித்துத் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒன்பது பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஐந்து பேர் பிசிஎல் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

 அப்ரார் ஃபாஹட்
அப்ரார் ஃபாஹட்
Twitter

அப்ரார் ஃபாஹட் அடித்துக் கொலை செய்யப்பட்டதை டாக்கா காவல்துறை ஆணையர் உறுதி செய்துள்ளார். மேலும், அப்ராரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களும், அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததாகக் கூறியுள்ளனர். அப்ரார், அரசை விமர்சித்ததால் அவருக்கு இஸ்லாமிய கட்சியுடன் தொடர்பு உள்ளதா என பிசிஎல், கடந்த சில நாள்களுக்கு முன்னர் விசாரணை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அப்ரார் ஃபாஹட் கொலை, வங்கதேசம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்கா, சிட்டகாங், ராஜ்ஷாஹி உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

‘அப்ரார் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், கல்லூரிக்குள் அரசியல் நுழையக் கூடாது, அதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்பதே மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. பிற மாணவர்களைத் தாக்கும், பிசிஎல் அமைப்பின் செயலை மனித உரிமைகள் ஆணையம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்
Twitter

“ திங்கள்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் வெளியில் வந்தபோது அறை எண் 2005-ன் வெளியில் அப்ரார் கிடப்பதைக் கண்டேன். நான் அருகில் சென்று பார்க்கும்போது அவர் உயிருடன் இருந்தார். சில ஜூனியர் மாணவர்களின் உதவியுடன் நான் அப்ராரை கீழே தூக்கிச் சென்றேன். இறுதியாக அப்ரார், `தயவு செய்து என்னைச் சீக்கிரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள், காப்பாற்றுங்கள்' எனக் கூறினார். அப்ரார் இறந்த பிறகு விடுதியில் பெரும் பதற்றம் நிலவியது. பிசிஎல் அமைப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சில மாணவர்கள் விடுதியிலேயே போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டனர்” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மாணவர் பிபிசி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

“என் மகன் பிஹெச்.டி படிக்க வேண்டும், நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என விரும்பினார். எல்லாம் பாதியிலேயே முடிந்துவிட்டது. இனி பல்கலைக்கழகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகன் இறந்த அன்றைய தினம் விடுதி அறையில் என்ன நடந்தது எனத் தெரிய வேண்டும். என் மகனின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்” என அப்ராரின் தந்தை பர்கத் உல்லா கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்
Twitter

டாக்கா நகரம் முழுவதும் பல இடங்களில் சாலைகளை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். நான்காவது நாளாகத் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது. பல மாணவர் அமைப்பினர், ஆசிரியர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தால் மொத்த டாக்கா நகரமும் ஸ்தம்பித்துள்ளது.

இதனிடையே, ``மாணவர் அப்ரார் ஃபாஹட் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்'' என அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு