நாளுக்கு நாள் இந்தியா - சீனா நாடுகளுக்கிடையே, எல்லை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அந்தப் பகுதியில் அசாதாரணமான சூழலே நிலவுகிறது. சீன ராணுவம் அருணாசலப்பிரதேசத்தைத் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடிவருகிறது. இப்போது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமம், சீனா அந்தப் பகுதியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில், அருணாசலப்பிரதேச எல்லைப் பகுதியில் சீனா புதிய வீடுகளைக் கட்டிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், அதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இந்த அறிக்கையை அடுத்து, இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்புகளை இந்தியா எந்தக் காலத்திலும் அனுமதிக்காது என்றும் பதில் கூறியுள்ளது.
2019-ம் ஆண்டு வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில் இந்த கிராமங்கள் இல்லை. சீனா ஒரே வருடத்தில் மட்டும் அருணாசலப்பிரதேச எல்லைப் பகுதியில் நான்கு கிராமங்களைப் புதிதாக உருவாக்கியிருக்கிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``எல்லையில் நடைபெற்றுவரும் செயல்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவருகின்றன. சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாகவே இப்படித்தான் சட்டவிரோதமான கட்டுமானப் பணிகளையும், ஆக்கிரமிப்புகளையும் செய்துகொண்டிருக்கிறது. சட்டவிரோதமான செயல்களை இந்தியா என்றுமே ஏற்காது. இந்தியா தனது கண்டனத்தைத் தொடர்ந்து பதிவு செய்யும்" என்றும்,

``இந்தியா, பாதுகாப்பை வலுப்படுத்தவும், படைகள் துரிதமாகச் செயல்படவும், எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், எல்லைப் பகுதியில் சாலைகள், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன" என்றும் தெரிவித்துள்ளது. இப்போது சீனா புதிதாகக் கட்டியிருக்கும் கட்டுமானம் சர்வதேச எல்லைக்கு 6 கிலோமீட்டர் அருகில் அமைந்துள்ளது. அதேபோல, அங்கு வசிக்கும் மக்கள் யார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.