Published:Updated:

கொரோனா: `90 நாட்களில் பதில் வேண்டும்’ - ஜோ பைடன் அதிரடியால் கடுப்பான சீனா

பைடன்
பைடன்

``கொரோனா தொற்றின் தொடக்கம் குறித்து எங்களுக்கு அமெரிக்காவின் மீது சந்தேகம் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும்'' - சீனா

கொரோனா வைரஸ் முதன்முதலில் எங்கிருந்து உருவானது என்பதன் மூல காரணத்தை 90 நாட்களுக்குள் கண்டறிந்து அறிக்கையாக சமர்பிக்குமாறு அமெரிக்க உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். மேலும், இது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது, கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் அமைந்துள்ள இறைச்சி சந்தையில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு அவை மெல்ல மெல்ல பரவி உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை பதினாறு கோடிக்கும் அதிகமானோர் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில், சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலகின் ஏக தேசங்களைம் குழப்பியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஓவ்வொரு நாடுகளும் முதன்மை தடுப்பாயுதங்களாக தங்கள் கைகளில் எடுத்திருப்பது முக்கக்கவசங்களையும், தடுப்பூசிகளையும் தான். அமெரிக்கா முதலான சில நாடுகள் தங்களது பெரும்பாலான நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி Mask- Free Zoneஆக அறிவித்துள்ளது.

பைடன்
பைடன்
Evan Vucci

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸானது முதன்முதலில் எங்கிருந்து உருவானது குறித்த தெளிவான கருத்துக்கள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்கு பரவியுள்ளது என்று ஒரு தரப்பினரும், அதனை மறுத்து, வூஹான் ஆய்வகத்தில் நடந்த விபத்துனாலேயே ஆய்வகத்திலிருந்து வைரஸ் வெளியேறியது என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக, பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு நடத்தியும் உண்மை நிலவரத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

முன்னதாக, டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில், கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் இறப்பு எண்ணிக்கையானது அமெரிக்காவில் பெருமளவில் காணப்பட்டது. அப்போது, கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவிலிருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவியது. அது ஒரு ‘சீனா வைரஸ்’ என்றெல்லாம் கூறி சர்ச்சையை கிளப்பி வாங்கி கட்டிக் கொண்டதெல்லாம் தனிக்கதை.

தொடர்ந்த குழப்பம்; விசாரணையை முடுக்கிவிட்ட அதிபர்

அண்மையில் அமெரிக்காவின் ஊடகங்களில் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் தான் கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் தென்படுவதாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அமரிக்காவின் பிரபல புலனாய்வு நாளிதழான ‘தி வால் ஸ்ட்ரீட் (The Wall Street)’ நாளிதழில்,” 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று குறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே நவம்பர் மாதத்தில் வூஹான் ஆய்வகத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுப்பிரிவு அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது” என்ற செய்தி வெளியானது.

இந்த விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிகையில், `கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது குறித்து 90 நாட்களுக்குள் கண்டறிந்து முழுத் தகவல்களுடன் கூடிய அறிக்கையை சமர்பிக்குமாறு” அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் ஈடுபடும் அனைவரும் இரட்டிப்பாக உங்களது முயற்சியை கூட்டிகொண்டு ஈடுபடுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு சீனா முழு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை உடனுக்குடன் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்மென்றும், இதன் தரவுகள் அனைத்தும் எந்தவொரு ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக கையாளப்படும் என்றும் அதில் குறிப்பிடுள்ளார்.

பைடன்
பைடன்
Evan Vucci

உலக சுகாதார அமைப்பின் கீழ் நிகழும் இந்த ஆய்வில் அமெரிக்கா தனது ஒத்த சிந்தனைகள் கொண்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

திசைமாற்றவே திடீர் விசாரணை - கடுப்பான சீனா

ஜோ பைடனின் திடீர் உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ள சீனா, அமெரிக்கா மீது கடுமையான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாவோ லிஜியன் (Zhao Lijian),

கொரோனா: `90 நாட்களில் பதில் வேண்டும்’ - ஜோ பைடன் அதிரடியால் கடுப்பான சீனா
Andy Wong

“அமெரிக்கா அரசு உள்நோக்கத்துடனேயே இந்த விசாரணைக்கு வித்திட்டுள்ளது. ஈராக்குக்கு கோடிக்கணக்கில் ஆயுதங்கள் விற்க்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்துள்ள சூழலில், அதை திசைமாற்றுவதற்காகவே சீனா மீது அவதூறு கருத்துக்களை திட்டமிட்டு தெரிவித்து இதை செயல்படுத்தியுளார் அதிபர். உலகமே இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் சூழலில் உலக சுகாதார அமைப்பை அவமதித்தது மட்டுமில்லாமல், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கிறார் பைடன்” என்று காரசாரமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசியவர், “கொரோனா தொற்றின் தொடக்கம் குறித்து எங்களுக்கு அமெரிக்காவின் மீது சந்தேகம் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும். உலகமெங்குமுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ஆய்வகங்களில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவே வெளிப்படையான விசாரணையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

 `வூஹான் ஆய்வகத்திலிருந்து பரவிய கொரோனா..?' - அதிர வைக்கும் அமெரிக்க உளவுத்துறை அறிக்கை?!

இவ்வாறு இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சமயத்தில், நாடாளுமன்றத்தில் கொரோனா தொடர்பான விசாரணை நெருக்கடிகளிலிருந்து விடுபடவே பைடன் அரசு அந்த பொறுப்பை உலக சுகாதார அமைப்பிற்கு மாற்றியுள்ளதாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post)’ செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த சர்ச்சை அலைகளை எல்லாம் கடந்து அதிபர் சொன்னபடி, 90 நாட்களில் பல நாள் தேடலுக்கான அந்த பதில் கிடைக்குமா என்பது உலகளாவிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு