Published:Updated:

25,000 வீரர்கள்; 200 பார்வையாளர்கள்; பளபளக்கும் கோலங்கள்! ஜோ பைடன் பதவியேற்பு ஏற்பாடுகள் #Highlights

அமெரிக்க வெள்ளைமாளிகை
அமெரிக்க வெள்ளைமாளிகை ( Alex Brandon )

தொடக்க உரைக்குப் பின்னர் பகல் 12 மணியளவில் அதிபராகத் தேர்வுசெய்யப்பட்ட ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் கேபிடல் கட்டத்தின் முன்பு ஒன்றுகூடி உறுதிமொழி எடுப்பர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலானது நடந்து முடிந்தது. டொனால்ட் ட்ரம்ப் Vs ஜோ பைடன் என நடைபெற்ற தேர்தல் களத்தில் அரசியல் ஆய்வாளர்களும், நாட்டு மக்களும் எதிர்பார்த்தது போலவே ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிட தாமதித்தால், தேர்தலில் மோசடி நிகழ்ந்துள்ளதாகக் கூறி ட்ரம்ப் சரமாரியாக குற்றம்சாட்டி வந்தார்.

இதன் பின்னர், தேர்தல் முடிவுபெற்ற ஒவ்வொரு மாகாணமாக வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், அமெரிக்க கேபிடல் (US Capitol) கட்டடத்துக்குள் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணிச் சான்றளிக்கும் பணியை மேற்கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அதில் போலீஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.

வெள்ளை மாளிகையில், தமிழர் பாரம்பர்யம்!

பல்வேறு சர்ச்சைகளுக்கும், மோதல்களுக்கும் பிறகு நாளை (ஜனவரி, 20) ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராவும் பதவியேற்கவுள்ளனர். இதனால், நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதில், இந்தியப் பாரம்பர்யங்களுள் ஒன்றான கோலமும் போடப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோலங்கள்
கோலங்கள்
Photo: Twitter / IndiasporaForum

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி, ஒரு புதிய மாற்றத்தினை உருவாக்கும் என்ற ஒரு நேர்மறையான எண்ணத்தை விதைக்கும் வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து கோலங்கள் போட்ட டைல்ஸ்களைப் பதவியேற்பு விழா நடைபெறும் இடமான கேபிடல் ஹில் பகுதியில் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

எங்கே.. எப்போது?

நாளை நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவானது அந்நாட்டு நேரப்படி காலை 11 மணியளவில் தொடங்கவுள்ளது. தொடக்கவுரைக்குப் பின்னர் பகல் 12 மணியளவில் அதிபராக தேர்வுசெய்யப்பட்ட ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் கேபிடல் கட்டத்தின் முன்பு ஒன்றுகூடி உறுதிமொழி எடுத்து, தங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வர் என்று தெரிவித்துள்ளனர்.

கேபிடல் ஹில்
கேபிடல் ஹில்
Patrick Semansky

பாதுகாப்பு நடைமுறை!

சமீபத்தில் நடந்த தாக்குதல் காரணமாக அமெரிக்க நாடாளுமன்றம், அதிபர் அலுவலகம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஏழு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 25,000 வீரர்கள் வாஷிங்டன் டி.சி-யில் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தைத் தூண்டும் விதமாக எந்தவொரு செயலிலும் ஈடுபடவேண்டாமென்று ஐ.நா. ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டக்களுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பதவியேற்பு விழாவின் போது அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில், ட்ரம்ப் இந்நிகழ்வினை புறக்கணித்துவிட்டு ஃபுளோரிடாவிலுள்ள தனது பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேறவிருக்கிறார்.

விழாவின் பிற ஹைலைட்ஸ்

=> விழா நடைபெறும் மேடையில், கொரோனாவுக்கு எதிரான தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சுமார் 200 பேர் அமர்ந்திருப்பர்.

=> விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டயாயமக்கப்ப்டுள்ளது. உறுதிமொழி எடுக்கும்போது மைக் முன்பு மட்டும் அதிபரும், பிற உறுப்பினர்களும் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

=> விழாவின் தொடக்கத்தில் பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடவுள்ளார்.

=> அதைத் தொடர்ந்து, நடிகை ஜெனிஃபர் லோபஸின் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

=> அதிபர் பதவியேற்புக்குப் பின்னர் பிரபல அமெரிக்க நடிகர் டாம் ஹான்க் நடத்தும் 90 நிமிட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸைத் தவிர்த்து பல்வேறு டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனம் தேர்தலின்போது குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

=> இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பதவியேற்பு விழாவுக்கான டிக்கெட்டுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பதவியேற்பின்போது இருபது லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன் பதவியேற்றவுடன் ட்ரம்ப் ஏற்படுத்திய பல சர்ச்சைக்குரிய சட்டங்களுக்கு முடிவு கட்டப்படும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு