Published:Updated:

15,106 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் எல்லைகளில் என்ன நடக்கிறது ? - ஒரு விரிவான அலசல்!

இந்திய வரைபடம்
இந்திய வரைபடம்

உலகம் முழுக்க கொரோனாவுடன் யுத்தம் செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்தியா சமீபகாலமாக தன்னுடைய எல்லைப் பகுதிகளில் தொடர் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

`வடக்கே இமய மலையும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் அசைக்கமுடியா பலம் கொண்ட இயற்கை அரண்களை உடையது. `இப்படித்தான் சிறுவயதில் படித்ததாக ஞாபகம். ஆனால், தற்போது இந்தியா அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. அதன் எல்லைகள் எப்போதும் பதற்றம் நிறைந்தே காணப்படுகின்றன. இந்தியா 15,106 கிலோமீட்டர் தூரத்திற்கு நீளும் தன் சர்வதேச நில எல்லைகளை, 8 நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான், சீனா, பூட்டான், நேபாள் மற்றும் பாகிஸ்தான் உடன் வடக்கு மற்றும் வடமேற்கு எல்லைகளையும், பங்களாதேஷ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளோடு கிழக்கு எல்லைகளையும் பகிர்ந்துகொள்கிறது.

இந்தியா
இந்தியா

உலகம் முழுக்க கொரோனாவுடன் யுத்தம் செய்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முனைகின்றன. அந்த வகையில், இந்தியா சமீபகாலமாக தன்னுடைய எல்லைப் பகுதிகளில் தொடர் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

இந்தியா - சீனா

சிக்கிம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் சீனாவுடன், 3,488 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது இந்தியா. இந்தியாவின் கவனம் கொரோனா வைரஸ் மீது குவிந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மே மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதையடுத்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இரு ராணுவத்தினருக்கு இடையில் நடக்கும் இந்த மோதல்களில் இதுவரை ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. இதேபோல சிக்கிம் மாநிலத்தின் முகுத்தங் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. குறிப்பாகக் கிழக்கு லடாக் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக இரு நாடுகளும் படைகளைக் குவித்து வருகின்றன.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இருந்தபோதும், இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் நிலவரம் கட்டுக்குள் இருப்பதாக அறிவித்திருக்கின்றன. இருநாடுகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை செய்துவைப்பதாக அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் உதவிக்கரம் நீட்ட, அதை இந்தியச் சீன நாடுகள் மறுத்துள்ளன.

இந்த நிலையில், லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா, சீன ராணுவ அதிகாரிகள் இன்று (ஜூன் 6) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. லடாக் அருகே பாங்காங் திசோ பகுதியில் நடைபெறவிருக்கும் இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்தியா சார்பாக லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்குச் செல்ல இருக்கிறார்.

இந்தியா - நேபாளம்

கே.பி.ஷர்மா ஒலீ - மோடி
கே.பி.ஷர்மா ஒலீ - மோடி

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், பீகார், சிக்கிம் ஆகிய பகுதிகளோடு 1,751 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைகளை நேபாளத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறது இந்தியா. சமீபத்தில், நேபாள அரசு அந்நாட்டின் அதிகாரபூர்வ வரைபடத்தை வெளியிட்டது. அதில் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாள நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன. இந்தப்பகுதிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சேரும் பகுதிகள் என்று இந்திய அரசு உரிமை கோருகிறது.

நேபாளத்தால், வெளியிடப்பட்ட இந்தப் புதிய வரைபடம் இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ சமீபத்தில் வெளியிடும் கருத்துகள் அவரது இந்திய எதிர்ப்பு மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் நேபாளம் சில வருடங்களாகவே சீன ஆதரவு நிலைப்பாடு எடுப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இது இந்தியாவுக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுப்பது நிச்சயம். எனவே, இந்தியா விரைந்து நேபாளத்துடன் நேரடி பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா -பாகிஸ்தான்

எல்லைப் பகுதிகளின் நீளம் 3,233 கிலோமீட்டர். பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் இந்தியப் பகுதிகள் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு மற்றும் காஷ்மீர். இந்தியாவின் அண்டை நாடுகளில், முக்கிய எதிரியாக இருக்கும் நாடு பாகிஸ்தான். அந்நாட்டுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள், நல்லெண்ண தூதுவர்கள், சமாதான உடன்படிக்கைகள் எதுவும் இருநாடுகளின் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு வழங்கவில்லை. எல்லையில் நடக்கும் போரைக் காட்டிலும், இந்தியா எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் ஏராளம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு, அப்பகுதி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பிறகு, இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு காஷ்மீரையும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) பகுதியில் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 411 முறை போர்நிறுத்த விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் பாகிஸ்தானைக் குற்றம் சாட்டி உள்ளது. மறுமுனையில் பாகிஸ்தான் ஏப்ரல் 10-ம் தேதி வரை இந்தியா 708 முறை போர்நிறுத்த விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக இரு நாடுகளின் இடையேயான மோதல்கள் தற்காலிகமாகக் குறைந்திருந்தாலும், இரண்டு நாடுகள் இடையே அமைதி நிலவுவது கனவாக மட்டுமே இருக்கிறது.

