Published:Updated:

`டிசம்பர் 27-ல் தகவல்; ஜனவரி 20-ல் அறிவிப்பு ’ - கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா

கொரோனா வைரஸ் பரவியது மற்றும் அது தொடர்பான அறிவிப்புகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது, சீனா அரசு.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து முதன்முதலாகப் பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ், தற்போது உலகின் அனைத்து மூலைக்கும் பரவி, மக்களையும் அரசாங்கத்தையும் வாட்டி வதைத்துவருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில், சீனாவின் ஹூபே மாகாண தலைநகர் வுஹானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டது. சீனாவில் வைரஸ் வெடித்த பிறகு, அந்தத் தகவலை உலக சுகாதார நிறுவனத்துக்கும் மற்ற நாடுகளுக்கும் விரைவாகத் தெரிவிக்கவில்லை, வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை என அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் சீனா மீது குற்றம் சுமத்திவந்தன.

சீனா -கொரோனா
சீனா -கொரோனா
AP

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா மீது பல அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துவந்தார். பிறகு, வுஹானில் உள்ள ஒரு ஆய்வு மையத்திலிருந்துதான் வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டது. இதற்கு தங்களிடம் போதுமான ஆதாரம் இருப்பதாக ட்ரம்ப்பும் கூறினார். சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, கொரோனா தொடர்பான உண்மையை உலகத்துக்குச் சொல்லவில்லை. அதன் விளைவாகத்தான் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவிவிட்டது. இதற்கு, சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும் என பல நாடுகளும் சீனாவுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன.

இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, கொரோனா வைரஸ் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது சீனா. அதில், ‘கடந்த டிசம்பர் 27-ம் தேதி வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை வழக்கத்தை விட சற்று மாறுதலாக இருந்ததாக அரசுக்கு தகவல் வந்தது. பின்னர், உடனடியாக இதைப் பற்றி விசாரிக்க அரசு மருத்துவ நிபுணர்கள் குழுவினர் வுஹான் விரைந்தனர். அவர்கள் நடத்திய சோதனையில், அங்கு ஏதோ ஒருவகை வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சீனா
சீனா
AP

வைரஸ் தொடர்பாக தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதனால் வுஹானில் பரவியிருப்பது நிமோனியா வகை நோய்கள் என்ற முடிவுக்குவந்தனர் ஆய்வாளர்கள். இதையடுத்து, வுஹான் முழுவதுமே சளி, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போதுதான், இறைச்சி சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் எனக் கூறப்பட்டு, அது தொடர்பாகவும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வைரஸ் அங்கிருந்துதான் முதலில் தோன்றியது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. பிறகு, வௌவால்களிடமும் சோதனை நடத்தப்பட்டு, அதிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

`வுகானில் இருந்து ஏன் மற்ற பகுதிகளுக்குப் பரவவில்லை?' - சீனா மீது சந்தேகம் எழுப்பிய ட்ரம்ப்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜனவரி 14-ம் தேதி, வுஹானில் பரவியிருப்பது அபாயகரமான வைரஸ் எனக் கண்டுபிடித்து, வுஹான் மற்றும் ஹூபே முழுவதும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினோம். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகுதான் சீனாவின் முன்னணி சுவாச நோய் நிபுணர் ஜாங் நன்ஷான், இது மனிதனுக்கு மனிதன் பரவும் என்பதை ஜனவரி 20-ம் தேதி உறுதி செய்தார். அதன் பிறகே, வுஹானில் பரவியிருப்பது கொரோனா வைரஸ் என்று உறுதிசெய்யப்பட்டு, உடனடியாக உலக சுகாதார நிறுவனத்துக்கும் பிற நாடுகளுக்கும் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டோம்.

சீனா வெள்ளை அறிக்கை வெளியீடு
சீனா வெள்ளை அறிக்கை வெளியீடு
AP

வுஹானில் வைரஸ் பரவல் அதிகமான பிறகு, மொத்த ஹூபே மாகாணமும் முடக்கப்பட்டு, அங்கிருந்து மக்கள் வெளியில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சீனாவில் பரவியது நிமோனியா வைரஸ் என ஜனவரி 3-ம் தேதி அடையாளம் காணப்பட்டது. அப்போதே உலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வருகிறோம். அறியப்படாத, எதிர்பாராத மற்றும் பேரழிவு தரும் நோயின் பரவலைத் தடுக்க, சீனா பல்வேறு முயற்சிகளைச் செய்து, வைரஸுக்கு எதிரான போர் நடத்தியது’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செய்தித்தொடர்பாளர் சூ லின், இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

‘ஜனவரி 21ல் போன்கால்; ஒப்பந்தம் போட்ட ஜின்பிங்..?’-  WHO-வை பதறவைத்த ஜெர்மன் பத்திரிகைச் செய்தி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு