Published:Updated:

இலங்கையை வைத்து இந்தியாவைச் சுற்றிவளைக்கும் ‘கப்பல்’ அரசியல்... என்ன நடக்கிறது?!

இந்தியாவைச் சுற்றிவளைக்கும் ‘கப்பல்’ அரசியல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கியபடி நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் `பி.என்.எஸ் தைமூர்' போர்க்கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிலைகொண்டிருக்கிறது.

இலங்கையை வைத்து இந்தியாவைச் சுற்றிவளைக்கும் ‘கப்பல்’ அரசியல்... என்ன நடக்கிறது?!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கியபடி நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் `பி.என்.எஸ் தைமூர்' போர்க்கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிலைகொண்டிருக்கிறது.

Published:Updated:
இந்தியாவைச் சுற்றிவளைக்கும் ‘கப்பல்’ அரசியல்

இலங்கையை வைத்து சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான சித்து வேலைகளை கப்பல் மூலமாகக் காட்டத் தொடங்கியிருக்கின்றன. சீனாவின் `யுவான் வாங்-5' உளவுக்கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கியபடி நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் `பி.என்.எஸ் தைமூர்' போர்க்கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிலைகொண்டிருக்கிறது. இந்த இரண்டு கப்பல்களையும் இந்தியா மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. என்னதான் நடக்கிறது இந்திய கடல் எல்லையில்?

இலங்கை வரும் சீன உளவுக் கப்பல்
இலங்கை வரும் சீன உளவுக் கப்பல்

சீன உளவுக்கப்பல்:

கடந்த ஜூலை 30-ம் தேதி இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நளின் ஹெராத், ``சீனாவின் யுவான் வாங் கப்பல் ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகிறது. அந்தக் கப்பலை 17-ம் தேதி வரை அங்கேயே நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்திருக்கிறது. அங்கிருந்து செயற்கைக்கோள் கட்டுப்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளும்’’ என்று கூறினார். இதற்கு இந்திய தரப்பில் கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

காரணம், இலங்கைக்கு வரும் சீன உளவுக்கப்பல் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை, செயற்கை கோள்களை கண்டறியும் வசதிகள் என அதிநவீன தொழில்நுட்களைக் கொண்டது. முக்கியமாக, அது நிலைகொண்டிருக்கும் இடத்திலிருந்து சுமார் 750 கி.மீ தூரத்திலுள்ள இடங்களை உளவு பார்க்க முடியும். அப்படிப்பார்த்தால் இலங்கைக்கு அருகில் இருக்கும் தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் முக்கிய இடங்களை வேவுபார்க்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஶ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், துறைமுகங்கள், ராணுவப் படைத்தளங்களை ரகசியமாக உளவுபார்க்கக்கூடும். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமையும். எனவே, இலங்கைக்கு சீன உளவுக்கப்பல் வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா - இலங்கை
இந்தியா - இலங்கை

ஆனால், திட்டமிட்டபடி சீனாவின் உளவுக்கப்பல் இலங்கையை நோக்கி முன்னேறியது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக, சீன உளவுக்கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வருவதை ஒத்தி வைக்கவேண்டும் என இலங்கை அரசு சீனாவுக்கு திடீர் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து `யுவான் வாங் கப்பல் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இலங்கைக்கு செல்லும் பாதையிலிருந்து திரும்பி மீண்டும் சீனாவை நோக்கி நகர்ந்தது. ஆனால், ஆகஸ்ட் 10-ம் தேதி மீண்டும் இலங்கையை நோக்கி யூடர்ன் செய்தது' என நார்வே நாட்டைச் சேர்ந்த கடல்சார் புலனாய்வு நிறுவனமான மரிடைம் ஆப்டிமா (Norway-based industrial maritime intelligence firm Maritime Optima) தனது இணையத்தில் செய்தி வெளியிட்டது. அதாவது, `ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மூன்று நாள்களில் மூன்றுமுறை தனது பாதையை யுவான் வாங் கப்பல் மாற்றியிருக்கிறது' என அந்த நிறுவனம் தெரிவித்தது.

