Election bannerElection banner
Published:Updated:

`உள்நாட்டு விவகாரம்; இருப்பினும் அது தேவையில்லாதது!' - சி.ஏ.ஏ குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா

சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். அத்துடன் இவ்விரு சட்டங்களும் தேவையில்லாதது எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமைச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் மதத் துன்புறுத்தலால் வெளியேறும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் முஸ்லிம்களைத் தவிர்த்து இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி மற்றும் கிறிஸ்தவர்கள் என 6 மதங்களைச் சார்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கும்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் உட்பட உள்நாட்டில் பலர் இதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில்தான், இச்சட்டம் தேவையில்லாதது என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா

சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``இந்திய அரசு இந்தச் சட்டத்தை ஏன் இயற்றியது என எனக்கு தெரியவில்லை. இந்தச் சட்டம் உண்மையில் தேவையற்றது" என்றார். இந்தியாவிலிருந்து வங்கதேச அகதிகள் வெளியேறுவது அதிகரித்துள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ``இல்லை. இந்தியாவிலிருந்து யாரும் வங்கதேசத்துக்குத் தப்பி வரவில்லை. ஆனால், இந்தியாவில் இருக்கும் அகதிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது உறுதி. இருப்பினும் அந்தச் சட்டங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" என்றார்.

மேலும், ``வங்கதேசம் எப்போதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (NRC), இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (CAA) இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகவே கருதுகிறது. நான் கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்லி வந்தபோதும், பிரதமர் மோடி அதைத்தான் என்னிடம் உறுதியாகச் சொன்னார். அதனால் இந்தியா - வங்கதேச உறவு மிகவும் வலுவாக இருக்கிறது. பலதுறைகளிலும் நாங்கள் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

ஷேக் ஹசீனா, மோடி
ஷேக் ஹசீனா, மோடி

சமீபத்தில் சி.ஏ.ஏ குறித்து பேசிய வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன்,``அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக இருக்கலாம். ஆனால், நம்பிக்கையற்ற நிலை ஏற்படும்போது, இருநாடுகளையும் அது பாதிக்கும்" என்று கூறியிருந்தார். அஸ்ஸாமில் என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டு, இறுதிக்கட்டப் பதிவேடும் வெளியிடப்பட்டது. பதியப்பட்ட 3.3 கோடி பேரில், 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர்களின் பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் இதுகுறித்து பேசிய வங்கதேச எல்லைக் காவல்படை தலைவர் ஷஃபினுல் இஸ்லாம், ``என்.ஆர்.சி பட்டியல் வெளியிட்டதுமே 445 வங்கதேச அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பி இருக்கின்றனர். சட்டவிரோதமாக வங்கதேசத்துக்குள் நுழைய முயன்ற 1,000 பேரைக் கைது செய்துள்ளோம்" என்று கூறியிருந்தார்.

Representational Image
Representational Image

மேலும், ``கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வங்கதேசத்துக்குள் நுழைய முயன்றவர்களின் எண்ணிக்கை 1,700. அதுவே, 2018 ஆம் ஆண்டு 2,800-கும் மேல். 2019 ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு