Published:Updated:

30 நிமிடங்களில் அமெரிக்காவைத் தாக்கும்... டாங்ஃபெங் ஏவுகணையைக் காட்டி அச்சுறுத்திய சீனா!

'சீன மக்கள் மற்றும் சீன நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்துநிறுத்த யாராலும் முடியாது'.

டாங்ஃபெங் ஏவுகணை
டாங்ஃபெங் ஏவுகணை

சீனாவின் தேசிய தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, அந்த நாட்டில் ஆட்சியில் அமர்ந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 1949-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, சீனாவில் மாசே துங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்த ஆண்டுக்கான தேசிய தினம், பீஜிங் நகரில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில், சீனாவின் நவீன ஆயுதங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அதில், சீனாவின் அதி நவீன ஏவுகணை DF-41( Dongfeng-41) குறிப்பிடத் தக்கது.

சீன அதிபர் ஜின் பிங்
சீன அதிபர் ஜின் பிங்

இந்த ஏவுகணை, 15,000 கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கக் கூடியது. இதைக்கொண்டு 30 நிமிடங்களில் அமெரிக்காவைத் தாக்க முடியும். அணு ஆயுதம் உட்பட 10 வகையான ஆயுதங்களை இது சுமந்து செல்லக்கூடியது. 2,500 கிலோ வெடிபொருள்களைச் சுமந்துசெல்லும். 16 சக்கரங்கள்கொண்ட பிரத்யேக வாகன லாஞ்சரில் இருந்து இதை ஏவ முடியும். இந்த ஏவுகணையைக் கொண்டு, உலகின் எந்தப் பகுதியையும் தாக்க முடியும் என்று சீனா ஏற்கெனவே கூறியுள்ளது. DF-41 மட்டுமல்லாமல், சீனாவின் பல லாங் ரேஞ்ச் ஏவுகணைகளும் அணிவகுப்பில் பங்கேற்றன.

தியான்மென் சதுக்கத்தில் நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், 15,000 சீன ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். 160 போர் விமானங்கள், டாங்குகள், பல விதமான ஏவுகணைகளும் அணிவகுப்பில் கலந்துகொண்டன.

சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சக்தி, உலகில் எவருக்கும் இல்லை.
சீன அதிபர் ஜின்பிங்

அதிபயங்கர ஆயுதங்களை சீனா, இப்படி பொதுப்படையாக பார்வைக்கு வைத்தது இதுவே முதன்முறை. சீன அதிபர் ஸி ஜின்பிங், திறந்தவெளி காரில் ஊர்வலமாக வந்தார். தன் உரையின்போது, ''சீன மக்கள் மற்றும் சீன நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது'' என்றார்.