Election bannerElection banner
Published:Updated:

`செய்த தவற்றுக்கு பெரிய விலை கொடுக்க வேண்டிவரும்!' - சீனாவை எச்சரித்த ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( Alex Brandon )

வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய 50 மணி நேரத்துக்குள், ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதில் `COVID -19 தொற்று உலக அளவில் பரவியதற்கு சீனாவே காரணம்’ எனக் குற்றம்சாட்டினார்.

கொரோனா சிகிச்சைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்துக்குத் திரும்பினார். அந்த அலுவலகத்துக்கு வெளியே ரோஸ் கார்டனில் இருந்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டார். அதில், `COVID-19 தொற்று உலக அளவில் பரவியது சீனாவால்தான்’ என்று குற்றம்சாட்டினார். மேலும், ``சீனா செய்த தவற்றுக்கு, பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்'' என்றும் ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார்.

சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அமெரிக்காவில், 3,60,77,017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,11,793 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா இருக்கிறது.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அவரின் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று கடந்த 1-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ட்ரம்புக்குக் காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலேண்டின் வால்டர் ரீடு ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Alex Brandon

மருத்துவமனையில் ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் மூலம் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நான்கு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு ட்ரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து கடற்படை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். மருத்துவமனையிலிருந்து திரும்புவதற்கு முன்பு, ``நான் நலமாக இருக்கிறேன். விரைவில் குணமடைந்து பிரசாரத்துக்குத் திரும்புவேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, கொரோனா வைரஸுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய 50 மணி நேரத்துக்குள், ஓவல் அலுவலகத்துக்கு வெளியே ரோஸ் கார்டனிலிருந்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், COVID -19 தொற்று உலக அளவில் பரவியதற்கு சீனாவைக் குற்றம்சாட்டினார்.

`ட்ரம்ப் நிர்வாகத்தின் பெரும் தோல்வி; செயல்திட்டம் எதுவுமில்லை!'- கமலா ஹாரிஸ் கடும் விமர்சனம்

அந்த வீடியோவில் ட்ரம்ப், ``கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இது உங்கள் தவறு அல்ல. இது சீனாவின் தவறு. இந்த நாட்டுக்கு இழைத்த தீங்குக்காக, சீனா ஒரு பெரிய விலை கொடுக்கப்போகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்துக்கும் செய்த துரோகத்துக்கு சீனா ஒரு பெரிய விலை கொடுக்கப் போகிறது. இது சீனாவின் தவறு. இதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.

கொரோனா
கொரோனா
Pixabay

மேலும், கொரோனா வைரஸ் பரவியதை சீனா தவறாகக் கையாண்டதால், ஆயிரக்கணக்கான உயிர்களையும், லட்சக்கணக்கானோர் வேலைகளையும் இழந்து சொல்லமுடியாத பொருளாதார அழிவு ஏற்பட்டிருக்கிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து சீனா - அமெரிக்கா இடையிலான உறவு மோசமடைந்ததாகச் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை விதித்தன் மூலம் அமெரிக்க ஊடகவியலாளர்கள் மீதான கட்டுப்பாடுகள், உய்குர் முஸ்லிம்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் சீனா தவறான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறது என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். ட்ரம்ப் நிர்வாகம் கொரோனா விவகாரத்தைச் சரியாகக் கையாளாததாலேயே மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Alex Brandon

இதற்கிடையில், அமெரிக்க செனட் அவை உறுப்பினர் ரிக் ஸ்காட் வெளியுறவு தொடர்பான செனட் குழுவுக்கு எழுதிய கடிதத்தில், சீனாவில் நடந்த மொத்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, தனது தீர்மானத்தை உடனடியாகப் பரிசீலித்து நிறைவேற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். மேலும் அவர், தனது கடிதத்தில், ``சீனாவிலுள்ள வதை முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹாங்காங்கில் வசிப்பவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) விளையாட்டுப் போட்டிகளை சீனாவில் நடத்தக் கூடாது'' என்றும் ஸ்காட் வலியுறுத்தியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு