Published:Updated:

மூடப்படும் சிறப்பு மருத்துவமனைகள்?; அதிபரின் வுகான் பயணப் பின்னணி! - மீண்டுவிட்டதா சீனா? #Corona

அதிபர் - மருத்துவமனை
அதிபர் - மருத்துவமனை ( AP )

சீனாவில் கொரோனா வைரஸுக்காக புதிதாகத் திறக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வரும் இந்த வேளையில் முதன் முதலில் வைரஸ் உருவானதாகக் கூறப்படும் சீனாவில் இதன் தாக்கம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ``சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 80,000-க்கும் மேற்பட்டவர்களில் 70% பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். வைரஸைக் கட்டுப்படுத்தச் சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அங்கு தன் வீரியத்தைக் குறைத்துக்கொண்டாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதில் அனைத்து நாட்டு அரசுகளும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியிருந்தார்.

சீன கொரோனா
சீன கொரோனா
AP

அவர் கூறியபடியே தற்போது சீனாவில் வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நாள் ஒன்றுக்கு 30-க்கும் அதிகமான புதிய நோயாளிகள் உருவானதானதாகவும் தற்போது அவர்களின் எண்ணிக்கை 20-க்கும் கீழே இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

`செர்னோபில் ஹீரோக்கள்; தற்கொலைப் படை!’ - உயிரைப் பணயம் வைக்கும் சீன மருத்துவர்களின் பயணம் #corona

சீனாவில் கடந்த டிசம்பர் மாதமே வைரஸ் பரவத்தொடங்கியிருந்தாலும் ஜனவரி மாதத்தின் பாதியில்தான் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வைரஸ் உறுதியானதும் அது முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட வுகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டது. போக்குவரத்து, கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் என அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. சீனாவின் பிற பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தொழிலாளர்கள் வுகான் நகரத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

சீனா கொரோனா
சீனா கொரோனா
AP

நகரம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ சோதனைகள், விழிப்புணர்வு அறிவிப்புகள், சுகாதார நடைமுறைகள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரே வாரத்தில் புதிய அதிநவீன மருத்துவமனைகள் என அனைத்து ஏற்பாடுகளும் படுதீவிரமாகச் செய்யப்பட்டது. தற்போதுவரை வுகானில் மட்டும் 16 ரெடிமேட் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பெரிய மண்டபங்கள், விளையாட்டுக் கூடங்கள் என பல்வேறு இடங்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு ரோபோ மற்றும் ட்ரோன் மூலம் மக்கள் கண்காணிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார்கள். இந்த வைரஸினால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதன் தாக்கத்திலிருந்து நாடு விரைவில் மீண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

`நேரத்துடனான போராட்டம்; சொன்ன தேதிக்கு முன்னரே முடிப்பு!' - தயாரானது சீனாவின் `ஃபைர் காட் மவுன்டைன்'

இந்த நிலையில் சீன அதிபர், வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுகான் நகரத்துக்கு வந்ததும் இதை உலகத்துக்குத் தெரியப்படுத்தவே என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வைரஸ் அறிவிப்பு வெளியான பிறகு அதாவது கடந்த 100 நாள்களில் முதல் முறையாக நேற்று முன்தினம் வுகான் நகருக்கு வருகை தந்திருந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். இவருடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் ராணுவத் தலைவர் ஆகியோர் வந்திருந்துள்ளனர். வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தத் தலைவர்களின் வருகை உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்தது.

என் 95 முகமூடி அணிந்தபடி பெய்ஜிங்கிலிருந்து வுகான் வந்திருந்த அதிபர் சுமார் 10 மணி நேரம் அந்த நகரத்திலிருந்தார். சாலைகளில் இறங்கி வீடுகளில் தஞ்சமடைந்திருந்த மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். மருத்துவர்கள், அதிகாரிகள், நோயாளிகள், குணமடைந்தவர்கள், மருத்துவ தொழிலாளர்கள் என அனைவரிடத்திலும் பேசினார். பின்னர் முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட ஒரு அரசு கட்டட அறையில் வுகான் மற்றும் ஹூபே மாகாணத்தின் தற்போதைய நிலை பற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். சீன அதிபர் தெருக்களில் நின்று மக்களைச் சந்தித்தது, கொரோனா தொடர்பான பயத்தையும் அதிலிருந்து சீனா மீண்டு வருகிறது என்பதையும் தன் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் எடுத்துக்காட்டுவதற்காகவே நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில வாரங்களில் சீனாவில் வைரஸின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சீனாவில் கொரோனா வைரஸுக்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்ட 16 மருத்துவமனைகளையும் அகற்றுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் நிரந்தரமாக உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு தற்காலிக மருத்துவமனைகள் இடிக்கப்படவுள்ளதாகச் சீன ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்துமே வைரஸிலிருந்து சீனா மீண்டுவிட்டதையே காட்டுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு