Published:Updated:

`அதிபரின் அழுத்தம்; அதிகரித்த உயிரிழப்புகள்!’ - ஒரே மாதத்தில் ராஜினாமா செய்த பிரேசில் அமைச்சர்

ராஜினாமா செய்த அமைச்சர்
ராஜினாமா செய்த அமைச்சர்

பிரேசிலில் அதிகரித்து வரும் வைரஸ் பரவல் காரணமாக அங்குள்ள தேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் முதன்முறையாக சீனாவில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டு கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்துக்குள் உலக நாடுகள் முழுமைக்கும் பரவிய வைரஸ் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி பல லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்துவிட்டது.

கடந்த சில மாதங்களாக மொத்த உலகமும் கொரோனா என்ற பெயரை முன்வைத்துத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மக்களின் உடல்நலம், சுகாதாரம், வாழ்வு, பொருளாதாரம், வேலை போன்ற பல விஷயங்கள் கொரோனாவால் அழிக்கப்பட்டுவிட்டன என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு வைரஸின் தாக்குதல் உள்ளது.

பிரேசில்
பிரேசில்
Silvia Izquierdo

பல நாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தும் அதனால் எந்தப் பெரிய பலனும் இல்லை. கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்திவிட்டோம் எனக் கூறி ஊரடங்கில் தளர்வு அறிவித்த சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் வைரஸ் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல நாடுகளில் தற்போதுதான் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது அந்தப் பட்டியலில் ரஷ்யா, இங்கிலாந்து, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

அமேசான் பழங்குடிகளுக்கு ஆபத்து... தொழில் நிறுவனங்களுக்கு வனத்தைத் திறந்துவிடும் பிரேசில்!

ரஷ்யாவில் 2,62,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் அங்கு உயிரிழப்புகள் 2000 ஆக இருப்பது பெரும் ஆறுதலாக உள்ளது. அதேபோல் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,000-க்கும் அதிகமாகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,998 ஆகவும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக உள்ளது பிரேசில். அந்நாட்டு அரசுதான் கொரோனா பரவத்தொடங்கியது முதல் தற்போது வரை அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் பெரும் அலட்சியம் காட்டி வந்தது. இதன் விளைவாக அங்கு 2,20,291 பேர் பாதிக்கப்பட்டு 14,962 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில்
பிரேசில்
Felipe Dana

இந்நிலையில், பிரேசிலில் அதிகரித்து வரும் வைரஸ் பரவல் மற்றும் உயிரிழப்புகளாலும் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் அழுத்தம் தாங்க முடியாமலும் அந்நாட்டுத் தேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டெய்ச் ( Nelson Teich), தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை பிரேசில் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. ஆனால் நெல்சன் ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படவில்லை. அங்கு கடந்த ஒரு மாதத்துக்குள் தன் பதவியை ராஜினாமா செய்யும் இரண்டாவது அமைச்சராக நெல்சன் உள்ளார்.

`நிரம்பிய குளிரூட்டப்பட்ட அறைகள்; ஒரே குழியில் 5 உடல்கள்’ - புதைக்க இடமின்றித் தவிக்கும் அமேசான்

முன்னதாக கொரோனா பரவல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போசனாரோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு நெல்சனைப் புதிய அமைச்சராக அறிவித்தார் அதிபர். ஆனால் ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரும் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்

தன் ராஜினாமா தொடர்பாகப் பேசியுள்ள நெல்சன், ‘வாழ்க்கை முழுவதும் தேர்வுகளால் நிறைந்தது. இன்று நான் பதவியிலிருந்து வெளியேறுவதைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் ஒரு அமைச்சராக இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை” என்று கூறி செய்தியாளர்களின் பிற கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துள்ளார்.

நெல்சன் அமைச்சராகப் பதவியேற்றபோது அதிபருடன் இணைந்து அவரது ஆலோசனைப்படி செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரேசிலின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது இறப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஆனால் சமீப வாரமாக தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மலேரியா மற்றும் குளோரோகுயின் மருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பாக அதிபருக்கும் நெல்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் நெல்சன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் டெய்ச்
நெல்சன் டெய்ச்

அமைச்சர்களின் தொடர் ராஜினாமா பற்றிப் பேசியுள்ள யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் தொற்று நோயியல் பேராசிரியர் ஆல்பர்ட் கோ, “ தலைமை இல்லாமை ஒரு மோசமான நிர்வாகத்தைக் காட்டுகிறது. ஒரே மாதத்தில் பிரேசில் இரண்டு அமைச்சர்களை இழந்திருப்பது உண்மையில் தொற்று நோயை எதிர்த்துப் போட்டியிடும் நாட்டின் திறனில் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.

பிரேசிலில் நேற்று ஒரேநாளில் 844 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கொண்ட சர்வதேசப் பட்டியலில் பிரேசில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு