Published:Updated:

பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனலுக்கு தடை விதித்த சீனா! - என்ன காரணம்?

பிபிசி
பிபிசி

சீனாவின் தொலைத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையமான என்.ஆர்.டி.ஏ (NRTA - National Radio and Television Administration) பிபிசி வேர்ல்டு நியூஸுக்குத் தடைவிதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

பிபிசி நிறுவனத்தின் தொலைக்காட்சி சேனலான `பிபிசி வேர்ல்டு நியூஸ்' ஒளிபரப்புக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவிலிருந்து பரவியதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம்சாட்டிய நிலையில், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்டவிதம் குறித்தும், சீன அதிபர் ஜின்பிங் குறித்தும் ஆட்சேபனைக்குரிய விதத்தில் செய்தி வெளியிட்டதாகக் கூறி பிபிசி வேர்ல்டு நியூஸ் (BBC WORLD NEWS) எனப்படும் பிபிசி-யின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்திருக்கிறது.

சீனாவின் தொலைத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையமான என்.ஆர்.டி.ஏ (NRTA - National Radio and Television Administration) பிபிசி வேர்ல்டு நியூஸுக்குத் தடை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனலில் ஒளிபரப்பு செய்த சீனா தொடர்பான செய்திகள் உண்மைக்குப் புறம்பாக, உகந்த முறையில் இல்லை என்றும் செய்திகள் அனைத்தும் விதிமுறைகளைத் தீவிரமாக மீறியிருக்கின்றன என்றும், இத்தகைய செயல் சீனாவின் தேசிய எண்ணங்களைக் காயப்படுத்தியிருக்கிறது. எனவே, சீனாவில் ஒளிபரப்பு செய்யும் வெளிநாட்டு சேனல்களின் தேவையை பிபிசி இழந்துவிட்டது. இனி ஒரு வருடத்துக்கு அதன் விண்ணப்பத்தையும் சீனா ஏற்காது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனா
சீனா

கடந்த பிப்ரவரி 4-ம் தேதியன்று பிரிட்டன் தொலைத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN-ன் உரிமத்தை ரத்து செய்தனர். இந்த சேனலுக்கான உரிமத்தை ஸ்டார் சீனா மீடியா லிமிடெட் (Star China Media Ltd) நிறுவனம் முறையற்ற வகையில் பெற்றதாகக் கூறப்பட்டது. அந்தச் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இந்த நடவடிக்கையை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது!

தடை குறித்து பிபிசி சொல்வதென்ன?

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி , ``சீன அரசுத்துறையின் நடவடிக்கை தொடர்பான முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச அளவில் உலகச் செய்திகளை வெளிப்படையாகவும், பக்க சார்பற்றும், அச்சமன்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி இருக்கிறது’’ என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு