Published:Updated:

`கொரோனா, சீனாவில் இருந்து விமானப் பயணிகள் மூலம் விதைக்கப்பட்டது!’ - ட்ரம்பின் உதவியாளர்

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப் ( AP )

தினமும் நடக்கும் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவரும் சீனாவைத் தாக்கிப் பேசினர். இந்தப் பட்டியலில் தற்போது இணைந்து இருப்பவர் அதிபர் ட்ரம்பின் உதவியாளர் பீட்டர் நவாரோ.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது, அமெரிக்காதான். அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கியது முதலே, ட்ரம்ப், சீனாவை விமர்சிக்கத் தொடங்கினார். கொரோனா வைரஸ் சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, சீனாவில் உருவானது அல்ல என சீனா மறுப்பு தெரிவித்தும், அமெரிக்கா விடுவதாக இல்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனா, இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, சீனாவை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் குற்றம்சாட்டியது. தினமும் நடக்கும் வெள்ளை மாளிகைச் செய்தியாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவரும் சீனாவைத் தாக்கிப் பேசினர்.

இந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் அதிபர் ட்ரம்பின் உதவியாளர் பீட்டர் நவாரோ. வெள்ளை மாளிகையில் வர்த்தக ஆலோசகராக இருக்கும் இவர், ``கடந்த ஆண்டு சீனாவின் வுகான் பகுதியில் கொரோனா வைரஸ் முதன்முதலாக உருவானது. சீனா, உலக சுகாதார அமைப்பை தனது பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்திகொண்டதோடு, சுமார் இரண்டு மாதங்களுக்கு உலகிடமிருந்து கொரோனா குறித்த தகவல்களை மறைத்திருக்கிறது. அதன் பின்னர் அவர்கள் ஆயிரக்கணக்கான பயணிகளை மிலன், நியூயார்க் உள்ளிட்ட உலகப் பெரு நகரங்களுக்குக் கொரோனாவை விதைப்பதற்காக அனுப்பிவைத்தனர். மிலன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியது இதனால்தான்” என்றார்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

இவர், இதுதொடர்பாகப் பேசுவது முதல்முறை என்றாலும் அமெரிக்க அதிகாரிகள் பேசுவது முதல்முறை கிடையாது. அமெரிக்க அரசின் செயலாளராக இருக்கும் மைக்கேல் பாம்போ, ``சீனா நினைத்திருந்தால் கொரோனா வைரஸை வுகானுக்குள் மட்டுமே வைத்திருந்திருக்க முடியும். ஆனால் அதனை அவர்கள் பெருந்தொற்றாக மாற்றிவிட்டனர். அதனால்தான் கொரோனா விஷயத்தில் அமெரிக்காவுக்கு நேர்ந்ததுக்கு எல்லாவற்றுக்கும் சீனாவே பொறுப்பு எனக் குற்றம்சாட்டுகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு