Published:Updated:

இளவரசர் பிலிப்: லேண்ட்ரோவர் காரில் ஊர்வலம்; 30 நபர்களுக்கே அனுமதி! -இறுதிச்சடங்கு குறித்த தகவல்கள்

பிரிட்டன் இளவரசர் பிலிப்
News
பிரிட்டன் இளவரசர் பிலிப்

இளவரசர் பிலிப் தன்னுடைய இறுதி நாள்களில், தனது மறைவின்போது தான் விரும்பிப் பயணித்த லேண்ட் ரோவர் வாகனத்தில்தான் தன்னுடைய உடலைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், தற்போது அவருடைய லேண்ட் ரோவர் வாகனமே இறுதி ஊர்வலத்தில் அவரைச் சுமந்து செல்லவிருக்கிறது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிக நீண்டநாள் அரச பதவியில் இருந்தவருமான இளவரசர் பிலிப் கடந்த 9-ம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இளவரசர் பிலிப்பின் மரணம் இங்கிலாந்து நாட்டு மக்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வருகிற 17-ம் தேதி செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறவிருக்கிறது. தற்போது இளவரசர் உடல் வின்ட்சர் கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, மன்னர் குடும்பத்தில் யாராவது உயிரிழந்துவிட்டால், அரசு மரியாதையுடன், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இறந்தவர்களுக்குத் தங்கள் இதய அஞ்சலியைச் செலுத்துவார்கள். இந்த வழக்கமும் அனுசரிப்பும் பாரம்பர்யமிக்க அரச குடும்பத்தினருக்கு மட்டுமே உரித்தானது. ஆனால், இந்த முறை இங்கிலாந்து அரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகவும், அவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேராலும் ஆரவாரமின்றி மிகவும் எளிமையான முறையில் நடைபெறவிருக்கிறது.

இளவரசர் பிலிப் - ராணி எலிசபெத்
இளவரசர் பிலிப் - ராணி எலிசபெத்

இங்கிலாந்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இளவரசர் பிலிப்பின் இறுதி அஞ்சலி மற்றும் ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவாலயத்தில் நடைபெறவிருக்கும் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 பேருக்கு மட்டுமே இங்கிலாந்து அரண்மனை நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. அதன் காரணமாக இளவரசர் பிலிப் உடல் இருக்கும் சவப்பெட்டி பொதுமக்களின் பார்வைக்குப் பொதுவெளியில் வைக்கப்படப்போவதில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

17-ம் தேதி அன்று வின்ட்சர் கோட்டையின் தனி தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள இளவரசர் பிலிப்பின் உடல், கோட்டையின் 'ஸ்டேட் என்ட்ரன்ஸ்' (State Entrance) எனப்படும் நுழைவாயிலில் சில நிமிடங்கள் வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சவப்பெட்டி மாற்றியமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் வகை வாகனத்தில் ஏற்றப்பட்டு ஜார்ஜ் சேப்பலுக்குக் கொண்டு செல்லப்படும். இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலத்துக்குப் பயன்படுத்தப்படவிருக்கும் லேண்ட் ரோவர் வகை வாகனம் அவர் நீண்டகாலம் விரும்பிப் பயணித்த வாகனம். தன் இறுதி நாள்களில் இளவரசர் தன்னுடைய மறைவின்போது அந்த வாகனத்தில்தான் தன்னை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் தற்போது அவரின் 'லேண்ட் ரோவர்' வாகனமே அவரைச் சுமந்து செல்லவிருக்கிறது.

இளவரசர் பிலிப்பின் லேண்ட் ரோவர் வாகனம்
இளவரசர் பிலிப்பின் லேண்ட் ரோவர் வாகனம்

இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டி வாசமிக்க வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவரின் இத்தனைகால பொது வாழ்வை அர்த்தப்படுத்தும்விதமாக, பிரிட்டிஷ் கொடிகள் அவர் மீது போர்த்தப்பட்டுள்ளன. இளவரசரின் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் மட்டும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நோய்த் தொற்று தாக்கம் காரணமாக, தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

