Published:Updated:

`ஆயுத ஒப்பந்தமா முக்கியம்..?'- ட்ரம்ப்பின் இந்தியப் பயணத்துக்கு எதிராக அமெரிக்காவின் முதல் குரல்

பெர்னி சாண்டர்ஸ்
பெர்னி சாண்டர்ஸ்

ட்ரம்ப் இந்தியாவுடன் போட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அமெரிக்காவிலிருந்து முதல் விமர்சனக் குரல் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்திய வருகையையொட்டி அஹமதாபாத், ஆக்ரா திருவிழா கோலம் பூண்டது. ட்ரம்ப்பின் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குஜராத் அரசு ரூ.100 கோடி வரை இதற்காக செலவு செய்துள்ளது. இத்தகைய ஆடம்பரச் செலவுகள் ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. ஜனாதிபதி மாளிகையில் ட்ரம்ப்புக்கு வழங்கப்பட்ட விருந்தையும் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

ட்ரம்ப் இந்தியா வருவதற்கு முன்னரே புதிய பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போவதில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு தலைவர்களுக்குமிடையே ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இந்தியாவைக் கடந்த ஆண்டு விருப்பப்பட்ட வர்த்தக நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியாவை வளர்ந்த நாடு என அமெரிக்கா பட்டியலிட்டது. இவை இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா என்கிற விவாதங்கள் எழுந்தன.

யோகி ஆதித்யநாத் உற்று கவனிக்கும் தமிழக ஐ.பி.எஸ்  முனிராஜ்... பதற்றமான இடத்தில் முக்கிய அசைன்மென்ட்!

ட்ரம்ப் அதிபரான பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். ட்ரம்ப் எங்கு அரசு முறையாக பயணம் மேற்கொண்டாலும் அந்த நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதிபரான பிறகு முதல் முறையாக சவுதி அரேவியாவுக்குப் பயணம் செய்த ட்ரம்ப் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். தற்போது இந்தியா வருகையின் போதும் 21 ஆயிரம் கோடி மதிப்பில் அதி நவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. MH-60 ரோமியோ மற்றும் MH-60 ரோமியோ Seahawk ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த வகை ஹெலிகாப்டர்கள் கடற்படை செயல்பாட்டில் அதிக திறன் கொண்டவை.

பெர்னி சாண்டர்ஸ்
பெர்னி சாண்டர்ஸ்

இந்த நிலையில், ட்ரம்ப் போட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சியின் பிரதான வேட்பாளராக பெர்னி சாண்டர்ஸ் அறியப்படுகிறார். மேலும் அவர் கூறுகையில், ``ட்ரம்ப் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது பருவநிலை மாற்றம் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். இந்தியாவும் அமெரிக்காவும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றிருக்கிறார்.

ட்ரம்ப்பின் இந்திய வருகைக்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள முதல் எதிர்வினையாக இது பார்க்கப்படுகிறது..

அடுத்த கட்டுரைக்கு