Published:Updated:

`சீனாவைச் சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின்பிங் ஆவேசம்

ஜின்பிங்
ஜின்பிங் ( Ng Han Guan )

மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 70,000 பேர் பங்கேற்றனர். அவர்களில் எவரும் முகக்கவசமோ, சமூக இடைவெளியோ கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

``சீனாவையும், சீன நாட்டினரையும் சீண்ட நினைக்கும் எவராயினும் 140 கோடி சீனர்களின் கேடயமாக இருக்கும் பெருஞ்சுவரின் மதில்களில் அவர்களது தலை மோதி அழிக்கப்படுவார்கள்.”
சீன அதிபர் ஜின்பிங்

சீனாவில் கடந்த 1921-ம் ஆண்டு, மா சேதுங் என்பவரால் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. அன்று முதல் இன்று வரை சீனாவில் தனது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்து ஒட்டுமொத்தத தேசத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு, நேற்றோடு (01.07.2021) 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை ஒட்டுமொத்த சீனவுமே அனைத்து இடங்களிலும் பிரமாண்டமாகக் கொண்டாடியது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு முழுவதும் தொடர் கொண்டாட்டங்களை நிகழ்த்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சீனா - ஜின்பிங்
சீனா - ஜின்பிங்
Ng Han Guan

இதையடுத்து சீனத் தலைநகர் பீஜிங்கிலுள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமை தாங்கினார். விழாவின் தொடக்கத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பின்னர் முப்படையினரின் ராணுவ அணிவகுப்பு பிரமாண்டமாக அரங்கேறியது. அப்போது விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டைக் குறிக்கும் வகையில், `100’ என்ற எண்ணை வானில் வடித்தவாறு பீஜிங் மாநகர் முழுவதும் பறந்து சென்றன.

மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 70,000 பேர் பங்கேற்றனர். அதில் எவரும் முகக்கவசமோ, சமூக இடைவெளியையோ கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிப்பிடத்தக்கது. விழாவின் முக்கியப் பகுதியாக அமைந்த அதிபர் ஜின்பிங்கின் பேச்சு, சமீபகாலமாக கொரோனா விவகாரங்கள் குறித்து சீனா மீது தொடர்ந்து குற்றச்சாடுகளை முன்வைத்துவரும் அமெரிக்காவை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாகவே அமைந்துள்ளது என்று சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

அமெரிக்காவை எச்சரித்த ஜின்பிங்!

விழாவில், சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங், சீனாவின் வளர்ச்சிப் பாதைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி இன்றுவரை எந்த அளவுக்குப் பங்காற்றிவருகிறது என்று குறிப்பிட்டார். மேலும், சீனாவின் வளர்ச்சிக்கு சோஷியலிசமே வழிவகுக்கும். அதை சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக செயல்படுத்திவருகிறது. அதனால், எங்களது ஆளுமையிலோ அல்லது கட்சியிலோ பிளவு ஏற்படுத்த நினைக்கும் எவராயினும் அவர்களது முயற்சி தோற்கடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ``சீனா இதுவரை எந்தவொரு நாட்டின் இறையாண்மையையும் சீர்குலைக்கவோ, அடிமைப்படுத்தவோ எண்ணியதில்லை. அதேபோல், சீனாவின் இறையாண்மைக்கு எதிராகவோ , ஒருமைப்பாட்டைக் குலைக்கவோ, எங்களை அடிமையாக்கவோ நினைப்பவர்களைப் பார்த்துக்கொண்டு சீனா அமைதியாக இருக்காது. அவர்களது தலை சீனர்களின் கேடயமாகக் கட்டி எழுப்பப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் இரும்பு மதில்களில் மோதி அழிக்கப்படும்” என்று ஆவேசமாகம் பேசினார்.

ஜின்பிங்
ஜின்பிங்
Andy Wong

ஹாங்காங், தைவான் உள்ளிட்ட மாகாணங்களில் சீனா தற்போது ஆதிக்கம் செலுத்திவருவது, கொரோனா சர்ச்சைகள், அயல்நாட்டு வர்த்தகம், உளவு பார்த்தல் உள்ளிட்டவற்றில் சீனா - அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் நீடித்துவரும் சூழலில், சீன அதிபரின் பேச்சு அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிடும்விதத்திலேயே அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே தீயாக வெடித்துவரும் அமெரிக்கா - சீனா இடையிலான மோதல் போக்கு இதன் பிறகு மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா
சீனா
Ng Han Guan

ஆரம்பத்தில் வெறும் 100 பேர் கொண்ட சிறிய அமைப்பாக தொடங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது 92 மில்லியன் உறுப்பினர்களைக்கொண்ட மாபெரும் கட்சியாக சீனாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துவருகிறது. ஏழை நாடாக இருந்த சீனா, மாவோவின் காலத்தில் மெல்ல மெல்ல வளர்ந்து நடுத்தர பொருளாதாரத்தை ஈட்டும் நிலைக்கு வந்தது. மாவோ மறைவுக்குப் பிறகு அதிபர் நாற்காலியில் அமர்ந்த டெங் சியோ பிங் அதுவரை சீனாவில் இல்லாத அந்நிய முதலீட்டுக்கு விதைபோட்டார். சீனாவின் பொருளாதாரம் உச்சத்துக்குச் சென்றது. சீனா பெரும் வல்லரசு நாடாக உருவெடுத்து நின்றது. அதேவேளையில், டெங் சியோ பிங்கின் செயல்பாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு முரண்பாடு ஏற்பட்டதால் அவரை எதிர்த்து குரல் கொடுத்தனர். ஒருகட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்று திரண்டு பீஜிங்கின் தியானென்மென் சதுக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்தபோது, அன்று அரசால் ஜனநாயகத்துக்கான குரல்கள் அடியோடு நசுக்கப்பட்டன என்பதை வரலாற்றின் பக்கங்கள் சீனாவின் பெரும் மனிதகுலப் படுகொலையாக காட்சிப்படுத்துகின்றன. சீனாவில் இன்றுவரை ஜனநாயகம் அடிபணிந்தே இருக்கிறது என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு