Published:Updated:

`கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல்!’ - அமெரிக்கா

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு ( Google Earth )

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல் என்று அமெரிக்க உயர்மட்ட ஆய்வுக்குழு தெரிவித்திருக்கிறது.

லடாக் எல்லையை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்கள் இடையே கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் சீன ராணுவ வீரர்கள் 45 பேர் வரை இறந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இது குறித்து சீனா தரப்பில் அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்படவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு
AP

கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்திluள்ள கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் பேட்ரோல் பாயின்ட் 14 அருகே ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவத் துருப்புகள் டென்ட் ஒன்றை அமைத்ததாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படையினர் அந்த டென்ட்டை அகற்ற அந்தப் பகுதிக்குச் சென்றதாகவும், அப்போது சீன வீரர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருதரப்பிலும் எல்லையில் படைகளைக் குறைப்பதற்கான உயரதிகாரிகள் மட்டத்திலான பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

`15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

இந்தநிலையில், `கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல்’ என அமெரிக்க உயர்மட்டக்குழு தெரிவித்திருக்கிறது. அமெரிக்க - சீன பொருளாதார, பாதுகாப்பு மறு ஆய்வு ஆணையத்தின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலை சீனா முன்னரே திட்டமிட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன; இது தொடர்பாகக் கிடைத்த சில ஆதாரங்கள் சீனாவின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்டுவந்த சாலை கட்டுமானத்தை நிறுத்தும் நோக்கில் சீனா செயல்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச் சின்னம்
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச் சின்னம்

மேலும், மோதல் சம்பவத்துக்குப் பல வாரங்களுக்கு முன்னரே எல்லைப் பகுதியில் நிலைத்தன்மையை உருவாக்கத் தாக்குதல் முறையைக் கையாளலாம் என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசியதும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அதேபோல், சீன கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான `குளோபல் டைம்ஸி’ல், அமெரிக்க - சீனா இடையிலான பிரச்னையில் தலையிட்டால், இந்தியாவுக்குப் பொருளாதாரரீதியாகக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் எழுதப்பட்ட தலையங்கத்தைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பான் முதல் இந்தியா வரையிலான தனது அண்டை நாடுகளுடன் ராணுவரீதியிலான எல்லைப் பதற்றத்தை ஏற்படுத்தி சீனா, தனக்குத் தேவையானவற்றைச் சாதித்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் அமெரிக்க உயர்மட்ட ஆய்வுக்குழு தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு