Published:Updated:

அமெரிக்கா சீனா இடையே நிழல் யுத்தம்... இடையில் கிடந்து அல்லாடும் இந்திய தேசம்!

மத்திய அரசு
மத்திய அரசு

கொரோனா நோய்த் தொற்று சர்வதேச அரசியல் கணக்குகளையும் கூட்டணிகளையும் மாற்றியமைத்து வருகிறது.

உலகில் ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொள்கைகள் மட்டுமன்றி, இரு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவுக் கொள்கைகள் கூட, ஒரு தனிமனிதனின் வாழ்க்கையைப் பாதிக்க வல்லது. அதிலும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒரு மாபெரும் நுகர்வு சந்தை. அதையொட்டி நிகழும் சர்வதேசக் காய் நகர்த்தல்களுக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது. இந்த நிலையில், கொரோனா வைரஸ், அமெரிக்கா - இந்தியா- சீனா ஆகிய நாடுகளின் முக்கோண காதல் கதையை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா சீனா இடையிலான மோதல் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக மாறிக் கொண்டிருக்கிறது.

சீனா - அமெரிக்கா
சீனா - அமெரிக்கா

அமெரிக்கா:

கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என இனி காலத்தைப் பிரிக்க வேண்டும் என்பதுபோல, உலக அளவில் எண்ணிலடங்கா மாற்றங்கள் கடந்த சில மாதங்களில் நடந்திருக்கின்றன. இயற்கை மனிதர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட பெரும் கோபம் இதுவென்று ஒரு சாரார் பேசிக்கொண்டிருக்க, மறுபக்கம் இந்த வைரஸ் பரவுவதற்குச் சீனாதான் முழு காரணம் எனத் தீவிர பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது டொனால்டு ட்ரம்ப்பின் அமெரிக்கா. சமீபத்தில் அமெரிக்கா அரசு இதுகுறித்து ஒரு இருபது பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய சீனாவுக்குக் கடந்த 20 ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்பட்டதும், அதேசமயம், சீனாவில் அமெரிக்கா அதிக முதலீடுகள் செய்ததையும் அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது. சீன ராணுவத்துக்குப் பயிற்சி அளித்து, அமெரிக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளித்துவந்ததாகவும், ஆனால், அமெரிக்கா நினைத்ததுபோல சீனா கம்யூனிச கொள்கைகளிலிருந்து விடுபட்டு தாராளமய கொள்கைக்கு மாறவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் நிலைப்பாடு தொடர்ந்து மோசமாகி வருகிறது எனவும் பொருளாதார கொள்கைகள், ராணுவ நடவடிக்கைகள், பொய் பிரசாரம், மனித உரிமை மீறல் எனப் பல வகையிலும் சீனா எல்லை மீறிச் செயல்படுகிறது எனவும் கடும் குற்றங்களைச் சுமத்தியிருக்கிறது அமெரிக்கா.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்தச் சீன எதிர்ப்பு பிரசாரத்துக்குப் பலம் சேர்க்க இந்தியாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முக்கிய செனட்டர் தாம் டில்லிஸ் வெளியிட்ட ஒரு திட்டத்தில், இந்தியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளோடு அமெரிக்கா ராணுவ உறவைப் பலப்படுத்துவது முதல், சீனாவில் இருக்கும் முக்கிய அமெரிக்கா தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு மாற்றுவது வரை பல பரிந்துரைகளைச் செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி, அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசியாவுக்கான செயலர் அலைஸ் வெல்ஸ், இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் இந்தக் கொரோனா பாதிப்பு காலத்தில் இதற்கான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்தியா-சீனா
இந்தியா-சீனா

சீனா:

சீனா எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லாத நாடு. கொரோனா விஷயத்தில் உலக நாடுகளுக்கெல்லாம் சீனாவின் ரகசியங்கள்தான் பெரிய ஆபத்தைக் கொடுத்திருக்கிறது என்பது அமெரிக்காவின் வாதம். Council on foriegn relations எனும் அமைப்பின் வலைதளத்தில் `பெடோங் சன' எனும் சீனப் பேராசிரியர் எழுதியிருக்கும் கட்டுரையில், டிசம்பர் மாதமே கொரோனா தொற்று உள்ள நபர் சீனாவில் அடையாளம் காணப்பட்டதாகவும், இருந்தும் வுகான் நகரில் ஜனவரி மாதம், 40,000 குடும்பங்கள் பங்கேற்கும் பெரும் புத்தாண்டு விருந்து ஒன்று அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். ஆரம்ப கட்டத்தில், சீனா தொடர்ந்து இந்த நோய்த் தொற்றின் ஆபத்து குறித்து உலக நாடுகளுக்குப் பகிர்ந்துகொள்ளத் தவறியதையும், நோயைக் கட்டுப்படுத்துவதில் பொறுப்பற்று நடந்து கொண்டதையும் இவர் சுட்டிக்காட்டுகிறார்.

சீனா நினைத்திருந்தால், இந்த வைரஸை வுகான் நகருக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க முடியும் என்பதே இன்று நிலவும் பரவலான கருத்து. சீனா இந்த நோய் குறித்து வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது, சீனா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி உலக சுகாதார நிறுவனத்தை தனக்கு ஆதரவாகச் செயல்பட வைத்துவிட்டது என்பது. குறிப்பாக, WHO-வின் தலைவர் டெட்ராஸ், சீனாவின் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டி, கொரோனாவை வெல்வதற்குச் சீனாவே சிறந்த வழிகாட்டி எனப் புகழாரம் சூட்டி இருப்பது, WHO-வின் நடுநிலைத் தன்மை குறித்து கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இவர் 2017-ம் ஆண்டு சீனாவின் ஆதரவின் பேரில் தான், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம், இந்தக் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி சர்ச்சைக்குரிய தைவான், வியட்நாம் ஆகிய பகுதிகளில் தன்னுடைய ராணுவ செயல்பாடுகளை அதிகரித்து இருக்கிறது சீனா. அதேசமயம், வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. சீனாவிலிருக்கும் ஜப்பான் பெருநிறுவனங்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற உதவித்தொகை அளித்துவருகிறது ஜப்பான் அரசு. பிரிட்டன், 5G தொழில்நுட்ப கட்டுமானத்தில் சீன பெருநிறுவனமான ஹுவெய் நிறுவனத்தை அனுமதிப்பதை மறுபரிசீலனை செய்கிறது. அமெரிக்கா பொருளாதாரத் தடை எனும் பெரும் ஆயுதம் கொண்டு சீனாவை எதிர்க்கிறது.

இந்தச் சூழலில், உலகின் தொழிற்சாலையாகச் செயல்பட்டு வந்த சீனா, தன்னுடைய உள்நாட்டு நுகர்வுத் தேவைகளை அதிகரிக்கவும், தன்னுடைய உலக சந்தையைத் தக்க வைத்துக்கொள்ளவும் போராட வேண்டியிருக்கிறது. சீனாவின் இந்தச் சூழல் இந்தியாவுக்குப் பெரும் வாய்ப்பு எனும் கருத்து எழும் அதே சூழலில், உலகில் பரவும் சீனா எதிர்ப்பு மனநிலை, இந்திய - சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா - அமெரிக்கா
இந்தியா - அமெரிக்கா

இந்தியா:

இந்தியாவும் அமெரிக்காவும் புறத்தோற்றத்துக்கு மிகவும் நட்பு பாராட்டும் நாடுகளாகவே தெரிகின்றன. அதுவும் சமீப காலங்களில் மோடி- ட்ரம்ப் எனும் இரு தலைவர்களின் தனிப்பட்ட நட்பு, இரு நாடுகளின் உறவைப் பலப்படுத்தியிருக்கின்றன. ஆனால், கைகோத்து நடக்கும் அந்த நட்பு காட்சிகள் எல்லாம் இந்தக் கொரோனா காலத்தில் சற்று ஆட்டம் கண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவிலிருந்து ஹைட்ராகக்சிக்ளோரோகுயின் மருந்தை ட்ரம்ப் மிரட்டல் விடுத்துப் பெற்றதில் தொடங்கி, அமெரிக்காவின் புதிய விசா கொள்கைகள் வரை இந்தியாவின் நலனைப் பாதித்திருக்கிறது. முக்கியமாக ஆசியாவில் சீனாவுக்கான வலுவான எதிரியாக இந்தியாவை நிலைநிறுத்தவும் அமெரிக்கா விரும்புகிறது.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய குழப்பத்தில், சீனாவிலிருந்து பல பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அமெரிக்கா சொல்வதைப் போல, அவை இந்தியாவுக்கு வருமா என்பது சந்தேகமே.

இடம்பெயர விரும்பும் பல நிறுவனங்களுக்காக, இந்திய அரசு பல ஏக்கர் நிலங்களை ஒதுக்கத் தொடங்கியிருக்கிறது. பா.ஜ.க ஆளும் சில மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களில் தளர்வு கொண்டு வந்திருக்கிறது இருந்தாலும், பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிலை அமைத்துக்கொள்ள இவை போதுமானதாக இல்லை.

இந்தியாவின் நிலையற்ற ஒழுங்குமுறை சட்டங்களும், அதிகமான வரி விதிப்பும் அதற்கு முதல் எதிரியாக இருக்கிறது. அவை மட்டுமன்றி, சீனாவைப் போல, தயாரித்த பொருளை நேரடியாக, எளிமையாக நுகர்வு சந்தைக்குக் கொண்டு சேர்க்கும் வலுவான கட்டமைப்புகள், துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானங்கள் இந்தியாவில் இல்லை. இவையெல்லாம் இந்தியாவில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்குத் தடையாக இருக்கும். இந்தியாவைத் தவிர்த்து இந்த நிறுவனங்கள் தைவான், வியட்நாம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே, புதிய நிறுவனங்கள் குறித்த அமெரிக்காவின் ஆசை வார்த்தைகள் எல்லாம் யதார்த்தத்தில் பெருங்கனவே. அதை நம்பி இந்தியா, சீனா எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க முடியாது. சீனாவுக்கு எதிரான வலுவான நிலைப்பாடே இந்தியா அமெரிக்காவின் உறவை மேம்படுத்தும். இந்தியாவுக்கான சிக்கலும் அங்குதான் தொடங்குகிறது.

ஜி ஜின்பிங் - மோடி
ஜி ஜின்பிங் - மோடி

ஏனெனில், வலதுகையில் அமெரிக்காவுடன் கைகுலுக்கும் அதே வேளையில், சீனாவை மறுகையில் இறுகப் பற்றியிருக்கிறது இந்தியா. ஒரு வகையில் இந்த நடுநிலைமை இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்றாலும் சரியான கொள்கை முடிவுகள் இன்றி இந்தியா இரு நாடுகளின் கோபத்தையும் எதிர்கொள்ளும் ஆபத்தும் சூழ்ந்திருக்கிறது.

ட்ரம்ப் - மோடி இருவரின் அமெரிக்கா, இந்தியா சந்திப்பு போலவே, கடந்த ஆண்டுகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் - மோடி இருவரும் வுகான் மற்றும் மகாபலிபுரத்தில் சந்தித்து அளவளாவினர். இந்திய - சீன உறவின் 70-ம் ஆண்டு நிறைவை விமர்சையாக கொண்டாட இரு நாடுகளும் பல திட்டங்களைத் தீட்டியிருந்தன. ஆனால், கொரோனா அனைத்தையும் மாற்றிவிட்டது.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சிக்கலைத் தொடர்ந்து, பல இந்திய நிறுவனங்களைச் சீன நிறுவனங்கள் சுவீகரித்துக்கொள்ளும் வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறது இந்தியா. இந்த பயத்தின் காரணமாக ஏப்ரல் இறுதியில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு Foreign Direct Investment (FDI) கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.

இலவச மின்சாரம் ரத்தா? கலக்கத்தில் விவசாயிகள்... கவனிக்குமா அரசு?!

புதிய கொள்கையின்படி, இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் நிறுவனங்கள், மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்பே, இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவின் இந்தக் கொள்கைகள் பாரபட்சமாக இருப்பதாகச் சீனா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சமாதானம் செய்ய, கொரோனா பற்றிய கற்பிதங்களை இந்தியாவிடம் பகிர்ந்துகொள்வதாகவும், இந்தியாவுக்கு நோய்த் தொற்று எதிர்ப்பில் உதவுவதாகவும் சீனா அறிவித்தது. ஆனால், உலகில் பல நாடுகளைச் சென்றடைந்த பரிசோதனை கிட் உட்பட, சீனாவின் உதவிகள் தரமற்று இருந்ததால் இந்தியா பின்வாங்குகிறது.

WHO
WHO

இருந்தபோதும், அமெரிக்காவைப் போல, இந்தியா இன்னும் நேரடியாகச் சீனாவின் மீது குற்றம் சுமத்தவில்லை. மாறாக இருநாடுகளுக்கும் இடையில் நடுநிலையாகவே காய் நகர்த்துகிறது இந்தியா. சமீபத்தில் நடந்த WHO மாநாட்டில் கூட, அமெரிக்கா ஒருபுறம், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒருமித்த குரல்கள் ஒருபுறம் ஒலிக்க, இடையில் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்தது இந்தியா.

பெரும் வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான இந்தப் போட்டி உலக நாடுகளுக்கெல்லாம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக, இருநாடுகளையும் சமாளிக்க முடியாமல் இடையில் மாட்டிக்கொண்டு அல்லாடுகிறது இந்தியா. இருநாடுகளின் ஒரு நாட்டின் பகையைக் கூட இந்தியாவால் தாக்குப் பிடிக்க இயலாது என்பதே உண்மை. இந்தியா மீதான பெரும் வர்த்தகப் போராக இந்தப் பிளவு வெடிக்குமானால் இந்தியா திணறும். அப்போது துணை நிற்க ஒரு வலுவான நண்பனையாவது இந்தியா தக்க வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு, மிக வலிமையான ஒரு தலைமையும், நேர்மையான, தேச நலனுக்கான கொள்கை முடிவுகளும் மட்டுமே ஆவண செய்யும்.

குஜராத் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்... சாடிய நீதிமன்றம்... கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்!
அடுத்த கட்டுரைக்கு