இளவரசர் பிலிப்பின் பேரன் ஹாரி அமெரிக்காவிலிருந்து இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஹாரி தற்போது நாட்டிங்ஹாம்மில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார். அவர் மனைவி மேகன் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை. இங்கிலாந்திலிருந்து அரச பதவிகளைத் துறந்துவிட்டுச் சென்ற பின் இளவரசர் ஹாரி இங்கிலாந்துக்கு வருவது இதுவே முதன்முறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் எலிசபெத் ராணியின் நான்கு பிள்ளைகள், எட்டு பேரப்பிள்ளைகள், இன்னும் சில குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ஏப்ரல் 17-ம் தேதி இளவரசரின் உடல் வின்ட்சர் கோட்டையிலிருந்து லேண்ட் ரோவர் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இளவரசர் உடல்வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டியை 'ராயல் மெரைன்ஸ்' (Royal Marines) எனப்படும் பிரிட்டிஷ் ராணுவத்தினர்தான் வாகனத்தில் ஏற்றி வைத்து சவப்பெட்டியுடன் பயணிப்பார்கள். அப்போது `கிரனடியர் கார்ட்ஸ்' (Grenadier Guards) என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க எட்டு நிமிட அணிவகுப்பை நடத்துவார்கள். ஊர்வலத்தின்போது இருபுறமும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பார்கள். நடுவில் வாகனத்துடன் இளவரசர் ஹாரிஸ், வேல்ஸ் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் நடந்து செல்வார்கள்.

இங்கிலாந்து ராணுவம்
இங்கிலாந்து ராணுவம்
Alastair Grant - getty images

ராணி எலிசபெத் மட்டும் சடங்குகளுக்காக, முன்னதாகேவ தேவாலயம் சென்றுவிடுவார். ஊர்வலத்தின்போது ராணுவத்தினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க இளவரசருக்கு இறுதி மரியாதை செலுத்துவார்கள். அப்போது தேவாலயத்தில் மணிகள் அடிக்கப்படும். செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தை வாகனம் அடைந்ததும், இளவரசர் உடலை 'ரைஃபில்ஸ்' (British Military Riffles) எனப்படும் ராணுவக் குழுவினர் பெற்றுக்கொண்டு தேவாலயத்துக்கு உள்ளே எடுத்துச் செல்வார்கள்.

அந்தநேரம், இங்கிலாந்தின் தேசியகீதம் ஒலிக்கப்படும். இளவரசரின் பூத உடலை, தேவாலய மதகுருக்கள் பெற்று இறுதிச் சடங்குகளைத் தொடங்குவார்கள். அதற்கு முன்னதாக இங்கிலாந்து நேரப்படி 15:00 மணியளவில் நாடு முழுவதும் இளவரசரின் மறைவை முன்னிட்டு 'ஒரு நிமிட மௌன அஞ்சலி' செலுத்தப்படும். அந்தநேரத்தில், நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் இதய அஞ்சலியை மன்னருக்குச் செலுத்துவார்கள். அதன் பின்னர் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

செயின்ட் ஜார்ஜ் தேவாலயம்
செயின்ட் ஜார்ஜ் தேவாலயம்

ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தற்போது இளவரசரின் மறைவையொட்டி துக்கம் அனுசரித்துவருகிறது. இந்த துக்க அனுசரிப்பு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை தொடரும்.

அதேபோல், நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரிட்டன் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். ஆனால், முடியாட்சி முறையைக் குறிக்கும் 'தி ராயல் ஸ்டாண்டர்டு' (The Royal Standard) எனப்படும் முடியாட்சிக் கொடி மட்டும் முழுக் கம்பத்தில் பறக்கும். அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மன்னர் மறைவையொட்டி இரண்டு வார காலம் பொதுவெளியில் கறுப்புப் பட்டை அணிந்து துக்கம் அனுசரிப்பார்கள் .

கொரோனா தாக்கம் காரணமாக, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், அனைவரும் தங்கள் இரங்கலை அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் பதிவிடும் வகையில் இணையப் பக்கம் ஒன்று அரச நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம், சடங்குகள் மற்றும் நல்லடக்கம் ஆகியவற்றைப் பொதுமக்கள் தொலைக்காட்சி வழியாக நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளவரசரின் இறுதிச் சடங்கு ஒளிபரப்பு உரிமையை BBC நிறுவனம் பெற்றிருக்கிறது.