Published:Updated:

`ரிஷி சுனக் எதிர்கொள்ள இருப்பது கடும் சவால்!’ - லண்டன் கவுன்சிலர், சென்னை பெண் ரேஹானா

பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருப்பதற்கும், சிறுபான்மை இனப் பின்னணியில் உள்ளவர்களை நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சிகளின் அரசியல் மற்றும் கொள்கை உருவாக்கும் பதவிகளை வகிக்க ஆதரவளிப்பதற்கும் இங்கிலாந்து மக்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும்.

`ரிஷி சுனக் எதிர்கொள்ள இருப்பது கடும் சவால்!’ - லண்டன் கவுன்சிலர், சென்னை பெண் ரேஹானா

பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருப்பதற்கும், சிறுபான்மை இனப் பின்னணியில் உள்ளவர்களை நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சிகளின் அரசியல் மற்றும் கொள்கை உருவாக்கும் பதவிகளை வகிக்க ஆதரவளிப்பதற்கும் இங்கிலாந்து மக்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும்.

Published:Updated:

சதுரங்க ஆட்டத்தில், ராணி இல்லாமல் சிதறிக்கிடக்கும் படைபோல இருக்கிறது, இன்றைய இங்கிலாந்தின் நிலவரம். கடந்த மாதமே பிரதமராக பதவி ஏற்க வேண்டிய, முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், அரசியல் ஆடுகளத்தில் நடந்த `அரசியலால்’ அக்டோபர் 25-ம் தேதி, இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

`இன்ஃபோஸிஸ்’ நாராணய மூர்த்தியின் மருமகனாக, இந்திய மக்களுக்கு அறிமுகமான ரிஷி, தன்னுடைய நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததும், அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவை நிலைகுலைந்தது. கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் பாராளுமன்றத்திலேயே, `பார்ட்டி' கொண்டாடியது உட்பட பல்வேறு சர்ச்சைகள் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக எழுந்தபோது, தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைவர் என்றும் பாராமல், `அரசாங்கம் முறையாகவும், திறமையாகவும், தீவிரமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பக்கம் நிற்கவே விரும்புகிறேன்' என்று தன் பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ரிஷி சுனக். அவரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் ஷாஜித் ஜாவித் (பாகிஸ்தானிய வம்சாவளி) பதவி விலக, அடுத்தடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதவி விலகினார்கள்.

 லிஸ் ட்ரஸ் (Liz Truss)
லிஸ் ட்ரஸ் (Liz Truss)
ட்விட்டர்

தொடர்ந்த நிகழ்வுகளாலும் விளைவுகளாலும், கடந்த ஜூலை 7-ம் தேதி கவிழ்ந்தது போரீஸின் அமைச்சரவை. அடுத்து யார் பிரதமர் என பத்திரிகைகளும், அரசியல் விமர்சகர்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட, இப்பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ரிஷி தான். முந்தைய பிரதமர் லிஸ் டிரஸ் மூன்றாவது இடத்தில்தான் இருந்தார்.

அப்போதே, `ஒரு ஆசியன் பிரதமரானால்...’ என்ற தலைப்பிலும், நம்பர் 10 டவுனிங் தெரு (இங்கிலாந்து பிரதமரின் இல்லம்) முன் மாவிலை தோரணங்கள் அலங்காரத்துடன், கதவில் ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது போன்றும் மீம்கள் இணையதளங்களில் வைரலாகின. அத்தோடு, ரிஷி வீட்டிற்கு முன் செருப்பை கழட்டி விட்டுச் செல்லும் ஃபோட்டோஷாப் படமும் பரவியது. `இனி பிரிட்டிஷ் பாராளுமன்ற விருந்துகளில், வாழை இலையில் சாதம் பறிமாறப்படும்’ என்ற மீம் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்தது. ஒருபுறம் சிரிப்பு வரவைக்கும் படமாக இருந்தாலும், இதுவும் ஒருவகையான இனவெறியே என்றனர் ஒரு தரப்பினர்.

இங்கிலாந்தில் வாழும் சிறுபான்மை மக்களின் பட்டியலில் முக்கியப் பங்கு வகிப்பது, இந்தியர்களே. மருத்துவத் துறையில் பிரிட்டன் மக்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது (2016 டிசம்பர் புள்ளிவிபரப்படி 12%) இந்தியர்கள்தான். தகவல் தொழில்நுட்பத்துறை பற்றி சொல்லவே வேண்டாம். பல முன்னணி நிறுவனங்கள் தென் இந்தியாவைச் சார்ந்த ஐ.டி பணியாளர்களை நம்பியே உள்ளன. இங்குள்ள எந்த பேங்க் கஸ்டமர் கேர்-க்கு தொடர்பு கொண்டாலும். பதில் சொல்வது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏதாவது ஒரு குரலாகத்தான் இருக்கும்.

