Published:Updated:

சர்வதேச விதிமீறல்; கைது செய்யப்பட்ட தூதர்! - இங்கிலாந்திடமும் மோதும் இரான்

இங்கிலாந்து தூதரை இரான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ள விவகாரம் அந்நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இரான் போராட்டம்
இரான் போராட்டம் ( AP )

இரான் நாட்டு ராணுவ தளபதியை அமெரிக்கப் படைகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகள் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது இரான். இந்த போர் பதற்றத்தின் நடுவே, இரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 176 பயணிகளுடன் உக்ரைன் தலைநகர் நோக்கிப் புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானத்தை, இரான் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது.

இரான் போராட்டம்
இரான் போராட்டம்
AP

இதை அந்நாடே ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டு விமானம் மீது இரான் தாக்குதல் நடத்திய விவகாரம் தற்போது சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளது. இரான் அரசின் இந்த செயலைக் கண்டித்துப் பாதிக்கப்பட்டவர்களும் இளைஞர்களும் தெஹ்ரானில் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இரான் நாட்டு மூத்த தலைவர் அலி காமேனியை பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

`அமெரிக்கத் தேர்தலுக்கு காத்திருக்கிறார்களோ?!' -எதிர்க்கட்சியை கிண்டலடித்து இரானை விமர்சித்த ட்ரம்ப்

இந்நிலையில் தெஹ்ரானில் உள்ள அமிர் கபிர் பல்கலைக்கழகத்தில் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் இரான் நாட்டுக்கான இங்கிலாந்து தூதர் ரோப் மெக்ரைன் கலந்துகொண்டுள்ளார். அதே நேரம், பல்கலைக்கழக வாயிலில் விமானத்தைத் தாக்கிய இரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இங்கிலாந்து தூதர்
இங்கிலாந்து தூதர்

அப்போது அங்கு வந்த இங்கிலாந்து தூதர் ரோப் மெக்ரைனை, இரான் பாதுகாப்புப் படையினர் கைது செய்து சில மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து பின்னர், விடுவித்துள்ளனர். `போராட்டத்தைத் தூண்டிய குற்றத்துக்காகத் தூதர் கைது செய்யப்பட்டார்' என இரான் அரசு விளக்கம் கொடுத்துள்ளது. விடுதலைக்குப் பிறகு, தான் இரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாக ரோப் கூறியிருந்தார். ஆனால், இது இரானுக்கு மீண்டும் ஒரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

`அமெரிக்க நெருக்கடியால் பதற்றத்தில் நடந்துவிட்டது’ -  விமானத் தாக்குதலை ஒப்புக்கொண்ட இரான்

அமெரிக்கா - இரான் இடையேயான பிரச்னையே இன்னும் ஓய்வடையாத நிலையில் தற்போது இங்கிலாந்துக்கும் இரானுக்கும் இடையே புதிய பிரச்னை உருவாகியுள்ளது. இரானின் இந்தச் செயலுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இரான் போராட்டம்
இரான் போராட்டம்
AP

‘இரான் எந்த ஒரு அடிப்படை காரணமும் விளக்கமும் அளிக்காமல் எங்கள் நாட்டுத் தூதரைக் கைது செய்துள்ளது. இது சர்வதேச விதிமீறல், தங்கள் செயலுக்காக இரான் மன்னிப்பு கேட்க வேண்டும். தங்களின் செயலால் சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்ட நாடாக இரான் மாறுகிறது’ என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார்.