Published:Updated:

அடித்து நொறுக்கப்பட்ட நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் - என்ன நடக்கிறது பிரேசிலில்?

பிரேசில் வன்முறை

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையால் ஒட்டுமொத்த பிரேசிலும் பற்றியெரிகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் - என்ன நடக்கிறது பிரேசிலில்?

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையால் ஒட்டுமொத்த பிரேசிலும் பற்றியெரிகிறது.

Published:Updated:
பிரேசில் வன்முறை

`முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையால் ஒட்டுமொத்த பிரேசிலும் பற்றியெரிகிறது. ஆளும் இடதுசாரி அதிபருக்கு எதிராக ஒன்று திரண்டவர்கள், நாட்டின் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்றம் என அனைத்து அரசுக் கட்டடங்களையும் சூறையாடியிருக்கின்றனர். கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும், பிரேசிலில் பதற்றம் கொஞ்சமும் தணிந்தபாடில்லை. என்னதான் நடக்கிறது பிரேசிலில்?'

ஜெய்ர் போல்சனாரோ - லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா
ஜெய்ர் போல்சனாரோ - லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா
ட்விட்டர்

தேர்தல் தோல்வி போராட்டம்!

2021, அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலில், தீவிர இடதுசாரித் தலைவரான லுலா டா சில்வா 50.9% வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வலதுசாரி அதிபர் ஜெயிர் போல்சனாரோ 49.1% வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். குறைந்த வாக்கு சதவிகிதத்தில் தான் தோல்வியடைந்ததால், தோல்வியை ஏற்க மறுத்த முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டி லுலா டா சில்வா வெற்றிக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவந்தார். மேலும், லுலா அதிபராவதைத் தடுக்க ராணுவத் தலையீட்டை வலியுறுத்தி, பிரேசிலின் ராணுவத் தலைமையகங்களுக்கு முன்பாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள்.

அந்த நிலையில், எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தன்று பிரேசிலின் 39-வது அதிபராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் லுலா டா சில்வா. அதேசமயம், பதவியேற்பு நிகழ்ச்சியில்கூட கலந்துகொள்ளாமல் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார் போல்சனாரோ. இதனால் ஜெயிர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அதிபர் லுலாமீது கடும் ஆத்திரமடைந்தனர். மேலும், ``அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல்வாதியான லுலா பதவி விலக வேண்டும். ஜெயிர் போல்சனாரோவே உண்மையான வெற்றியாளர்" எனச் சமூக வலைதளங்களில் பரப்பிவந்தனர்.

போராட்டத்தில் போல்சனாரோ ஆதரவாளர்கள்
போராட்டத்தில் போல்சனாரோ ஆதரவாளர்கள்

வன்முறை வெறியாட்டம்!

இந்த நிலையில், ஜனவரி 8-ம் தேதி போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தலைநகர் பிரேசிலியாவில் ஒன்றுதிரண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள், காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி அங்குள்ள அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்ற, நாடாளுமன்ற கட்டடங்களுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அறை ஜன்னல்கள், மேசை நாற்காலிகள், கலைப்பொருள்கள் எனக் கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். கற்களை வீசி கண்ணாடி ஜன்னல்கள், கதவுகளை உடைந்தெறிந்தனர். அதன் பிறகு, மிகவும் தாமதமாகக் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர் காவல்துறையினர். இதனால் பிரேசில் எங்கும் பதற்றமான சூழல் வெடித்தது.

போல்சனாரோ ஆதரவாளர்கள் வன்முறை
போல்சனாரோ ஆதரவாளர்கள் வன்முறை

வேடிக்கை பார்த்த காவல்துறை!

ஏற்கெனவே அதிபர் லுலா, போராட்டக்காரர்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், சம்பவத்தன்று போராட்டக்காரர்கள்மீது பெரும்பாலான காவல்துறையினர் எந்தவொரு தீவிரமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து 7 கி.மீ பேரணி நடத்தவும், அரசுக் கட்டடங்களுக்குள் நுழையவும் வழிவிட்டிருக்கின்றனர். உச்சகட்டமாக காவல்துறையினர் பலர் போராட்டக்காரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதை உறுதிசெய்யும்விதமாக அதிபர் லுலா, `` தலைநகர் பிரேசிலியாவில் நிகழ்ந்த வன்முறையைத் தடுக்க காவல்துறையினர் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை" என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

அதேபோல, இந்த வன்முறையின் பின்னணியில் முன்னாள் அதிபர் போல்சனாரோதான் இருக்கிறார் என ஆளும் இடதுசாரித் தலைவர்கள் கடுமையாகக் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, அதிபர் லுலா டா சில்வாவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி, பொதுக்கூட்டங்களையும் நடத்திவருகின்றனர்.

ஜெய்ர் போல்சனாரோ
ஜெய்ர் போல்சனாரோ

மறுப்பு தெரிவித்த போல்சனாரோ!

ஆனால், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``சட்டத்தின் வடிவில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள்தான் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. நான் எப்போதும் சட்டங்கள், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, புனிதமான சுதந்திரம் ஆகிய நமது அரசியலமைப்பின் நான்கு கோடுகளையும் மதித்து பாதுகாத்துவருகிறேன். எனக்கும், இந்தத் தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை" என விளக்கமளித்திருக்கிறார்.

மோடி - ஜோ பைடன்
மோடி - ஜோ பைடன்

கண்டனம் தெரிவித்த உலகத் தலைவர்கள்!

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரேசிலின் வன்முறைச் சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ``பிரேசிலிலுள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம், நாசவேலைகள் பற்றிய செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசிலிய அதிகாரிகளுக்கு எங்களது முழு ஆதரவை வழங்குகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``பிரேசில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலைக் கண்டிக்கிறேன். ஜனநாயக நிகழ்வுகளுக்கு எங்கள் முழு ஆதரவு இருக்கிறது. மக்களின் விருப்பத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என ஆவலுடன் இருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

`லுலா டா சில்வா வெற்றி; போல்சனாரோ தோல்வி - காரணம் என்ன?'

கடந்த 2019-ம் ஆண்டு, பிரேசில் அதிபரான ஜெய்ர் போல்சனாரோ, `நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகக் காடுகளை அழிப்பதில் தவறில்லை; வெறும் 10 லட்சம் பழங்குடியினருக்காக நாட்டின் 13% நிலபரப்பைக் விட்டுக்கொடுக்க முடியாது' என வெளிப்படையாகவே வாதிட்டார். இவர் பதவியேற்றது முதல், கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமேசான் காடழிப்பு 75% தீவிரமாக்கப்பட்டது. ஒவ்வொரு விநாடியும் சுமார் 1.5 ஏக்கர் அளவிலான காடு அழிக்கப்பட்டுவருவதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. மேலும், ஏராளமான பழங்குடி, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

அமேசான்
அமேசான்
RT

தொடர்ந்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியது, பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்தும் அலட்சியம் காட்டியது, நாட்டின் பொருளாதாரச் சரிவு, அமேசான் காடழிப்பு, கார்ப்பரேட் ஆதரவு மற்றும் பழங்குடி எதிர்ப்பு நிலைப்பாடு போன்ற முன்னாள் வலதுசாரி அதிபர் ஜெயிர் போல்சனாரோவின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த, கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

அதேசமயம், பழங்குடிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நன்மதிப்பைப் பெற்ற, அமேசான் காடுகளைப் பாதுகாப்பதில் உறுதியான கொள்கை முடிவில் இருந்த இடதுசாரி அதிபர் லுலா டா சில்வாவை பிரேசில் மக்கள் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர்.