அம்பாந்தோட்டை துறைமுகம்
அம்பாந்தோட்டை துறைமுகம்

இதைத் தொடர்ந்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ``இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் கவனமாக கண்காணிக்கிறது. அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது" என்று தெரிவித்தார். அதேசமயம், சீனாவின் வெளியுறவு அமைச்சகம், ``சீனாவின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியாகப் பார்த்து அறிக்கை வெளியிடுவார்கள். சாதாரண, சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள்" எனத் தெரிவித்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடையவேண்டிய சீனக்கப்பல், இலங்கை துறைமுக அதிகாரிகளின் உரிய அனுமதி இல்லாததால் மூன்று நாள்களாக அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 600 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சீன உளவுகப்பலுக்கு இலங்கை அரசு இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அனுமதி வழங்கியிருக்கிறது. அந்தக் கப்பல் ஆகஸ்ட் 17 முதல் 22-ம் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த அப்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கடனுதவி மூலம் கட்டப்பட்டது. பின்னர் கடனை அடைக்க முடியாத இலங்கை அரசாங்கம் கடந்த 2017-ம் ஆண்டு சீன அரசு நிறுவனத்துக்கு சுமார் 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டது.

இந்தியா இலங்கை சீனா
இந்தியா இலங்கை சீனா

பாகிஸ்தான் போர்க்கப்பல்:

சீன உளவுக்கப்பல் ஒருபுறமிருக்க பாகிஸ்தானின் `பி.என்.எஸ் தைமூர்' கப்பலும் இலங்கை வந்திருப்பது இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவில் கட்டமைக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கருவிகள், லேசர் உதவியுடன் இயங்ககூடிய ஏவுகணைகள் என சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கிறது. சீனாவின் ஷாங்காய் நகர கப்பல் கட்டும் தளத்திலிருந்து பாகிஸ்தானின் கராச்சி கடற்படை தளத்துக்கு புறப்பட்ட இந்த போர்கப்பல், செல்லும் வழியில் கம்போடியா, மலேசியா நாடுகளின் கடற்படையுடன் போர்பயிற்சியில் ஈடுபட்டது. அதன்பின்னர் கப்பலை மலேசியாவிலிருந்து வங்கதேசத்தில் உள்ள சட்டோ கிராம் துறைமுகத்துக்கு கொண்டுசெல்ல பாகிஸ்தான் அரசு முயற்சி செய்தது.

பி.எஸ்.என் தைமூர் கப்பல்
பி.எஸ்.என் தைமூர் கப்பல்

ஆனால், இந்தியாவுடன் நட்புறவில் இருக்கும் வங்கதேச அரசாங்கம், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், தைமூர் கப்பலுக்கு அனுமதி மறுத்தது. அதையடுத்து, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் பாகிஸ்தான் அரசு அனுமதி கேட்டது. இதற்கு இலங்கை அரசு தரப்பில் அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 12-ம் தேதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்த பாகிஸ்தானின் பி.என்.எஸ் தைமூர் கப்பல் 15-ம் தேதி வரை துறைமுகத்தில் நிற்கும். மேலும், கம்போடியா, மலேசிய கடற்படையுடன் போர்பயிற்சியில் ஈடுபட்டதைப்போலவே இலங்கை கடற்படையுடனும் போர்பயிற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, ஆகஸ்ட் 15-ம் தேதி பாகிஸ்தானின் கராச்சிக்கு தனது பயணத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல், இலங்கை பலிகடா:

``ஒரே நேரத்தில் சீனாவின் யுவான் வாங் உளவுக்கப்பல், பாகிஸ்தானின் பி.எஸ்.என் தைமூர் போர்க்கப்பல் ஆகிய இரண்டும் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் இலங்கைக்கு வருகை தந்திருப்பது பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அரசியல், பொருளாதாரம், போராட்டம் என பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவரும் இலங்கை, அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு இடையேயான சண்டை சச்சரவில், எந்த பக்கம் நிற்பது, என்ன முடிவு எடுப்பது எனத்தெரியாமல் பலிகடாவாக சிக்கியிருக்கிறது" என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்றுநோக்குபவர்கள்.