கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கனடாவில் பொது இடங்களுக்குச் செல்லும் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என கனடா அரசு கூறியிருந்தது. குறிப்பாக, பக்கத்துக்கு மாகாணங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு ட்ரக் ஓட்டிச்செல்லும் ஓட்டுநர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் போட்டிருக்க வேண்டும் என்று கனடா அரசு கூறியிருந்தது. ஜஸ்டின் ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு ட்ரக் ஓட்டுநர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ட்ரக் ஓட்டுநர்களைப் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் வழிவகுத்தது. இதனால் ஆயிரக்கணக்கான ட்ரக் ஓட்டுநர்கள் கனடா பாராளுமன்றம் மற்றும் கனடா - அமெரிக்கா எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரக்குகளை நிறுத்திப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தால் ஏற்படும் அசாதாரண நிலையைச் சரிப்படுத்தும்விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, கனடாவில் அவசரகால நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கனடா-அமெரிக்கா எல்லையில் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் மற்றும் ட்ரக்குகள் காவல்துறையினர்களால் அப்புறப்படுத்தப்பட்டு. அதையடுத்து, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டதை முடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால், `அவசரகால நிலையை கனடா அரசு ரத்துசெய்யும்’ என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ``இனி அவசரகால நெருக்கடிநிலை இல்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே அவசரகால சட்டப் பயன்பாட்டை கனடா அரசு ரத்து செய்யும். மேலும், மக்களைப் பாதுகாக்க, தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" எனக் கூறினார்.
