Published:Updated:

`நேரத்துடனான போராட்டம்; சொன்ன தேதிக்கு முன்னரே முடிப்பு!' - தயாரானது சீனாவின் `ஃபைர் காட் மவுன்டைன்'

சீன மருத்துவமனை
சீன மருத்துவமனை ( AP )

சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா வைரஸுக்காகப் புதிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அது பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. தற்போது அங்கு உருவாகியுள்ள கொரோனா வைரஸ் மொத்த சீனாவையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். 41,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீன மக்கள் பயத்தின் உச்சத்தில் தங்கள் வீடுகளைவிட்டு வெளியில் வரவும் மறுக்கின்றனர்.

சீன மருத்துவமனை
சீன மருத்துவமனை
AP

முதன்முதலில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுகான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புதிதாக அறிகுறி உள்ளவர்களுக்குப் போதுமான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்பதும் மருத்துவர்களைப் பார்க்கவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதும் அந்நகர மக்களின் முதன்மையான குற்றச்சாட்டாக உள்ளது. வுகான் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை

நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை வழங்க அதே வுகான் நகரில் 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒரே வாரத்தில் கட்டி முடிக்கப்படும் எனக் கடந்த வாரம் சீன அரசு அறிவித்திருந்தது. அவர்கள் கூறியபடியே தற்போது அந்த மருத்துவமனை முழுதாகக் கட்டப்பட்டுவிட்டது. சுமார் 25,000 சதுர மீட்டரில் அனைத்து நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

சீன மருத்துவமனை
சீன மருத்துவமனை
AP

சுமார் 4,000 தொழிலாளர்கள் இணைந்து இரவுபகலாக வேலை செய்து குறிப்பிட்ட தேதியைவிட ஒருநாள் முன்னதாகவே இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணியை முடித்துள்ளனர். நேரத்துடனான போராட்டத்தில் தொழிலாளர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

`செர்னோபில் ஹீரோக்கள்; தற்கொலைப் படை!’ - உயிரைப் பணயம் வைக்கும் சீன மருத்துவர்களின் பயணம் #corona

மின்சாரம், தண்ணீர், மருத்துவ வசதிகள் போன்ற அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இன்று முதல் அந்த மருத்துவமனை செயல்படவுள்ளது. சீன ராணுவத்தைச் சேர்ந்த 1,400 மருத்துவர்கள் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உள்ளனர். இந்த மருத்துவமனைக்கு `ஃபைர் காட் மவுன்டைன்’ (Fire god mountain) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களுக்கு மட்டும் பிரத்யேக சிகிச்சை வழங்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனை இன்று முதல் முழு ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

இதேபோல வுகான் நகரின் மற்றொரு பகுதியில் `தண்டர் காட் மவுன்டைன்’ (Thunder God Mountain) என்ற மற்றொரு மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது. இது 1,600 படுக்கை வசதிகளுடன்கூடியது. வரும் வியாழக்கிழமைக்குள் இந்தக் கட்டடத்தின் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு அதுவும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

China has completed its first emergency hospital to handle the coronavirus in just 10 days....

Posted by Bloomberg Asia on Sunday, February 2, 2020
அடுத்த கட்டுரைக்கு