இந்தச் சூழலில், ரிஷிக்கு இந்தியாவோடு சேர்ந்து இந்து மதத்தை பின்பற்றும் பிற நாடுகளும் பெரும் ஆரவாரத்துடன் ஆதரவாக கருத்துகளைப் பகிர்ந்தன. அதே நேரத்தில், `அவர் எம்.பியாக பதவியேற்ற போது, பகவத் கீதையை கையில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்தார். ஒரு கிறித்துவ நாட்டின் அரசியலைப்பில் முக்கியப் பங்கு வகிப்பவர், இந்து மத்தை முன்னிலைப்படுத்தினால், எப்படி ஒருமைப்பாட்டை வளர்ப்பார்?' என்ற கேள்வி எழுப்பினர் ஐரோப்பிய மக்கள். ஐரோப்பிய நண்பர்களிடம் பேசும்போதுகூட, 'ரிஷியா? நோ வே...' என்று உரத்த குரலில் மறுத்தார்கள்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

திறமையும் தகுதியும் இருந்தும், சிறுபான்மை மக்களில் ஒருவரை தனது கட்சியின் தலைவராக, நாட்டின் பிரதமாக தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டினர் இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியினர். இந்தச் சூழ்நிலையில்தான் போரீஸ் ஜான்சன் பதவி விலகி இரண்டு மாதங்கள் கழித்து, வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்த லிஸ் டிரஸ் என்னும் மேர எலிசபெத் டிரஸ், இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்றார். அதற்கு அடுத்த இரண்டு நாள்களிலேயே மகாராணி எலிசபெத்தின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியது பிரிட்டன்.

பிரதமரான மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்க முடியாமல், மகாராணியின் இறுதிச்சடங்கு, அரச குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள், ஒரே சமயத்தில் வெளிநாட்டு அரசியல் தலைவர்களின் லண்டன் வருகை, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, வீட்டுக்கடன் வட்டி விகித அதிகரிகரிப்பு என சுமைகள் தோளில் அழுத்த, மூச்சு முட்டித் தவித்துப்போனார் லிஸ். ஒருமாதம் முடியும் முன்னே, `இந்தம்மா தாங்கமாட்டாங்க. எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா கடிதம் வரலாம்’ என்று பிரிட்டன்வாசிகள் பேசத் தொடங்கினர். அது பொய்யாகவில்லை.

அரசியல் அழுத்தம் தாங்காமல், `நன்றி வணக்கம்’ எனச் சொல்லி விடை பெற்று, 50 நாள்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர் என்று வரலாற்றில் இடம் பிடித்தார் லிஸ். மீண்டும் போரிஸ் பிரதமர் ஆவாரா என ஊடகங்கள் விவாதம் நடத்த, ரிஷி சுனக்கை பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியினர் அறிவித்தனர்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

இந்த வருட தீபாவளிக்கு, இங்கிலாந்து மிகச்சிறந்த பரிசை ரிஷிக்கு வழங்கியிருக்கிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் வேலையிழந்தவர்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் உதவித்தொகையும், வட்டியில்லா கடன்களையும், அப்போது நிதி அமைச்சராக இருந்த ரிஷி வாரி வழங்கினார் என்று ஒரு தரப்பினர் பாராட்டினாலும், அதனால்தான் நாட்டின் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது, மின்சாரம், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலை கழுத்தை நெரிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இங்கிலாந்தில், சிட்டி ஆஃப் லண்டன் கார்ப்பரேஷனின் காமன் கவுன்சிலராக உள்ளவர், ரேஹானா அமீர். சென்னையில் பிறந்த இவர், லண்டன் காமன் கவுன்சிலில் சுயேட்சை கவுன்சிலராக தேர்வான முதல் பெண். புதிய பிரதமர் சுனக் பற்றி அவரிடம் கேட்டோம்.

``1.5 மில்லியன் பிரிட்டிஷ் இந்திய சமூகம், இங்கிலாந்து பொருளாதாரம் மற்றும் பிரிட்டிஷ் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமான வர்த்தக நடவடிக்கைகள் 2022-ம் ஆண்டில் 25.7 பில்லியன் பவுண்ட்ஸ் ஆகும். இது கடந்த ஆண்டை விட 35.2% அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமர் ஆனது, புலம் பெயர்ந்த மக்களின் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஆகும். பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருப்பதற்கும், சிறுபான்மை இனப் பின்னணியில் உள்ளவர்களை நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சிகளின் அரசியல் மற்றும் கொள்கை உருவாக்கும் பதவிகளை வகிக்க ஆதரவளிப்பதற்கும் இங்கிலாந்து மக்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும். நாட்டுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது, பண வீக்கத்தால் குடும்பங்களும், வணிக அமைப்புகளும் திணறுகின்றன. ரிஷி சுனக் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.

ரேஹானா அமீர்
ரேஹானா அமீர்

மகாராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு, இங்கிலாந்து மக்கள் மத்தியில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு கடந்த சில மாதங்களில் வீட்டு வாடகையின் வரம்பு 3.4% உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே நடுத்தர குடும்பங்கள் லண்டன் நகரை விட்டு, வேறு நகரங்களுக்கு இடம் பெயர வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். திரும்பும் திசையெல்லாம் 'காஸ்ட் ஆஃப் லிவ்விங்' என்ற தலைப்பில் பொருளாதார நெருக்கடி பற்றியே பேச்சாக இருக்கிறது.

இங்கிலாந்தின் நிதி அமைச்சராக இருந்தவருக்கு நாட்டின் நிலைமையும் மக்களின் தேவையும் நன்றாகவே புரியும். ஒரு காலத்தில் நம்மை ஆண்ட நாட்டுக்கு, ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆட்சி செய்துகாட்டி, பாடம் கற்பியுங்கள் ரிஷி!

- லண்டனிலிருந்து லாவண்யா