Published:Updated:

`பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் ஏவுகணை'- சீனாவுக்கு `செக்' வைக்கும் இந்தியா!

பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் ஏவுகணை

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்திய - ரஷ்ய தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான `பிரம்மோஸ்’ ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விற்க இந்தியா அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் போடவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு பிரம்மோஸ் ஏவுகணை பேட்டரிகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு வர்த்தக ரீதியாக விற்கப்படவுள்ளன.

உலகிலேயே மிக அதிவேகத்தில் பறக்கும் திறன் படைத்த சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்க பிப்.12, 1998-ல் இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. மணிக்கு 3700 கி.மீ. வேகத்தில் பறக்கும் இந்த ஏவுகணையில் 200 கிலோ வெடிமருந்தை ஏற்றி 400 கி.மீ. சுற்றளவுக்கு அனுப்ப முடியும். குறிப்பாக அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் படைத்த பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் ஏவுகணை

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் விற்கப்படுவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``தொடக்கத்தில் ரஷ்யாவிலிருந்துதான் உதிரிபாகங்கள் வாங்கப்பட்டு பிரம்மோஸ் தயாரிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 70 சதவிகித உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. வியட்நாமை ஒட்டியுள்ள தென்சீனக் கடலில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொள்கிறது. இக்கடல் பகுதியில் முழு உரிமை கொண்டாடும் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளின் கடல்சார் உரிமைகளை அச்சுறுத்துகிறது.

இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்காகவும் தென்சீனக் கடல் வழியாக இந்தியா மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு பாதுகாப்பு அளிக்கவும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, ஜப்பான், தென்கொரியா நாடுகளுடன் நாம் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துகிறோம். இதன் ஒருபகுதியாகத்தான் பிலிப்பைன்ஸ் அரசின் வேண்டுகோளின்படி, அந்நாட்டுக்கு இரண்டு பிரம்மோஸ் ஏவுகணை பேட்டரிகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பேட்டரியில் மூன்று தானியங்கி ஏவுகணை செலுப்பான்களும் ஒன்பது ஏவுகணைகளும் இருக்கும். அடுத்தாண்டு மத்தியில் இதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகவுள்ளது” என்றனர்.

பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் ஏவுகணை

இந்தியாவின் வர்த்தக பாதுகாப்புக்காகத்தான் பிரம்மோஸ் ஏவுகணையை விற்பதாக ராணுவ அமைச்சகம் கூறினாலும் இது சீனாவுக்கு இந்தியா வைக்கும் செக் என ராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ``இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கையிலுள்ள சில துறைமுகங்களை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இவ்விரு நாடுகளின் பொருளாதாரத்திலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.

இதற்குப் பதிலடியாகத் தான் சீனாவுக்கு அருகிலேயே பிரம்மோஸ் ஏவுகணையை நிலைநிறுத்த இந்தியா காய் நகர்த்துகிறது. ரஷ்யாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு அருகிலேயே தங்கள் நிலைகளை நிறுத்தும் பாணி தான் இது. இனி வியட்நாம், தென் கொரியா நாடுகளும் பிரம்மோஸ் கொள்முதல் பட்டியலில் இடம்பெறலாம்” என்றனர். இச்செய்தியை பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் டெல்பின் லோரன்சானாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மனோஜ் முகுந்த் நரவானே
மனோஜ் முகுந்த் நரவானே

இதனிடையே, இந்தியாவின் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே பொறுப்பேற்றுள்ளார். ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் காடுகள், ராஜஸ்தானின் பாலைவனப் பகுதிகள் என பல முக்கிய ராணுவ நிலைகளை தலைமையேற்றவர், இந்தியாவின் 28-வது தலைமைத் தளபதியாக ஜனவரி 1-ம் தேதி முதல் பொறுப்பேற்கிறார். மியான்மரிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரிந்திருப்பதாலும், சீனாவை எல்லையாகக் கொண்ட வடகிழக்கு இந்தியாவின் புவியியல், அரசியலில் அனுபவம் பெற்றிருப்பதாலும் முகுந்த் நரவானே தளபதியாக அமர்த்தப்பட்டிருப்பது சீனாவின் ராணுவ ஆதிக்கத்தை கட்டுப்படுத்த தான் என்கிறது பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்.

அடுத்த கட்டுரைக்கு