அரசியல்
அலசல்
Published:Updated:

வாழ்நாள் முழுவதும் சீன அதிபர்... ஜி ஜின்பிங் தவிர்க்க முடியாத தலைவரானது எப்படி?

ஜி ஜின்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி ஜின்பிங்

1982 முதல் 2006-ம் ஆண்டுக்குள்ளாகப் பல மாகாணங்களிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார்

தனது இளமைக் காலத்தில் வீடின்றி குகையில் வாழ்ந்த ஜி ஜின்பிங், இன்று ஒட்டுமொத்த சீனாவையும் தனது ஒற்றைப்பிடியில் வைத்திருக்கிறார். சீன அதிபராக மூன்றாவது முறையாக முடிசூடிக்கொள்ளவிருக்கிறார் ஜின்பிங். சர்வதேச அரசியலிலும் தன்னைத் தவிர்க்க முடியாத தலைவராக மாற்றிக்கொள்ள முயன்றுவருகிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும், ஆட்சியிலும் தன்னை சக்திவாய்ந்த தலைவராக எப்படி மாற்றிக்கொண்டார் ஜின்பிங்?

ஜின்பிங் முன்கதை!

`சீனப் புரட்சியின் தந்தை’ எனப் போற்றப்படும் மா சே துங்கின் நெருங்கிய நண்பரான ஜி சோங்ஷூனுக்கு 1953-ல் மகனாகப் பிறந்தார் ஜி ஜின்பிங். மா சே துங், சீன கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தபோது, அவர் உடனிருந்தவர்களில் சோங்ஷூனும் ஒருவர். 1968-ல், சீனப் புரட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகச் சொல்லி கட்சியில் இருந்து சோங்ஷூனை நீக்கியதோடு, அவரைச் சிறையிலும் அடைத்தார் மா சே துங். மேலும், சோங்ஷூனுடன் அவரது குடும்பம் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அரசு அதிகாரி களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு, லியாங்ஜியாஹே என்ற கிராமத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார் ஜின்பிங். அந்தக் கிராமத்திலுள்ள சிறிய குகையில் ஜின்பிங்கின் குடும்பம் வாழ்ந்தது. அங்குள்ள பள்ளியில் படித்துக்கொண்டே விவசாய வேலைகளையும் செய்துகொண்டிருந்தார் ஜின்பிங்.

1972-ம் ஆண்டில், `சிறையில் அடைக்கப்பட்ட வர்கள் குடும்பத்தோடு இணையலாம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தார் அப்போதைய சீன அதிபர் என்லாய். இதனால், தந்தையோடு மீண்டும் இணைந்தார் ஜின்பிங். இள வயதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர பல முறை விண்ணப்பித்தார் ஜின்பிங். தந்தையின் சிறைத் தண்டனையைக் காரணம் காட்டி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 1974-ம் ஆண்டு, அவர் 10-வது முறையாக அனுப்பிய அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்சியில் சேர்ந்த பிறகு, கெமிக்கல் இன்ஜினீயரிங்-கில் பட்டம் பெற்றார். கட்சித் தொண்டர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி, ஃபுஜியான் மாகாண அரசியலில் கவனம் பெறத் தொடங்கினார் ஜின்பிங்.

எதிரிகள் களையெடுப்பு!

1982 முதல் 2006-ம் ஆண்டுக்குள்ளாகப் பல மாகாணங்களிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். 2007 அக்டோபரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது மாநாட்டில், ஒன்பது பேர் கொண்ட சக்திவாய்ந்த பொலிட்பீரோ குழுவின் உறுப்பினரானார். 2008-ல் சீனாவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றார். சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் திறம்பட நடத்தி முடித்ததால், பிரபலமானார் ஜின்பிங்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஓய்வுபெற்ற தலைவர்களும் அதிகாரம் செலுத்துவது வழக்கம். அதைமீறி புதிதாகக் கட்சிக்குள் வருபவர்கள் வளர்வது மிகக் கடினம். ஆனால், தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கான ஆட்களைக் கட்சிக்குள் திரட்டினார் ஜின்பிங். ஆரம்பகாலத்தில் கட்சியிலுள்ள அனைவருடனும் சமரசம் செய்துகொள்ளக்கூடிய தலைவராக ஜின்பிங் இருந்ததால், நிர்வாகிகள் மத்தியில் நற்பெயர் பெற்றார்.

2012 நவம்பரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங், 2013 மார்ச் மாதத்தில் முதன்முறையாக சீன அதிபரானார். ஆட்சிக்கு வந்தவுடன் `ஊழல் ஒழிப்பு’ பிரசாரத்தை மேற்கொண்டார். சீன மக்கள் விடுதலை ராணுவத்தில், தனக்கு எதிராகத் திரும்பக்கூடியவர்களைப் பட்டியலிட்டு, அவர்களைக் களையெடுத்தார்.

வாழ்நாள் முழுவதும் சீன அதிபர்... ஜி ஜின்பிங் தவிர்க்க முடியாத தலைவரானது எப்படி?

அரசியல், ஊழியர்கள், தளவாடங்கள், ஆயுதங்கள் என நான்கு தலைமையகங்களைக் கொண்டிருந்தது சீன மக்கள் விடுதலை ராணுவம். 2015-ல், இதை 15 சிறிய முகமைகளாக மாற்றினார். தனக்கெதிராக ராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ராணுவக் கட்டமைப்புகளை அவர் மாற்றி அமைத்ததாகச் சொல்கிறார்கள். கட்சிக்குள் தனக்கு எதிராக நிற்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களைச் சிறைக்கு அனுப்பினார். ஜின்பிங் ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் 47 லட்சம் பேரை விசாரணை செய்திருக்கிறது ஊழல் தடுப்புப் பிரிவு.

``ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தனது சுயலாபத்துக்காகவே பயன்படுத்திவருகிறார் ஜின்பிங். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் மொத்தமுள்ள 31 மாகாணச் செயலாளர்களில், 24 பேர் ஜின்பிங்கின் விசுவாசிகள். மாகாண நிலைக்குழுவிலுள்ள 281 பேரில், பெரும்பாலானவர்கள் ஜின்பிங்கால் வளர்ச்சி பெற்றவர்கள். தன் விசுவாசிகளை அதிகாரத்தில் வைத்திருப்பதால்தான், கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்புகளையும் மீறித் தொடர்ந்து சீனாவின் அதிபராகச் செயல்பட்டுவருகிறார் ஜின்பிங்’’ என்கின்றனர் சீன அரசியல் நோக்கர்கள்.

மூன்றாவது முறை அதிபர்!

சீனாவில், ஒருவர் இரு முறைக்கு மேல் அதிபராக இருக்கக் கூடாது என்ற சட்டம் 1990-களில் கொண்டுவரப்பட்டது. 2018-ல் இரண்டாவது முறையாக அதிபர் பதவியேற்றவுடனேயே இந்தச் சட்டத்தை நீக்கினார் ஜின்பிங். இந்த நிலையில், கடந்த வாரம் நடந்து முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டின் இறுதிநாளில், ஜி ஜின்பிங் முன்னிலையிலேயே அவர் அருகில் அமர்ந்திருந்த முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவோ காரணம் ஏதும் சொல்லப்படாமல் வலுக்கட்டாய மாக வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு, ஜின்பிங் மூன்றாவது முறையாகக் கட்சியின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும், மூன்றாவது முறையாக அதிபர் நாற்காலியிலும் அமரவிருக்கும் ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் சீன அதிபராக இருக்கவும் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது.

ஜின்பிங் ஆட்சியில், சீனாவின் தொழில் வளர்ச்சி, மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இருந்தும், கடந்த சில ஆண்டுகளாக சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஜின்பிங் கொண்டுவந்த கடுமையான கட்டுப்பாடுகளாலும், அவரது சர்வாதிகாரப் போக்காலும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தலைநகர் பீஜிங்கில், `சர்வாதிகாரியை நீக்கிவிட்டு, தேர்தல் மூலம் அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று பேனர்கள் ஏந்திய போராட்டங்கள் தலையெடுத்திருக்கின்றன.

இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்துக்குச் சென்றால், ஜின்பிங்கின் அதிகாரம் ஆட்டம் காண்பது நிச்சயம்.