அலசல்
Published:Updated:

மீண்டும் அதிபராகும் ஜி ஜின்பிங்: எதிர்த்துப் போராடும் பொதுமக்கள்! - என்ன நடக்கிறது சீனாவில்?

ஜி ஜின்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி ஜின்பிங்

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், முதல்முறையாகப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங்

ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை இருக்கும் சீனாவில், ஒரு பக்கம் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் அதிபராகப் பொறுப்பேற்கும் வரலாற்று மாநாடு. மற்றொரு பக்கம் `பெரும் தலைவர் வேண்டாம்; ஓட்டுரிமை வேண்டும்’ என வீதியெங்கும் மக்களின் பேனர் கூப்பாடு. ஒரே நேரத்தில் கொண்டாட்டமும், போராட்டமுமாகக் காட்சியளிக்கிறது சீன தேசம்!

கடந்த வாரம் நடந்துமுடிந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில், மூன்றாவது முறையாகக் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஜி ஜின்பிங். இதையடுத்து, மூன்றாவது முறையாகச் சீன அதிபராக ஜி ஜின்பிங் பொறுப்பேற்பதும் உறுதியாகியிருக்கிறது. ஜி ஜின்பிங்கின் இளமைக் காலத்தில், அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தடைகளைத் தாண்டி, சாதாரணத் தொண்டராகக் கட்சியில் சேர்ந்து, தற்போது சீன வரலாற்றிலேயே மாவோவுக்குப் பிறகு சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவராக உருவெடுத்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது?

மீண்டும் அதிபராகும் ஜி ஜின்பிங்: எதிர்த்துப் போராடும் பொதுமக்கள்! - என்ன நடக்கிறது சீனாவில்?

முதல்முறை அதிபராக...

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், முதல்முறையாகப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். அதன் பின்னர், 2013 மார்ச்சில் முதல்முறையாக சீன அதிபராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, சீன முன்னேற்றத்துக்காகப் பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும், பல்வேறு துறைகளில் மாற்றங்களையும் கொண்டுவந்தார். சீனப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டது. கோட்பாட்டு ரீதியாகவும் `சீனப் பண்புகளுடன் கூடிய சோஷலிசம்’ என்ற புதிய கருத்தாக்கத்தைப் புகுத்தினார். அதேபோல, இந்தியா, தைவான் போன்ற அண்டைநாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகளில் மிகவும் கடுமையான போக்கைக் கடைபிடித்தார். ஹாங்காங் போராட்டம் போன்ற உள்நாட்டில் நடக்கும் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். சீன ஆட்சியாளர்களில் சர்வதிகாரமிக்க தலைவராக உருவெடுத்தார்.

நீக்கப்பட்ட சட்டம், நீடித்த அதிபர்!

அதைத் தொடர்ந்து, 2018-ல் இரண்டாவது முறையாகவும் சீன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். அவர் ஆட்சிக்கு வந்ததும் முதலில் கை வத்ததே சீன அரசியல் சட்டத்தில்தான். ஒருவர் இரண்டு முறை மட்டுமே, அதாவது 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்றிருந்த சட்டத்தை அதிரடியாக நீக்கி, புதிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டார். அப்போதே, இந்த நடவடிக்கை ஜி ஜின்பிங்கின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக எடுக்கப்பட்ட ஓர் முன்னேற்பாடாகவே கருதப்பட்டது. அதேபோல, 68 வயதுக்கு மேலாக உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஓய்வுபெற வேண்டும் என்ற விதியிலிருந்தும் சாமர்த்தியமாக விதிவிலக்கு பெற்றார் ஜி ஜின்பிங்.

கடந்த ஆண்டே போடப்பட்ட தீர்மானம்!

கடந்த 2021 நவம்பர் 10-ம் தேதி சீனத் தலைநகர் பீஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மத்திய உயர்நிலைக்குழு மாநாடு நடைபெற்றது. அதில் கட்சியின் உயர்நிலைப் பொறுப்பில் இருக்கும் 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில், கடந்த நூறு ஆண்டுகளாக சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடவே முக்கியமாக, தற்போது சீன அதிராக இருக்கும் ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்க வழிசெய்யும் 14 பக்கத் தீா்மானத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த மாநாட்டில், `வரும் 2022-ம் ஆண்டு கட்சியின் 20-வது தேசிய மாநாட்டை நடத்துவது, அந்த மாநாட்டில் ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறை அதிபராகப் பதவியேற்பதற்கான ஒப்புதல் வழங்குவது, சிறப்புக் கூடுதல் அதிகாரத்தை வழங்குவது போன்ற பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூன்றாவது முறையாக சீன அதிபர்!

இந்த நிலையில், அக்டோபர் 22-ம் தேதியோடு அதிபர் ஜி ஜின்பிங்கின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் முடிவடைந்தது. அதேநாள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடும் நடந்து முடிவடைந்தது. அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், 200 மத்தியக் குழு உறுப்பினர்களும், 25 ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களும் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டனர். முக்கியமாக, அனைவரும் எதிர்பார்த்தபடியே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஜி ஜிங்பின் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம், மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங் பொறுப்பேற்கவிருக்கிறார்.

அதிபருக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

அதேசமயம், அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வதற்கு எதிராக, சீன மக்கள் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே, `அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற பதாகைகளைத் தலைநகர் பீஜிங்கின் பல இடங்களில் தொங்கவிட்டனர். அதிபரின் சர்வாதிகார ஆட்சி, அவர் கடைபிடிக்கும் கடுமையான கோவிட் கொள்கை உள்ளிட்ட காரணங்களால் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது மூன்றாவது முறை ஜி ஜின்பிங் அதிபராகப் பொறுப்பேற்பதற்கு எதிராகவும் வலுத்திருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக, ``கோவிட் பரிசோதனை வேண்டாம், உணவு வேண்டும். ஊரடங்கு வேண்டாம், விடுதலை வேண்டும். பொய்கள் வேண்டாம், கண்ணியம் வேண்டும். கலாசாரப் புரட்சி வேண்டாம், சீர்திருத்தம் வேண்டும். பெரும் தலைவர் வேண்டாம், ஓட்டுரிமை வேண்டும். அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு!” போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

மீண்டும் அதிபராகும் ஜி ஜின்பிங்: எதிர்த்துப் போராடும் பொதுமக்கள்! - என்ன நடக்கிறது சீனாவில்?

மேலும் தலைநகரிலுள்ள சிடோங் பாலத்தில், ``வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள், சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜி ஜின்பிங்கை வெளியேற்றுங்கள்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தப் போராட்ட பேனர்களின் புகைப்படங்களை இணையதளம், சமூக வலைதளங்களில் பதிவிட்டு ‘நான் பார்த்தேன்’ (I saw it) என்ற ஹேஷ்டேக்குடன் சீன மக்கள் டிரெண்ட் செய்துவருகின்றனர். இந்தப் போராட்டங்களையும், சமூக வலைதளப் பதிவுகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சீன அரசாங்கம் இறங்கியிருக்கிறது. குறிப்பாக, போராட்டம் நடைபெறும் இடங்களில் செய்தியாளர்கள் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருப்பதோடு, போராட்டம் தொடர்பான படங்களைப் பகிரும் சமூக வலைதளக் கணக்குகளையும் முடக்கிவருகிறது சீன அரசாங்கம்.

`சர்வாதிகாரத்தின் மூலம் சட்டத்தை மாற்றி, யார் வேண்டுமானாலும் கட்சித் தலைவராகி விடலாம். ஆனால், மாவோவைப்போல மக்கள் தலைவராக வேண்டுமென்றால், மக்கள் விருப்பம் அறிந்து ஜி ஜின்பிங் செயல்பட வேண்டும்’ என்கிறார்கள் சீன அரசியலைக் கூர்ந்து நோக்கும் விமர்சகர்கள்!