Published:Updated:

``அமெரிக்க வரலாற்றின் இருண்ட தருணம்; இது தேச துரோகத்தின் எல்லை!’’ - ஜோ பைடன் காட்டம்

ஜோ பைடன்
ஜோ பைடன்

இந்த நேரத்தில், நமது ஜனநாயகம் முன் எப்போதும் இல்லாத வகையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. நவீன காலங்களில் நாம் கண்ட எதையும்போலில்லாமல், அமெரிக்க கேபிடல் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புச் செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும்விதமாக, அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனத் தொடர்ந்து அமெரிக்கவில் அசாதாரண சூழலை ஏற்படுத்திவருகின்றனர்.

ட்ரம்ப் - ஜோ பைடன்
ட்ரம்ப் - ஜோ பைடன்

இந்தநிலையில், ஜோ பைடனின் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாதுகாப்பை மீறி அமெரிக்க கேபிடல் (US Capitol) கட்டடத்துக்குள் நுழைந்து அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணிச் சான்றளிக்கும் பணியை மேற்கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் தொடர்பாக பேசிய ஜோ பைடன், ``அமெரிக்க வரலாற்றின் இத்தகைய இருண்ட தருணம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.

போராட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்
போராட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்

மேலும் அவர், ``இந்த நேரத்தில், நமது ஜனநாயகம் முன் எப்போதும் இல்லாத வகையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. நவீன காலங்களில் நாம் கண்ட எதையும்போலில்லாமல், அமெரிக்க கேபிடல் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கேபிடல் ஹில் காவல்துறை மீதான தாக்குதல் சம்பவமும் நடைபெற்றிருக்கிறது.

நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். கேபிட்டலில் குழப்பத்தை ஏற்படுத்திய காட்சிகள் ஓர் உண்மையான அமெரிக்காவை பிரதிபலிக்கவில்லை. நாம் பார்ப்பது சட்டவிரோதத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான தீவிரவாதிகளின் செயல்கள் மட்டுமே இவை. இது கருத்து வேறுபாட்டால் ஏற்பட்டது அல்ல. இது அவர்கள் ஏற்படுத்திய குழப்பம் மட்டுமே. இதுவே தேசத்துரோகத்தின் எல்லை. அது இப்போதே முடிவடைய வேண்டும்" என்றார் ஜோ பைடன்.

கேபிட்டல் கட்டத்தில் அத்துமீறி நுழைந்த ஆதரவாளர்கள்
கேபிட்டல் கட்டத்தில் அத்துமீறி நுழைந்த ஆதரவாளர்கள்

மேலும், `ட்ரம்ப் ஆதரவாளர்களின் இந்த முற்றுகைக்கு, முற்றுப்புள்ளி வைக்கவும் அதிபர் ட்ரம்ப் தனது உறுதிமொழியை நிறைவேற்றவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் உடனடியாக தேசியத் தொலைக்காட்சி மூலம் தன் ஆதரவாளர்களிடம் பேச வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார்" புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன்.

செனட் சபை
செனட் சபை
J. Scott Applewhite

இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கெய்லீ மெக்னானி, அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரத்துக்கு பதிலளிப்பதற்கு உதவுமாறு தேசியக் காவலர் மற்றும் பிற கூட்டாட்சி பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு