Published:Updated:

உலக நாடுகளின் தொடர் அழுத்தம்... முதல்முறையாக விசாரணைக்கு ஒப்புக்கொண்ட சீனா! #Corona

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

உலக நாடுகளின் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது தொடர்பாக விசாரணை நடத்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருபுறம் வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்தநிலையில், கொரோனா வைரஸின் தோற்றம் அது மனிதர்களுக்கு எப்படிப் பரவியது என்பது குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா
கொரோனா

சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள வனவிலங்கு சந்தையில் கொரோனா வைரஸ் முதன்முதலாகக் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டது. இன்றைய சூழலில் உலக அளவில் இந்த வைரஸால் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிப்பிலிருந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டிருக்கும் நிலையில் 3.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

`கொரோனா, சீனாவில் இருந்து விமானப் பயணிகள் மூலம் விதைக்கப்பட்டது!’ - ட்ரம்பின் உதவியாளர்

சீனாவின் அலட்சியத்தாலேயே இந்த நோய் உலக அளவில் பரவியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். மேலும், வுகானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியிருக்கலாம் என்றும் அமெரிக்கா கூறிவந்தது. இதற்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவு தெரிவித்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்துவந்ததுடன், இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல; இயற்கையாக உருவானது என்றும் விளக்கம் கொடுத்து வந்தது.

கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு

இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டம் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்தும் அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எப்படிப் பரவியது என்பது குறித்தும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்டவை இணைந்து தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தன. 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள உலக சுகாதார அமைப்பில், இந்தத் தீர்மானத்துக்கு 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னிச்சையான விசாரணை; WHO-வுக்கு 62 நாடுகள் கோரிக்கை! -கொரோனா விஷயத்தில் முதல்முறையாக இந்தியா

இந்தநிலையில், முதல்முறையாகக் கொரோனா விவகாரத்தில் விசாரணை நடத்துவது குறித்து சீனா இறங்கிவந்துள்ளது. இரண்டு நாள்கள் (மே 18 மற்றும் 19) நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்ஃபன்ரஸ் மூலம் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடந்துகொண்டதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``கொரோனா வைரஸ் விவகாரத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒருமித்த விசாரணைக்கு சீனா ஆதரவு தெரிவிக்கிறது. இந்தக் கடினமான சூழலில் உலக அளவில் மக்கள் உயிர்காக்கும் இந்தப் போரில் உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது கடமை’’ என்றும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டிருக்கிறார்.

டெட்ரோஸ் - ஜின்பிங்
டெட்ரோஸ் - ஜின்பிங்

``கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்தால் அது உலகின் நன்மைக்காகப் பொதுச் சொத்தாக அறிவிக்கப்படும். வளரும் நாடுகளுக்கும் அது உடனடியாகக் கிடைப்பதை சீனா உறுதிசெய்யும்’’ என்றும் ஜி ஜின்பிங் தனது உரையில் குறிப்பிட்டார். கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரணை வேண்டும் என உலக நாடுகள் தொடர் அழுத்தம் கொடுத்து வந்தநிலையில், முதல்முறையாக சீனா இந்த விவகாரத்தில் இறங்கி வந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

அடுத்த கட்டுரைக்கு