அலசல்
அரசியல்
Published:Updated:

பிரிட்டனில் போரிஸ் வெற்றி... முடிவுக்கு வருமா பிரெக்ஸிட் நாடகம்?

போரிஸ் ஜான்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 220 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் நடந்து முடிந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பகுதிகளை உள்ளடக்கிய கிரேட் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. “பிரெக்ஸிட் நடத்தியே காட்டுவேன்” (Get Brexit Done) என்ற மூன்றே சொற்களை மந்திரத் தொடராகப் பயன்படுத்தி பெரும்வெற்றியைப் பெற்றுள்ளார் போரிஸ் ஜான்சன்.

இவர் சந்திக்காத விமர்சனங்களே இல்லை. `அடிக்கடி பொய் சொல்பவர்’ என்பது அவர்மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. அதை வலியுறுத்திச் சொல்வதற்காகவே https://boris-johnson-lies.com/ என்றோர் இணையதளம் அவரின் எதிர்ப்பாளர்களால் தொடங்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, சொந்த கட்சியின் அதிருப்தியாளர்களும் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துவைத்தனர். எல்லா விமர்சனங்களுக்கும் அவர் சொன்ன ஒரே பதில், `Get Brexit Done.’

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல், டிசம்பர் 12-ம் தேதி நடந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடக்கும் மூன்றாவது பொதுத்தேர்தல் இது. கன்சர்வேட்டிவ், லேபர், லிபரல் டெமோகிராட், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் பிரெக்ஸிட் பார்ட்டி ஆகியவற்றுடன் சுமார் 15 சிறு கட்சிகளும் தேர்தலில் போட்டி யிட்டன. இவற்றில் `பணக்காரர்களின் கட்சி’ எனச் சொல்லப்படும் கன்சர்வேட்டிவ் கட்சி, வலதுசாரி கொள்கைகளைக்கொண்டது. ஏழைத் தொழிலாளர்களின் கட்சியான லேபர் கட்சி, இடதுசாரி கொள்கைகளைக்கொண்டது.

பெரும்பணக்காரர்களுக்கும் மிக அதிக வருமானம் உள்ளவர்களுக்கும் புதிய வரிகள், அனைத்து மக்களுக்கும் இலவச பிராட்பேண்ட், பல கோடி ரூபாய் முதலீட்டில் இலவச மருத்துவமனைகள் என லேபர் கட்சியும் இந்த முறை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் `Get Brexit Done’ என்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒரே வாசகம் புறம்தள்ளியது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான பல முயற்சிகளுக்கு, ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் சில அதிருப்தியாளர்களுடன் சேர்ந்துகொண்டு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுவந்தன. எனவே, இந்தத் தேர்தலில் பிரெக்ஸிட் (Brexit) எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதை முக்கிய தேர்தல் பிரச்னை யாக கன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்தது.

‘‘பிரெக்ஸிட் தேவையில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த முயற்சியை கைவிடுவோம்’’ என்ற லிபரல் டெமோகிராட் கட்சியும் தோல்வியைத் தழுவியது. ‘‘ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது பற்றி புதிய ஒப்பந்தம் போடுவோம். பிறகு அதில் மக்களின் கருத்தைக் கேட்க இன்னொரு கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளின்படி நடந்துகொள்வோம்’’ என்று பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாகவும் இல்லாமல் எதிராகவும் இல்லாமல் எடுத்த குழப்பமான ஒரு நிலைப்பாடே, லேபர் கட்சிக்கு எதிராகத் திரும்பியது. இதனால், கடந்த 80 ஆண்டுகளாக வெற்றிபெற்ற தொகுதிகளில்கூட லேபர் கட்சி தோல்வியைத் தழுவியது. ‘‘பிரெக்ஸிட் நடத்தியே காட்டுவேன்’’ என்று பிடிவாதமாகச் சொன்ன போரிஸ் ஜான்சன் மகுடம் சூடினார்.

இதைத் தொடர்ந்து, 650 உறுப்பினர்கள்கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 220 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வளவுக்கும் அங்கு பெண்களுக்கென தனி இடஒதுக்கீடு எதுவும் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ப்ரீத்தி படேல், ரிஷி சுனக் ஆகியோர் கவனிக்கத்தக்கவர்கள்.

ப்ரீத்தி படேல், குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்த அவருக்கு, மீண்டும் அதே பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை. இவர், உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டில் படித்தவர். இவருக்கும் புதிய அரசில் முக்கியமான பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

நவேந்ரு மிஸ்ரா, முனிரா வில்சன், ககன் மொகிந்ரா, அலோக் ஷர்மா, சைலேஷ் வரா, சுயேலா ப்ரேவர்மேன், ப்ரீத் கௌர் கில், தன்மஜுத் சிங் தேசி, சீமா மல்ஹோத்ரா என இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக அதிகம். தவிர, பாகிஸ்தானை பூர்வீகமாகக்கொண்ட உறுப்பினர்களும் உண்டு. பத்தில் ஒரு பங்கு எம்.பி-க்கள் உள்ளூர் பூர்வீகம் அல்லாத இன சிறுபான்மையினர்.

சரி, தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன? விறுவிறுவென பிரெக்ஸிட்டுக்கான ஏற்பாடுகள் நடக்கும். போரிஸ் ஜான்சன் அரசு, ஐரோப்பிய யூனியனுடன் பேசி வடிவமைத்த வரைவு ஒப்பந்தம் எந்த இடையூறுமின்றி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும். அதன் அடிப்படையில் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். போரிஸ் உறுதியளித்தபடி, 31.01.2020 அன்றோ அதற்கு முன்னரோ ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறலாம். எதிர்பாராத திருப்பமாக அதற்கு வேறு எந்தத் திசையிலிருந்தாவது முட்டுக்கட்டைகளும் எழலாம்.

பிரெக்ஸிட் நாடகம் இன்னும் முடியவில்லை. நாடகத்தின் அடுத்தடுத்த பகுதிகளுக்காக பிரிட்டனும் ஐரோப்பாவும் காத்திருக்கின்றன... ஏன் உலகமேகூடதான்!

- லண்டனிலிருந்து ரமேஷ் பாலசுப்ரமணியன்