Published:Updated:

நிதியை நிறுத்திய அமெரிக்கா... 30 மில்லியன் டாலர் கூடுதல் வழங்கும் சீனா #WHO

உலக சுகாதார அமைப்பு - WHO
உலக சுகாதார அமைப்பு - WHO

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால்தான் கொரோனா போன்ற பெருந்தொற்றை நாம் வெல்ல முடியும் என்பதே உலக சுகாதார நிறுவனம் சொல்லும் கருத்தாக இருக்கிறது!

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவால் சமாளிக்க முடியாத அளவில் பெரும் பிரச்னையாக கொரோனா உருவாகி இருக்கிறது. எனினும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் நேரத்தில், அதிபர் ட்ரம்ப் சீனாவை குறை சொல்கிறார். பின்னர் உலக சுகாதார நிறுவனத்தைக் குறை சொல்கிறார், தொடர்ந்து அமெரிக்கா தற்போது சந்திக்கும் பிரச்னைக்கு முந்தய அதிபர் ஒபாமா அரசுதான் காரணம் என்று சொல்லும் அளவுக்கு கொரோனா விவகாரத்தில் மற்றவர்கள் மீது பழிபோடுவதில் ட்ரம்ப் கவனம் செலுத்துவதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவை மையமாகக்கொண்டு, அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், கடந்த 13-ம் தேதி அந்நிறுவனத்துக்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா நிறுத்துவதாகத் தெரிவித்தார். `கொரோனா வைரஸ் வெடிப்பு ஏற்பட்ட பிறகு, அமெரிக்காவின் தாராள மனப்பான்மைக்குப் பலன் கிடைத்ததா என்பதில் சந்தேகம் இருக்கிறது. உண்மையில் உலக சுகாதார நிறுவனத் தகவல்களைப் பகிர்வதில் வெளிப்படத்தன்மையுடன் செயல்படவில்லை’ என அப்போது தெரிவித்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப், அமெரிக்கா ஆண்டுக்கு உலக சுகாதார நிறுவனத்துக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாகவும், சுகாதார நிறுவனத்தில் 196 நாடுகள் அங்கம் வகித்தாலும் அமெரிக்காதான் ஒட்டுமொத்த நிதியில் கிட்டத்தட்ட 15 சதவிகித நிதியை வழங்கி வந்ததாகவும் தெரிவித்தார். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கா போன்ற நாடு உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவது தவறானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சீனா
சீனா

இந்த நிலையில் சீனா, உலக சுகாதார அமைப்புக்கு கூடுதலாக சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலரை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்க உள்ளது. ஏற்கெனவே அந்த நாடு, கொரோனா தடுப்பு பணிகளுக்காக உலக சுகாதார அமைப்புக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சீனா வழங்கியுள்ள இந்த நிதியையும், சீனா அமெரிக்க மோதலின் ஒரு பகுதிதான் என்கிறார்கள் சில சர்வதேச அரசியல் நோக்கர்கள். சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால்தான் கொரோனா போன்ற பெருந்தொற்றை நாம் வெல்ல முடியும் என்பதே உலக சுகாதார நிறுவனம் சொல்லும் கருத்தாக இருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு