ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவுப்படி, கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைனில் போர்செய்யத் தொடங்கின. உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் போர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனிடையே, உக்ரைன் அமெரிக்காவும் இணைந்து உயிரியல், ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``உக்ரைன், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து உயிரியல், ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் ரஷ்யா வெளியிடவில்லை. நாங்கள் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட மாட்டோம். நேட்டோவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல் ஏற்படுவது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். அப்படிப் போர் ஏற்பட்டால் அதைத் தடுக்க முடியாது. நேட்டோ படைகள் ரஷ்யாவுடன் மோதுவதைத் தடுக்க வேண்டும்" என்றார்.
