Published:Updated:

ட்ரம்ப் சந்திப்புக்குப் பின் பிரேசில் அதிபருக்கு கொரோனா..? - வெளியான தகவலும் மகனின் மறுப்பும்

ட்ரம்ப்  - பிரேசில் அதிபர் போல்சனாரோ
ட்ரம்ப் - பிரேசில் அதிபர் போல்சனாரோ ( AP )

கொரோனா வைரஸின் தாக்கம் பிரேசிலில் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டில் பொது நிகழ்வுகளையும், கூட்டங்களையும் ரத்து செய்வது தொடர்பாக அந்த நாட்டு அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று பல நாட்டு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலருக்கு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பிரேசில் நாட்டு அதிபர் ஜயிர் போல்சனாரோ, அதிபரின் பத்திரிகை செயலாளர் வஜின்கார்டன் எனப் பலரும் அமெரிக்காவுக்கு கடந்த வாரம் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளனர். அதிபர் ட்ரம்ப், ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தனது ரிசார்ட்டில், பிரேசில் தலைவர்களுக்கு விருந்து உபசாரம் அளித்துள்ளார்.

ட்ரம்ப்  - போல்சனாரோ
ட்ரம்ப் - போல்சனாரோ
AP

அதில் பிரேசில் குடியரசுத் தலைவர் மற்றும் அவரின் பத்திரிகை செயலாளர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். விருந்து உபசாரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் பிரேசில் அதிபர் போல்சனாரோ. அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது, அனைத்து தலைவர்களும் மிக நெருங்கிய இடைவெளியில் இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும், இருநாட்டு தலைவர்களும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு ஒன்றாக இணைந்து பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்த சில நாள்களில், பிரேசில் அதிபரின் பத்திரிகை செயலாளர் வஜின்கார்டனுக்கு கடந்த வியாழன் அன்று கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனிடையே, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

`வெள்ளை மாளிகை சந்திப்பு.. ஆஸ்திரேலிய அமைச்சருக்கு கொரோனா' -வொர்க் ஃப்ரம் ஹோம் மோடில் இவாங்கா

விருந்து உபசாரத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனி கிரிஷாம், அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைத்து வகையான சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அந்த அறிக்கையில், அமெரிக்க அதிபருடன் சந்தித்த பிரேசில் தலைவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நபருடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்கவில்லை என்பதால் ட்ரம்ப் உட்பட அமெரிக்க அதிகாரிகள் யாரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளை மாளிகையின் மருத்துவக் குழு மற்றும் அமெரிக்காவின் ரகசிய அமைப்பு அதிபர் மற்றும் துணை அதிபரின் குடும்பங்கள், வெள்ளை மாளிகை ஊழியர்கள் என அனைவரையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ட்ரம்ப் மற்றும் பிரேசில் அதிபர் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அப்போது, கொரோனா வைரஸின் தொற்று குறித்து நான் சிறிதும் கவலைப்படவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் அசாதாரணமாக எதுவும் செய்யவில்லை. குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு அனைவரும் அமர்ந்திருந்தோம் என்றார். இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவியுள்ளதால், அங்கு செல்வதற்கு ட்ரம்ப் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்  - போல்சனாரோ
ட்ரம்ப் - போல்சனாரோ
AP

கொரோனா தொற்று ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முன், மியாமியில் கடந்த செவ்வாய் அன்று செய்தியாளர்களிடம் பேசிய போல்சனாரோ, கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தால், எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, பிரேசிலிய வர்த்தக சந்தைகளை உலுக்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் குறித்த அச்சம், ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை ஆகும். வைரஸ் தொற்றானது கொரோனா வைரஸ் எனக் கண்டறியப்பட்ட பின்தான் அது குறித்தான அச்சங்கள் அதிகரித்துள்ளது. முன்னர், கொரோனாவைவிட வேறு வகை வைரஸ் தொற்றால் பலர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறினார்.

இதனிடயே, தனது பத்திரிகை ஆலோசகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரேசில் குடியரசுத் தலைவர் போல்சனாரோவுக்கும் தொற்று பரவி இருக்கலாம் என மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தியுள்ளனர். சோதனை முடிவுகள் குறித்து எந்தத் தகவலும் அளிக்கப்படாத நிலையில், குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்துள்ளதாக பிரேசில் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசில் நாட்டின் செய்தி நிறுவனங்கள் போல்சனராவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவரின் மகன் தன் தந்தைக்கு கொரோனா வைரஸ் இல்லை என மறுப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். மேலும், தனக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று இல்லை என முடிவுகள் வந்திருப்பதாக, ஜைர் போல்சனாரோ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் சந்திப்புக்குப் பின் பிரேசில் அதிபருக்கு கொரோனா..? - வெளியான தகவலும் மகனின் மறுப்பும்

இந்த நிலையில், பிரேசிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு 69 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டும், 900 பேர் வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகம் கொள்வதாகவும் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் பிரேசிலில் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டில் பொது நிகழ்வுகளையும், கூட்டங்களையும் ரத்து செய்வது தொடர்பாக அந்த நாட்டு அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே, இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரேசில் அரசு எடுக்காமல் இருப்பது பொறுப்பற்ற தன்மையைக் கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு