மன்னர் ஆட்சி, உலகம் முழுவதும் முடிவுற்று மக்கள் ஆட்சி தொடங்கிய போதும் சில நாடுகளில் மன்னர்களுக்கு அரசியலமைப்பு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதுபோன்ற நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.
இலண்டனில் வார இறுதி, கொண்டாட்டமாகக் கழிந்திருக்கிறது. இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் அதிகாரப்பூர்வ அரசியாகத் திகழும் பிரிட்டன் அரசி இரண்டாவது எலிசபெத் அவர்களின் 70 ஆண்டுகால ஆட்சி சேவையைக் கொண்டாட பிளாட்டினம் ஜூப்ளி விழா நகரத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றது.
பிரிட்டன் அரசி இரண்டாவது எலிசபெத் உலகிலேயே அதிக நாள்கள் ஆட்சி செய்த மன்னர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கு முன்பு இரண்டாவது இடத்தில் இருந்த தாய்லாந்து அரசர் Bhumibol Adulyadej ஆட்சி செய்த காலம் 70 வருடங்கள் 126 நாள்கள். 1927 முதல் 2016 வரை அவர் மன்னராக நீடித்தார்.
முதலிடத்தில் இருப்பவர் பிரான்ஸ் மன்னர் லூயிஸ் XIV. கிபி 1643 முதல் 1715 வரையில் 72 ஆண்டுகள் 110 நாள்கள் இவர் மன்னராக ஆட்சி செய்தார்.

1953-ஆம் ஆண்டு முதன்முதலில் இரண்டாவது எலிசபெத் ராணி அரியணை ஏறினார். ராணி விக்டோரியா 63 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவரது கொள்ளுப்பேத்தி பாட்டியின் சாதனையை 2015-ல் முறியடித்தார். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் நடந்தன. 96 வயதான ராணி இரண்டாவது எலிசபெத் நாட்டின் மக்களுக்கு உருக்கமான கடிதம் மூலம் நன்றி தெரிவித்தார். அதில், "உங்களின் ராணியாக 70 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிப்பதற்கு என எந்த வழிகாட்டுதலும் கிடையாது. ஏனென்றால், வரலாற்றில் இதுதான் முதன்முறை! ஆனால் இந்த பிளாட்டினம் ஜூப்ளியை கொண்டாட இத்தனை பேர் கூடுவதைக் காணும் போது பணிவாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். வயது மூப்பின் காரணமாக அவரால் பெரிதாக விழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை.
பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து தன்னைக் காண வந்திருந்தவர்களை நோக்கி கையசைத்தார். அவர் நெகிழ்ச்சியாக உணர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.