இந்தியா - பூட்டான்

மேற்குவங்கம், சிக்கிம், அசாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் 699 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதியைக் கொண்டிருக்கிறது பூட்டான். இந்தியா அதோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் மிகச்சிறப்பான நல்லுறவைக் கொண்டிருக்கும் நாடு பூட்டான். சர்ச்சைகளற்ற எல்லைகள், நெருக்கமான, வெளியுறவுத் துறையில் பரஸ்பர நல்லுறவு ஆகியவை கொண்டு, இருநாடுகளும் நல்ல உறவைப் பேணுகின்றன.

பூட்டான்
பூட்டான்

உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாகப் பூட்டான் தன்னை முன்னிறுத்திக் கொண்டது மட்டுமன்றி, பூட்டான் தன்னுடைய தொழில்நுட்ப ராணுவ வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்துகிறது. இந்த நிலையில் சீனா, அமெரிக்க நாடுகள் பூட்டானுடன் நட்புறவு பாராட்டத் தொடங்கியிருக்கின்றன. எனினும், ராணுவ ரீதியாக பூட்டான் இந்தியாவுக்கு எப்போதும் துணை நிற்கிறது. மின் பகிர்வு, இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பூட்டான் கட்டணம் விதிப்பது போன்ற சில கருத்துவேறுபாடுகள் இரு நாடுகளுக்கும் இடையிலிருந்தாலும், அவை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன.

"மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் சிரிப்பைத் தருகிறது" - விரக்தியில் சிரிக்கும் விவசாயிகள்!

இந்தியா - மியான்மர்

இந்தியா - மியான்மர் எல்லை
இந்தியா - மியான்மர் எல்லை

மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளில் 1,643 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன இந்தியா, மியான்மர் நாடுகள். ஆயுதக் கடத்தல், போதை மருந்துக் கடத்தல், கள்ளநோட்டுகள் புழக்கம், தொடர் கிளர்ச்சி என இரு நாடுகளின் எல்லைப் பகுதிகள் எண்ணற்ற சட்ட மீறல்களின் இருப்பிடமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியா, மியான்மர் எல்லைகளை ஒட்டி ஒரு தடுப்புச் சுவரினைக் கட்டமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. மேலும், பிற கிழக்காசிய நாடுகளுடன் சாலை இணைப்பு, ரயில்வழி இணைப்பு ஆகியவற்றை மியான்மர் வழியாக ஏற்படுத்தவும் இந்தியா சார்பாக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நேரடியாக இரு நாடுகளுக்கு இடையே பகையுணர்வு இல்லையென்றாலும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் இரு நாடுகளின் நல்லுறவுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

இந்தியா - பங்களாதேஷ்

4,096 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைகளை இந்தியாவின் மேகாலயா, அஸ்ஸாம், திரிபுரா, மிசோரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலப் பகுதிகளோடு பகிர்ந்துகொள்கிறது பங்களாதேஷ். மியான்மர் போலவே பங்களாதேஷ் எல்லைகளில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் பிரச்னையாக இருக்கின்றன. ஆனால். அவற்றைக் காட்டிலும் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கையே இரு நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் அதி முக்கியப் பிரச்னை. அவ்வப்போது இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவதும் உண்டு. இந்தப் பகுதிகளிலும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைக் கண்டதும் சுடும் உத்தரவைக் கொண்ட கொள்கை முடிவை இந்தியா 2001-ம் ஆண்டு எடுத்தது. இரு நாடுகளின் நல்லுறவை வெகுவாகப் பாதித்த கொள்கை முடிவாக இது அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. இப்படி இடம்பெயரும் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாகச் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இந்தியா எல்லைப் பாதுகாப்புப் படை மீது குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்த விஷயங்கள் குறித்து இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பல சந்திப்புகள், உரையாடல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஷேக் ஹசீனா - மோடி
ஷேக் ஹசீனா - மோடி

இந்தியா - ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 106 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைகளை இந்தியா- ஆப்கானிஸ்தான் நாட்டுடன் பகிர்ந்துகொள்வதாகக் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், இந்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கும் தரவுகளில் இந்தப் பகுதி இந்தியா எல்லைப் பகுதியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் பட்சத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டுடன் நேரடி வர்த்தக பரிமாற்றங்களை எளிதாக மேற்கொள்ளும். ஆனால், பாகிஸ்தானுடன் சர்ச்சை தீராமல், ஆப்கானிஸ்தான்- இந்தியா எல்லை பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.

மன்னர்களும், வீரர்களும், வாள்களும், வேல்களும் ஏந்தி போரிட்ட காலங்களில்தான், இயற்கை அரண்கள் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அளித்தன. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியும், அதிநவீன போர்க்கலன்களும், ஏவுகணைகளும், விமானங்களும் கொண்ட இன்றைய சூழலில், இந்தியாவின் உண்மையான அரண், நமது மத்திய அரசு அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நல்லுறவுதான். அந்தவகையில், சக்திவாய்ந்த அதன் அண்டை நாடுகளுடன் இந்தியாவுக்குத் தற்போது இறுக்கமான சூழலே நிலவுகிறது. மிக சாதுர்யமான முடிவுகளும், சிறப்பான ஆளுமையும் மட்டுமே இந்தியாவை, குறிப்பாக இந்திய ராணுவ வீரர்களைத் துப்பாக்கி, குண்டுகளிலிருந்து காப்பாற்ற முடியும்.

அடுத்த கட்டுரைக்கு