Published:Updated:

''நான் பணி புரிந்த கப்பல், விராட்டை உடைக்கவிட மாட்டேன்!''- பிரிட்டனில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இந்த கப்பலில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணி புரிந்துள்ளார்.

ஐ.என்.எஸ் விராட்
ஐ.என்.எஸ் விராட்

இந்திய கடற்படையில் பெரும் பங்காற்றிய ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது. கப்பலை மியூசியமாக மாற்றும் முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில், விராட் கப்பலை உடைக்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்து கடற்படையுடன் விவாதித்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், விராட் கப்பலை உடைக்கக் கூடாது தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று பிரிட்டனைச் சேர்ந்த ஆன்டி ட்ரீஸ் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விராட்
விராட்

ஐ.என்.எஸ் விராட்டாக மறு உருவம் எடுப்பதற்கு முன் ஹெச். எம். எஸ் ஹெர்ம்ஸ் (Her Majesty's Ship) என்ற பெயரில் இந்த கப்பல் பிரிட்டனிடம் இருந்தது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இந்த கப்பலில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றியுள்ளார். இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே, கட்டத் தொடங்கப்பட்ட இந்த கப்பல் 1959-ம் ஆண்டு பிரிட்டன் ராயல் நேவியில் பணியில் சேர்க்கப்பட்டது. 1982-ம் ஆண்டு பாக்லாந்து தீவுகளுக்காக அர்ஜென்டினாவுடன் பிரிட்டன் போரிட்டது. இந்த போரில் பிரிட்டன் வெற்றி பெற ஹெச்.எம்.எஸ் ஹெர்ம்ஸ் முக்கிய பங்காற்றியது.

அப்போது, பிரிட்டன் கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பல் இதுதான். 1985-ம் ஆண்டு பிரிட்டன் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றது. பின்னர், போர்ட்ஸ்மவுத் கப்பல் கட்டும் தளத்தில் பழுதுகள் நீக்கப்பட்டு 1987-ம் ஆண்டு இந்தியாவுக்கு விற்கப்பட்டது. இந்த கப்பலில் ஏர்மேனாக பணி புரிந்த ஆன்டி ட்ரீஸ் தற்போது ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். விராட் கப்பலை உடைப்பதற்கு பதிலாக தன்னிடம் ஒப்படைக்குமாறு அவர் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக, 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தரவும் அவர் தயாராக இருக்கிறார். இந்த கப்பலை லண்டன் அல்லது லிவர்பூல் நகரில் மியூசியமாக மாற்றி நிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார். விராட் கப்பலை மீண்டும் இங்கிலாந்துக்கு கொண்டு வர பிரிட்டன் அரசு உதவ வேண்டுமென்றும் ட்ரீஸ் கோரியுள்ளார்.

ஆன்டி ட்ரீஸ்
ஆன்டி ட்ரீஸ்

ஐ.என்.எஸ் விராட் 2017-ம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட நிகழ்வில் ஆன்டி ட்ரீஸ் பங்கேற்றார். அப்போது, கப்பலை பார்வையிட்ட ஆன்டி ட்ரீஸ். ' இந்தியர்கள் விராட் கப்பலை நல்ல முறையில் பராமரித்து வந்துள்ளனர்' என்று குறிப்பிட்டார். இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த். 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றிய இந்த கப்பலும் பிரிட்டனிடம் இருந்துதான் வாங்கப்பட்டது. இந்த கப்பல் 2012-ம் ஆண்டு உடைக்கப்பட்டுவிட்டது. தற்போது, ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானம் தாங்கிக் கப்பல் இந்தியாவிடம் கடற்படையில் பணியில் உள்ளது. விக்கிரமாதித்யா ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது.