Published:Updated:

மைக் பாம்பியோ உள்ளிட்ட ட்ரம்ப் நிர்வாகிகள்... பொருளாதாரத் தடை விதித்த சீனா! - என்ன காரணம்?

மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ

``28 நபர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சீனா, ஹாங்காங், மக்காவோவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் சீனாவுடன் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது."

கடந்த ஆண்டில், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீனாவுக்கு பல்வேறு விவகாரங்களில் அழுத்தம் கொடுத்துவந்தது. தைவான், திபெத், ஹாங்காங் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் சீன நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது.

அண்மையில், `சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான சீனாவின் கொள்கைகள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்’ என்றும், `இனப்படுகொலை’ என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Alex Brandon

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனாவின் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தது, சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகத்தின் கடைசிகட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீதும், முந்தைய ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்புடைய 27 பேர் மீதும் சீனா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. இதை சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

`உய்குர் மக்களை அழிக்க சீனா திட்டம்; இனப்படுகொலை!’- மைக் பாம்பியோ விமர்சனம்

பொருளாதாரத் தடை குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் (Hua Chunying), ``ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த மைக் பாம்பியோ உள்ளிட்ட 28 பேருக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 28 பேரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சீனா, ஹாங்காங், மக்காவோவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் சீனாவுடன் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ``கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவிலுள்ள சில சீன எதிர்ப்பு அரசியல்வாதிகள், தங்கள் சுயநல அரசியல் நலன்கள், சீனாவுக்கு எதிரான தவறான எண்ணங்கள் மற்றும் வெறுப்பு காரணமாக, திட்டமிட்டு சீனாவுக்கு எதிராகத் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பிவந்தனர். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றி இவர்கள் தலையிட்டனர். சீனாவின் நலன்களை மதிக்காமல் சீன மக்களைப் புண்படுத்திய வகையிலும், சீனா-அமெரிக்க உறவுகளைச் சீர்குலைக்கும் வகையிலும் இவர்கள் நடந்துகொண்டனர்" என்று ஹுவா தெரிவித்தார்.

மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ
Andrew Harnik

சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் மற்றும் இனச் சிறுபான்மையினர் மீதான கொள்கைகளை, `இனப்படுகொலை’ என்று மைக் பாம்பியோ விமர்சித்ததால், பாம்பியோ மீதான கோபத்தில் சீனா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

பாம்பியோவைத் தவிர, இந்த பட்டியலில் ட்ரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் கே நவரோ (Peter K Navarro), தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையன் (Robert C O'Brien), வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை ஸ்ட்ராட்டஜிஸ்ட் ஸ்டீபன் கே பானன் (Stephen K Bannon), மக்கள் சேவைச் செயலாளர் அலெக்ஸ் எம் அசார் (Alex M Azar), ஐ.நா தூதர் கெல்லி டி கே கிராஃப்ட் (Kelly D K Craft), கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவிச் செயலாளர் டேவிட் ஆர் ஸ்டில்வெல் (David R Stilwell), முன்னாள் தேசியத் துணைப் பாதுகாப்பு ஆலோசகர் மாத்யூ பாட்டிங்கர் (Matthew Pottinger); பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறை மாநிலச் செயலாளர் கீத் ஜே கிராச் (Keith J Krach); முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John Bolton) ஆகியோர் அடங்குவர்.

முன்னதாக, மைக் பாம்பியோ-வின் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஹுவா, ``கடந்த சில ஆண்டுகளில் பாம்பியோ சொன்ன விஷப் பொய்கள் எண்ணில் அடங்காதவை, பாம்பியோ கூறியது நகைச்சுவையான புனைகதைகளில் ஒன்று. இப்படி மோசமான பொய் சொல்லி ஏமாற்றுபவர், தனது பொய்கள் மூலம் தன்னை ஒரு கோமாளியாக, நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாளனாகத் தெரிவித்துக்கொள்கிறார்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

`உய்குர் மக்களை அழிக்க சீனா திட்டம்; இனப்படுகொலை!’- மைக் பாம்பியோ விமர்சனம்
அடுத்த கட்டுரைக்கு