உக்ரைன் நாடு நேட்டோ, ஐரோப்பிய யூனியன் ஆகிய அமைப்புகளில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன்மீது ரஷ்யா நடத்திவரும் போர், 12-வது நாளாகத் தொடர்கிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து ஆயுத உதவிகளையும், நிதியுதவிகளையும் அளித்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் நிதி நிறுவனங்கள், ரஷ்ய அதிபர் புதின் உட்பட பல ரஷ்ய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
போரின் தொடக்கம் முதலே ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் சீனா, தற்போது இந்தப் பிரச்னையை தீர்த்துவைக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது.
சீனாவின் பீஜிங்கில், சீன வெளி விவகாரக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கலந்துகொண்டார்.
அப்போது உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய வாங் யி, ``அமைதிக்கான பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்கும், சர்வதேச அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கும் சீனா தனது பங்களிப்பைத் தொடர விரும்புகிறது. இது போன்ற பதற்றமான சூழ்நிலைகளில் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என சீனா நம்புகிறது. கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருப்பின், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டியது அவசியம். சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், உக்ரைனுக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை விரைவில் வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று வாங் யி பேசியிருந்தார்.