Published:Updated:

`WHO-வுக்கு எச்சரிக்கை; மொத்த எண்ணிக்கையை வெளியிட்ட பிரேசில்!’ - ட்ரம்ப்பை பின்பற்றும் பொல்சனாரோ?

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

``பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,272 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,406 ஆக உயர்ந்துள்ளது.”

கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. வைரஸ் பரவத் தொடங்கிய நாள்கள் முதலே அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ கொரோனா பாதிப்பை மிகவும் அலட்சியமாகக் கையாண்டு வருகிறார் என்று பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த வைரஸ் தொற்றை `சிறிய காய்ச்சல்’ என்று குறிப்பிட்டது மட்டுமல்லாது வைரஸால் பாதிப்படைபவர்கள் பற்றிய எண்ணிக்கையைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு `அதனால் என்ன?’ என்றும் பதிலளித்தார். ஊரடங்குக்கு எதிராகவும் பேசி வருகிறார். ஊரடங்கு அறிவித்த மாகாண ஆளுநர்களையும் கடுமையாக விமர்சித்தார். பொருளாதாரம் மிகவும் பாதிப்படையும் என்றும் கூறி வந்தார். `பிரேசில் மக்கள் இனி தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று நிபுணர்கள், அதிபர் மீது அதிருப்தி தெரிவித்தனர். மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாமல் நடந்துகொள்வதாக விமர்சிக்கப்பட்ட பொல்சனாரோ, கடந்த சில நாள்களுக்கு முன்பு இணையதளத்தில் பிரேசிலில் பாதிப்பு குறித்த மொத்த எண்ணிக்கையை வெளியிடுவதையும் நிறுத்தினார்.

பிரேசில்
பிரேசில்
AP

அதிபர் பொல்சனாரோ தனது ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய ஒட்டுமொத்த தரவுகள்... நாட்டின் தற்போதைய நிலையை பிரதிபலிக்காது” என்றும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து பாதிப்படைந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை அரசு மறைப்பதாக நிபுணர்கள் உட்பட பலரும் தங்களது குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதனால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரபூர்வ இணையதளத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரா டி மொரேஸ், பாதிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் முன்பு போல வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நேற்று முதல் சுகாதாரத்துறை அமைச்சகம் மொத்த எண்ணிக்கையையும் வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

`உலகளவில் 2-ம் இடம்; இணையத்திலிருந்து எண்ணிக்கையை நீக்கிய அரசு!’ - அச்சத்தில் பிரேசில் மக்கள்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,272 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,406 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக மிக அதிக இறப்பு எண்ணிக்கை பிரேசிலில் பதியாகியிருக்கிறது. பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,39,503 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 212 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் இன்னும் அதிகமான மக்கள் பாதிப்படைந்து இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பாதிப்புகளைத் தடுப்பது குறித்த எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மொத்த எண்ணிக்கையை மீண்டும் வெளியிடத் தொடங்கியதன் காரணம் குறித்த கேள்விகளுக்கு பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில்
பிரேசில்

உலக சுகாதார அமைப்பில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகுவதாகக் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பிரேசிலின் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அரவுஜோ பேசும்போது, ``உலக சுகாதார அமைப்புக்கு சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு தன்மை இல்லை. வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது பங்களிப்பை மிகவும் அக்கறையுடன் செய்து வருகிறது. உலக சுகாதார அமைப்பில் அரசியல் செல்வாக்கு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் அரசு சாராதவர்களின் செல்வாக்கு உலக சுகாதார அமைப்பை பாதிக்கிறதா என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அலட்சியத்துடன் செயல்படுவது, நெருக்கடியான சூழலில் பொருளாதார பாதிப்புகள் குறித்த பேச்சு, உலக சுகாதார அமைப்புடனான பிரச்னை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் விமர்சகர்கள் பலரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வழியை பின்பற்றுவதாக விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

`அதிபரின் அழுத்தம்;  அதிகரித்த உயிரிழப்புகள்!’ - ஒரே மாதத்தில் ராஜினாமா செய்த பிரேசில் அமைச்சர்
அடுத்த கட்டுரைக்கு