Published:Updated:

``உங்க வேலையை மட்டும் பாருங்க..!" ட்ரம்பை எச்சரிக்கும் பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவர்

பிரிட்டன் பொதுத் தேர்தலில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து எதிர்க்கட்சியின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். பிரிட்டனின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஜெரிமி கோர்பின், டொனால்ட் ட்ரம்ப்
ஜெரிமி கோர்பின், டொனால்ட் ட்ரம்ப்

``கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பது தமிழ் பழமொழியாக இருக்கலாம். ஆனால் இன்றைய சூழலுக்கு `சென்ற இடமெல்லாம் சர்ச்சை’ எனப் புதிய பழமொழி எழுதப்பட்டால் அதன் உலக உதாரணமாக இருக்கக்கூடிய தகுதி கொண்ட முதல் நபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான்.

வெற்றி பெற்ற பதவியில் அமர்ந்த பிறகு தலைவர்கள் சர்ச்சைகளை சந்திக்கக்கூடும். ஆனால், வெற்றி பெற்றதே சர்ச்சையாக தொடங்கியது அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு மட்டுமே. அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலையீடு என ட்ரம்பின் தொடக்கப்புள்ளியே பல பல சர்ச்சைகளைக் கொண்டது.

Trump
Trump
AP
`மிகவும் மோசமாக நடத்தப்படுகிறேன்’-  பிறந்த நகரத்தைவிட்டு நிரந்தரமாக வெளியேறும் ட்ரம்ப் வேதனை

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான வாய்த் தகராறு, மெக்சிகோ உடன் எல்லைச்சுவர் வாய்க்கால் தகராறு, ஹௌடி மோடி நிகழ்வுக்குப் பிறகு பிரதமர் மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என அழைத்தது என ட்ரம்பின் அத்தியாயம் சற்றே விசித்திரமானது. தற்போது லண்டனில் உள்ள ஒரு வானொலிக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக தற்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

பிரிட்டன், டிசம்பர் மாதம் பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த ஆதரவு பிரிட்டனில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. ப்ரெக்ஸிட் தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தை என பிரிட்டன் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, பொதுத்தேர்தலில் போரிஸ் ஜான்சனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரிமி கோர்பின் தலைமையிலான லேபர் கட்சியும் பிரதான போட்டியில் இருக்கின்றன.

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி... எங்கு தவறு நடந்தது தெரியுமா?!

ப்ரெக்ஸிட் கட்சித் தலைவர் நிகெல் ஃபராகே உடனான வானொலி உரையாடலில்தான் ட்ரம்ப் அந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் நிகெல் ஃபராகேவும், போரிஸ் ஜான்சனும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதோடு நில்லாமல் ``போரிஸ் ஜான்சன் ஒரு சிறந்த மனிதர்- இன்றைய காலத்துக்கு அவர்தான் ஏற்றவர். நீங்கள் இருவரும் மகத்தான காரியங்களைச் செய்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் இருவரும் இணைந்தால் தடுக்க முடியாத சக்தியாக விளங்குவீர்கள்” என்று வாழ்த்துரைகளை வாரி வழங்கியுள்ளார். இதிலென்ன சர்ச்சை எனத் தோன்றலாம்.. நிற்க.. அதோடு விட்டிருந்தால் பரவாயில்லையே.

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியை சாடிய ட்ரம்ப், ``கோர்பின் உங்கள் நாட்டுக்கு மிகவும் மோசமானவராக இருப்பார். அவர் மிகவும் மோசமானவர், அவர் உங்களை மோசமான வழியில் அழைத்துச் சென்றிடுவார். அவர் உங்களை அவ்வளவு மோசமான இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். உங்கள் தேசம் மிகப்பெரிய ஆற்றல் கொண்டது, பிரிட்டன் மிகச் சிறந்த நாடு” என எதிர்க்கட்சியைச் சீண்டி சர்ச்சைக்குத் திரியைத் தூண்டிவிட்டிருக்கிறார் ட்ரம்ப்.

போரிஸ் ஜான்சன், ஜெரிமி கோர்பின், டொனால்ட் ட்ரம்ப்
போரிஸ் ஜான்சன், ஜெரிமி கோர்பின், டொனால்ட் ட்ரம்ப்

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் ``டொனால்ட் ட்ரம்ப் பிரிட்டன் தேர்தலில் தலையிட்டு அவருடைய நண்பர் போரிஸ் ஜான்சனை வெற்றி பெறச் செய்ய முயற்சி செய்கிறார். ட்ரம்ப் பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையைக் கைப்பற்ற குறிவைக்கிறார். லேபர் கட்சி ஜெயித்தால் அது சாத்தியப்படாது என்பது ட்ரம்பிற்கு நன்றாகத் தெரியும்” எனப் பதிவிட்டிருந்தார்.

பிரிட்டன் பொதுத் தேர்தலில் தேசிய மருத்துவ சேவை பிரதான பேசுபொருளாக இருந்துவருகிறது. ட்ரம்பின் இந்த ஆதரவு ஜான்சனுக்கு எதிராகவும் வினையாற்றக்கூடும் என ஆருடங்கள் சொல்கின்றன. அந்நிய நாட்டை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட ஜான்சன் அனுமதிக்கிறார் என பிரசாரம் செய்யவும் எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளன. ட்ரம்பின் இந்தப் புதிய வார்த்தை வெடி போரிஸ் ஜான்சனுக்கு ஏற்றமா... ஏமாற்றமா? டிசம்பர் 12 தேர்தல் முடிவுகள் சொல்லக்கூடும்...!