அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உட்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 20 உறுப்பினர்களைக்கொண்ட G-20 அமைப்பின் பொருளாதாரக் கூட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது. G-20 அமைப்பில் ரஷ்யாவும் உறுப்பினராக இருப்பதால், ரஷ்யாவும் இதில் கலந்துகொள்ளும். ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால், G-20 அமைப்பிலுள்ள சில நாடுகள் ரஷ்யாவை G-20 அமைப்பிலிருந்தே நீக்க வேண்டும் என்றுகூட சமீபத்தில் கூறிவந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதை ஆதரிப்பதாகக் கூறியிருந்தார். இதை எதிர்த்த சீனா, G-20-ல் உறுப்பினராக உள்ள ஒரு நாட்டை நீக்க முடியாது, அதற்கான உரிமையும் இல்லை எனக் கூறியிருந்தது.

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, `புதினின் வருகை G-20 மாநாட்டுக்குப் பயனற்றதாக இருக்கும்' என்று தற்போது கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான G-20 பொருளாதாரக் கூட்டம் நடத்தும் இந்தோனேசியா நாட்டின் அதிபருடன் இது குறித்துப் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ``G-20 பொருளாதாரக் கூட்டத்தில் புதினின் வருகை எங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். மேலும் G-20-க்கும் அது பயனற்றதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
பின்னர் கனடா தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ``இது கனடா உட்பட பல நாடுகளுக்குப் பெரிய பிரச்னையாக இருக்கும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்ட நெருக்கடியை, நாங்கள் எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் ஆக்கபூர்வமான கூட்டாளியாக இருக்க முடியாது. அடிப்படை என்னவென்றால், எல்லாம் சரியாகிவிட்டது என்று மேசையில் அமர்ந்து புதின் பாசாங்கு செய்வதுதான். இது அவருடைய தவறு" என்று கூறினார்.