Published:Updated:

`இன்று அதிர்ஷ்ட நாள்; இருந்தும் சுப காரியங்கள் வேண்டாம்!’ - சீன மக்களை எச்சரிக்கும் அரசு #corona

சீனா
சீனா

சீனாவில் இன்று அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்யுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் பாதிப்பினால் 250-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 11,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வுகான் நகரில் தொடங்கிய வைரஸ் பிற நாடுகளும் பரவி உலக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரொனா வைரஸ்
கொரொனா வைரஸ்

கொரோனா வைரஸினால் மொத்த சீனாவும் நிலை குலைந்து காணப்படுகிறது. குறிப்பாக வுகான் நகரம் முழுவதும் களையிழந்து மக்கள் நடமாட்டமின்றி உள்ளது. காற்றில் பரவும் வைரஸ் தொற்று காரணமாகக் கடைகள், போக்குவரத்து, வணிகம் போன்ற அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் இந்த நேரத்தில் திருமணங்கள், சுப காரியங்கள் போன்ற எதுவும் வேண்டாம் என்றும் துக்க காரியங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று 02.02.2020 இந்த நாள் சீனாவில் சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதைப் பின் பக்கமாக இருந்து படித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும். சீனாவில் இந்த நாளில் பலர் திருமணம் செய்துகொள்ளவும் சுப காரியங்கள் செய்யவும் முன்னரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்துள்ளனர்.

சீனா
சீனா

ஆனால், தற்போது வைரஸ் தொற்று காரணமாகத் திருமண நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சீன குடிமை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``பிப்ரவரி 2-ம் தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்க. தற்போது நடக்கும் சூழ்நிலைகளை மற்றவருக்கு விவரியுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது மரணச் சடங்குகளை விரைவாகவும் அதிக கூட்டம் இல்லாமலும் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கொரொனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று சீன அரசு எச்சரித்துள்ளது. பொது இடங்கள், நிகழ்ச்சிகள் போன்ற எங்கும் அதிக மக்கள் கூடக் கூடாது என்பது அந்நாட்டு அரசு மிகவும் கவனமாகச் செயல்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு